கிருஷ்ண பஜன் பாடல்களை பாட மறுத்த லதா மங்கேஷ்கர்

By வெ.சந்திரமோகன்

‘மீரா’ இந்திப் படத்தில், கிருஷ்ண பஜனைப் பாடல்களைப் பாட லதா மங்கேஷ்கர் மறுத்துவிட்ட சுவாரசியமான செய்தி வெளியாகியிருக்கிறது. கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி அந்தப் படம் பற்றி நினைவுகூர்ந்திருக்கும் ஹேமமாலினி, லதா மங்கேஷ்கர் தனக்காகப் பாடாதது குறித்து ஆதங்கத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.

‘மீரா’ திரைப்பட போஸ்டர்

புகழ்பெற்ற பாடலாசிரியரும் திரைக்கதை ஆசிரியருமான குல்ஸார் இயக்கிய ‘மீரா’ (1979) திரைப்படத்தில் வினோத் கன்னா, ஹேமமாலினி, ஷம்மி கபூர் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். அந்தப் படத்தில் பக்த மீரா பாடும் பஜன் பாடல்களைப் பாடுமாறு அழைப்பு வந்தபோது, அதை ஏற்க லதா மங்கேஷ்கர் மறுத்துவிட்டார். ஏற்கெனவே தன் சகோதரர் ஹ்ருதயநாத் மங்கேஷ்கரின் இசையில் ஒரு இசை ஆல்பத்தில் கிருஷ்ண பஜன் பாடல்களைப் பாடியிருந்ததால், மீண்டும் அதேபோன்ற பாடல்களைப் பாட தனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிட்டாராம் லதா மங்கேஷ்கர்.

அந்தப் படத்துக்கு லக்‌ஷ்மிகாந்த் - பியாரேலால் ஜோடிதான் இசையமைப்பதாக இருந்தது. லதா மங்கேஷ்கர் பாடவில்லை என்று தெரிந்ததும், இரட்டையர்கள் அப்படத்திலிருந்து விலகிக்கொண்டனராம். இதையடுத்து பண்டிட் ரவிசங்கர் அப்படத்துக்கு இசையமைத்தார்.

இதுகுறித்து கூறியிருக்கும் ஹேமாமாலினி, “நான் கிருஷ்ணரின் பரம பக்தை. மீரா கதாபாத்திரத்தில் நடிப்பது என் கனவாக இருந்தது. லதாஜியின் குரல் எனக்கு முதல் தெரிவாக இருக்கும். ஆனால், நான் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொண்ட பிறகும் அவர் பாட மறுத்துவிட்டார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

சரி, லதா மங்கேஷ்கருக்குப் பதிலாகப் பாடியது யார் என்று கேட்கிறீர்களா? நம் வாணி ஜெயராம்தான்!

அந்தப் படத்தின் ‘மேரே தோ கிரிதர் கோபால்’ பாடலைப் பாடியதற்காக, வாணி ஜெயராமுக்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான பிலிம்ஃபேர் விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE