என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in
மலையாளத் திரையுலகில் தவிர்க்க முடியாத ஆளுமை மம்முட்டி. அவரது மகன் துல்கர் சல்மானும் இன்றைக்குத் திரையுலகில் தனக்கான இடத்தைப் பிடித்துவிட்டார். ஆனால், இப்போதும்கூட ஏராளமான இளம் ரசிகர்களின் இதயம் கவர்ந்த நாயகனாகத் தொடர்கிறார் மம்முட்டி. ‘மெகா ஸ்டார்’ எனக் கேரளம் கொண்டாடும் மம்முட்டி, தன் திரைப்பயணத்தில் 50 ஆண்டுகளைத் தொட்டிருக்கிறார்.
அறிமுகம் தந்த ‘அனுபவம்’
மம்முட்டியின் முதல் மலையாளப் படமான ‘அனுபவங்கள் பாலிச்சகள்’ (1971) திரைக்கு வந்து, இந்த ஆகஸ்ட்டுடன் அரை நூற்றாண்டு ஆகிவிட்டது. கேரளத்தில் கரோனா பெருந்தொற்று ஏறுமுகத்தில் சென்றுகொண்டிருப்பதால், நேரடிக் கொண்டாட்டங்களை விடவும் சமூக வலைதளங்களின் வழியே தங்கள் ஆஸ்தான நாயகனான மம்முட்டியைக் கொண்டாடித் தீர்த்துவருகின்றனர் மலையாளிகள்.
‘அனுபவங்கள் பாலிச்சகள்’ படத்தின் மூலம் மம்முட்டியைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியவர், பாலக்காட்டைச் சேர்ந்த இயக்குநர் சேதுமாதவன். முதல் படத்தில் தலைகாட்டியபோது மம்முட்டிக்கு 21 வயது. அந்தக் கறுப்பு வெள்ளைப் படத்தில் ஒரு துணை நடிகராகத்தான் அறிமுகமானார் மம்முட்டி. படத்தில் அவருக்கு வசனம்கூட இல்லை. மம்முட்டியை அறிமுகப்படுத்திய சேதுமாதவன்தான் கமல்ஹாசனை முதன்முதலில் கதாநாயகனாக உயர்த்தியவர். மலையாளத்தில் அவர் இயக்கிய ‘கன்னியாகுமரி’ திரைப்படம்தான் கமல்ஹாசன் நாயகனாக நடித்த முதல் படம்!
1971-ல் திரைக்கு அறிமுகமான மம்முட்டியின் காலம் சூடிபிடித்தது என்னவோ 1980-களின் பிற்பகுதியில்தான்! இந்தி, தமிழ், கன்னடம் உட்பட பல்வேறு மொழிகளிலும் சேர்த்து இதுவரை 400-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். தன் முதல் பட நினைவுகளைப் பகிர்ந்திருக்கும் மம்முட்டி, “அந்தப் படத்தில் நான் சின்ன ரோலில்தான் நடித்தேன். ரசிகர்களால் கொண்டாடப்படும் கேரக்டரும் அல்ல அது. அதேநேரம் மலையாளத்தின் சீனியர் நடிகர் சத்யன் அந்தப் படத்தில் நடித்திருந்தார். படப்பிடிப்பின் ஓய்வுநேரத்தில் அவர் படுத்திருந்தபோது அவருக்கே தெரியாமல் அவரது காலைத் தொட்டு வணங்கியிருக்கிறேன்” என உருக்கமாகப் பதிவுசெய்திருக்கிறார்.
கறுப்பு மேலங்கி டூ கலர் உடை
ஆழப்புழா மாவட்டத்தில் முகம்மது குட்டியாகப் பிறந்தவர், சினிமாவுக்காகத் தன் பெயரை மம்முட்டி என மாற்றிக்கொண்டார். வழக்கறிஞர் தொழில் மீதான ஆர்வத்துடன் சட்டம் படித்தவர் மம்முட்டி. எர்ணாகுளம் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த முகம்மது குட்டியிடம் வழக்குக்காக வந்த மனுதாரர் ஒருவர்தான், “வக்கீலே! நீ நடிக்கப் போகலாம். உனக்கு அதுக்கான முகவெட்டு இருக்கு” எனச் சொல்லியிருக்கிறார். அந்த வார்த்தை தூங்கவிடாமல் செய்ததுதான், மம்முட்டியைக் கறுப்பு மேலங்கியிலிருந்தபடியே சினிமாவில் கலர் ஆடைகளையும் சூட்டவைத்தது. ஆம், வழக்கறிஞராகப் பணிபுரிந்தபடியே சினிமாவில் இரண்டு ஆண்டுகள் நடித்துக்கொண்டிருந்தார் மம்முட்டி.
ஒருகட்டத்தில் வழக்கறிஞர் தொழில் மீதான ஆர்வத்தை சினிமா ஆர்வம் கபளீகரம் செய்துகொள்ள, முழு நேரமும் சினிமாவில் கவனம் செலுத்தத் தொடங்கினார். அதற்கு 1980-ல் வெளியான ‘வில்கனுண்டு ஸ்வப்னங்கள்’ படமே காரணமாக அமைந்தது. அந்தப் படத்தில் மம்முட்டியின் நடிப்பு வெகுவாகப் பேசப்பட, மலையாளத் திரையுலகில் அப்போதிருந்தே கோலோச்சத் தொடங்கினார். அந்தக் காலகட்டத்தில் ஓய்வெடுக்கக்கூட நேரமின்றி ஓடிக் கொண்டே இருந்தார் மம்முட்டி.
1982-ல் மட்டும் 24 படங்களில் நாயகனாக நடித்த மம்முட்டி, 1984 முதல் 1990 வரை ஆண்டுக்கு 33 படங்களுக்குக் குறையாமல் நடித்தார். திரையரங்கில் இருந்து ஒரு மம்முட்டி படம் வெளியேறினால், புதிய மம்முட்டி படம் வருகிறது என அர்த்தம் சொல்லும் அளவுக்கு அந்தக் காலம் அவருக்குக் கைகொடுத்தது. 1951-ல் பிறந்த மம்முட்டி இப்போது 70 வயதை நெருங்குகிறார். ஆனால், இன்னும்கூட முகத்திலும், உடலிலும் வயோதிகம் எட்டிப் பார்க்கவில்லை. திரைப்படக் காட்சிகளுக்காகப் பீடி பிடித்ததைத் தாண்டி, தன்னிடம் எந்தக் கெட்டப் பழக்கமும் இல்லாததுதான் தன் இளமைக்குக் காரணம் எனச் சொல்வார் மம்முட்டி.
லாலேட்டனின் நண்பர்
மலையாள சினிமாவைப் பொறுத்தவரை மம்முட்டி ரசிகர்களும், மோகன்லால் ரசிகர்களும் பரஸ்பரம் பகைமை காட்டத்தான் செய்கிறார்கள். ஆனால், மம்முட்டி, மோகன்லால் இடையே ஆழமான நட்பு இருக்கிறது. ரஜினியும், கமலும் ஆரம்ப காலங்களில் சேர்ந்து நடித்திருப்பதுபோல் மம்முட்டியும், மோகன்லாலும் 50 படங்களில் சேர்ந்து நடித்துள்ளனர்.
‘படையோட்டம்’ முதல் ‘ட்வென்டி 20’ வரை அவை அத்தனையும் அசுர வெற்றி பெற்றவை. ஒன்பது படங்களில் இரட்டைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மம்முட்டி, சினிமாவுக்காக ரொம்பவும் மெனக்கிடுபவர். சர்ச்சைகளில் சிக்காத நடிகர் எனவும் பெயர் எடுத்தவர். மலையாள சினிமாக்களில் வட்டார மொழியை அதிகம் பிரயோகித்ததும் அவர்தான். வயதே தெரியாத சூப்பர் ஸ்டார் என மலையாள ரசிகர்களால் உச்சிமுகர்ந்து கொண்டாடப்படும் மம்முட்டியை, அவரது ரசிகர்கள் ‘மம்முக்கா’ என்று செல்லமாக அழைக்கின்றனர்.
யதார்த்தமானவர்
நடிகர், தயாரிப்பாளர், 4 முறை தேசிய விருது பெற்றவர், பத்மஸ்ரீ பட்டத்தால் அலங்கரிக்கப்பட்டவர்... இவை மட்டுமே மம்முட்டியின் அடையாளங்கள் இல்லை. கலை உலகைத் தாண்டி எளிய மக்களின் மீதான அவரது கரிசனம் அளப்பரியது. முகஸ்துதி பேசி வாய்ப்பு தேடிக்கொள்ளும் மனோநிலைக்கும் எதிரானவர் மம்முட்டி. “ரஜினியுடன் ‘தளபதி’ படத்தில் சேர்ந்து நடித்த அனுபவத்தை எப்படி உணர்ந்தீர்கள்?” என மலையாள ஊடகம் ஒன்று கேட்க, “அந்தப் படத்துல ரஜினி என்னோட சேர்ந்து நடிச்சுருக்காருன்னு நீங்க ஏன் புரிஞ்சுக்கல? நடிச்சுருக்கோம். அதுக்கு மேல உணர்வதற்கு என்ன இருக்கு?” என திருப்பிக் கேட்டார் மம்முட்டி. இந்த யதார்த்தம்தான் மம்முட்டியின் பலம்!
மனித நேயர்
மம்முட்டி அங்கம் வகிக்கும் சேவை அமைப்புகள் கணக்கில் அடங்காதவை. அவற்றின் சேவைகள் கேரளம் முழுவதும் நீண்டுவிரிகின்றன. தீவிர புற்றுநோயாளிகளின் சிகிச்சைக்குக் கைகொடுக்கும் வலி மற்றும் நோய் தணிப்பு மையத்தின் முக்கியப் புரவலராக உள்ளார் மம்முட்டி. கோழிக்கோடு பகுதியில் உள்ள இந்த மையம் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான புற்றுநோயாளிகளின் வலிநீக்கியாக உள்ளது. சமூகசேவைத் திட்டமான ஜீவன் ஜோதியின் தூதுவராகவும் உள்ளார் மம்முட்டி. குழந்தைத் தொழிலாளர்கள் ஒழிப்பு, குழந்தைகள் பிச்சையெடுத்தல் தவிர்ப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட இந்தியத் தெருமுனை இயக்கத்தின் தூதுவராகவும் இருக்கிறார். மம்முட்டியும், அவரது ரசிகர்களும் சேர்ந்து ஆண்டுக்கு ஆயிரம் ஏழைகளுக்கு இலவசக் கண் அறுவை சிகிச்சைக்கு உதவுகின்றனர். இதுபோக ஆண்டுக்கு ஒருமுறை தன் சொந்த நிதியிலிருந்து ஏழை, எளிய மக்களுக்கு உதவ ‘கேர் அண்ட் ஷேர்’ எனும் பெயரில் அறக்கட்டளையைத் தொடங்கி, அதன் மூலம் தன் சம்பாத்தியத்தின் பெரும் பகுதியைச் சேவையாக வழங்கிவருபவர் மம்முட்டி.
இதையெல்லாம்விட முக்கியமானது, மம்முட்டியின் கலைப் பயணம் இளைஞர்களுக்கானது என்பதுதான். அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட இளம் இயக்குநர்கள் மலையாளத் திரையுலகில் அதிகம். மம்முட்டி முதல்வராக நடித்து அண்மையில் வெளிவந்த ‘ஒன்’ திரைப்படத்தை இயக்கிய சந்தோஷ் விஸ்வநாத்தும் ஓர் அறிமுக இயக்குநர் தான்! இப்படிப்பட்ட பரந்த மனம் கொண்ட கலைஞரான மம்முட்டி எல்லாருக்குமானவராக இருப்பதில் ஆச்சரியம் இல்லைதானே!