ஆர்ஜே ரோல் பண்றது ரொம்பக் கஷ்டம்!- நக்‌ஷத்ரா ஸ்ரீனிவாஸ்

By காமதேனு

பகத்பாரதி
readers@kamadenu.in

சென்னையில் ஷூட்டிங் முடித்து ஹைதராபாத்துக்கு அவசர, அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார், நக்‌ஷத்ரா ஸ்ரீனிவாஸ். ஸீ தமிழில் ஒளிபரப்பாகும் ‘என்றென்றும் புன்னகை’ தொடரில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கும் அவரிடம், பயணத்துக்கு நடுவே காமதேனு மின்னதழுக்காகப் பேசினோம்.

உங்களைப் பற்றி..?

பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூரு. கல்லூரியில் படிக்கும் போது நிறைய கலை நிகழ்ச்சிகள்ல கலந்துட்டு இருக்கேன். அப்படி ஒரு டான்ஸ் நிகழ்ச்சில கலந்துகிட்டப்போ நண்பர் ஒருத்தர் மூலமா கன்னட சீரியலுக்கு ஆடிஷன் நடக்கிற தகவல் தெரிஞ்சுக்கிட்டு அதில் கலந்துக்கிட்டேன். அதன் பிறகு தான் என்னுடைய மீடியா கெரியர் ஆரம்பம் ஆச்சு.

கன்னடத்தில் அறிமுகமாகி தமிழ் சீரியல் உலகில் நுழைந்த கதையைச் சொல்லுங்க?

கன்னட சீரியலில் நடிச்சிட்டு இருக்கும்போதே தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்துட்டே இருந்துச்சு. ஆனா, சினிமால நடிக்கணும்னு இருந்த ஆர்வமும், சில படங்களில் கமிட் ஆகியிருந்த காரணத்தாலும் எதையும் ஏத்துக்க முடியலை. அதே மாதிரி தெலுங்கு சீரியல்கள்ல நடிக்கவும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்துச்சு. ஒரு கட்டத்துல அதை ஏத்துக்கிட்டேன். அப்படியே தமிழ் சீரியல் வாய்ப்புகளையும் ஏத்துக்கிட்டேன். அப்படி முதல்ல கமிட் ஆன சீரியல் தான் சன் டிவியில் ஹிட் ஆன ’மாயா’. அடுத்து கலர்ஸ் தமிழில் ‘சிவகாமி’ சீரியலில் ஐபிஎஸ் அதிகாரியா நடித்தேன். இப்போது ஸீ தமிழில் ‘என்றென்றும் புன்னகை’யில் ஆர்ஜே-வாக நடிச்சிட்டு இருக்கேன். தெலுங்கிலும் தொடர்ந்து நடிச்சிட்டு இருக்கேன்.

விதவிதமான கேரக்டர்ஸுக்கு உங்களை எப்படி தயார் படுத்திக்கிறீங்க?

ஆர்ஜே-வாக நடிக்க போகும்போது, ஈஸியா பண்ணிடலாம்னு நினைச்சுத்தான் போனேன். ஆனா ஷூட் போனதும் தான் தெரிஞ்சது ஆர்ஜே மாதிரி சரளமா பேசறது எவ்வளவு கஷ்டம்னு. நைட்லாம்கூட பிராக்டிஸ் பண்ணிதான் அந்த கேரக்டர்குள்ள செட் ஆனேன். இயல்பாவே ரொம்ப மெதுவா பேசுற சுபாவம் எனக்கு. ஆனா ஆர்ஜே கேரக்டர் பண்ண ஆரம்பிச்ச பிறகு, அதுக்கான தடமே இல்ல. அதே மாதிரி ஐபிஎஸ் கேரக்டர்ல நடிக்கணும்னு சொன்னதும், டெய்லி யாரையாவது அடிக்கிற மாதிரி இருக்குமே...  இதெல்லாம் நமக்கு செட் ஆகுமானு முதல்ல தயக்கம் இருந்தது. என்னோட தயக்கத்தைப் புரிஞ்சுக்கிட்டு அந்த டீம் நல்லா எனக்கு சப்போர்ட் பண்ணி, ட்ரெய்ன் பண்ணாங்க. அதுதான் அந்தக் கேரக்டருடைய சக்சஸ்னு நினைக்கிறேன்.

கிட்டத்தட்ட 8 வருஷமா மூன்று மொழிகள்ல நடிச்சிட்டு இருக்கீங்க... வீட்டில் எந்த அளவுக்கு சப்போர்ட்டா இருக்காங்க?

ஃபேமிலி சப்போர்ட் முழுசா இருக்கு. அம்மா எனக்காக, அவங்க பார்த்திட்டு இருந்த வேலையையே விட்டுட்டாங்க. அப்பாவுக்கு சின்ன வயசுல இருந்தே மேடை நாடகங்கள்ல நடிக்கிறதுல ரொம்பவே ஆர்வம். சினிமாவில் நடிக்க கூட முயற்சி பண்ணிருக்காங்க. ஆனா, அதுக்குள்ள கவர்மென்ட் வேலை கிடைச்சிட்டதால அந்த ஆசைகளையெல்லாம் கைவிட்டுட்டாங்க. அதனால, அவங்களோட கனவை நான் நிறைவேற்றிட்டதா சொல்லி அடிக்கடி பாராட்டிட்டே இருப்பாங்க. என்னோட உண்மையான பெயர் அஞ்சனா ஸ்ரீனிவாஸ் தான். அம்மா தான் அவங்க நம்பிக்கைக்காக நியூமராலஜிப்படி என் பெயரை நக்‌ஷத்ரா ஸ்ரீனிவாஸ்னு மாத்திட்டாங்க.

தமிழ் வெள்ளித்திரையில் எப்போது எதிர்பார்க்கலாம்?

முன்னாடியே சொன்ன மாதிரி சினிமாவில் நிறைய படங்கள் நடிக்கணுங்கிறது தான் என்னோட ஆசையா இருந்தது. ஆனால், அடுத்தடுத்து சீரியல் பண்ண ஆரம்பிச்ச பிறகு இதுவே நல்லா இருக்கேனு தோண ஆரம்பிச்சிட்டுது. இருந்தாலும் சினிமா வாய்ப்புகள் வந்துட்டே தான் இருக்கு. மனசுக்கு நெருக்கமான கேரக்டர்ஸ்கூட சில நேரங்களில் வந்துச்சு. இருந்தாலும், ஒரே நேரத்தில் தமிழ் - தெலுங்கு சீரியல்களில் நடிக்கிறதால அதைவிட்டுட்டு சினிமாவில் நடிக்க நேரம் ஒதுக்கமுடியல.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE