பயானகா / பயம் என்கிற உணர்வை ரசத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள கதை. ரதீந்திரன் பிரசாத் இயக்கியுள்ளார்.
பாண்டிச்சேரில் ஒரு வசதியான வீட்டில் இருக்கிறார் பார்வதி திருவோத்து. அவருடைய கணவர் ஏதோ பெரிய தொழிலதிபர் என்பது நமக்குச் சொல்லப்படுகிறது. பார்வதியைப் பார்க்க வருகிறார் சித்தார்த். தன் நிறுவனத்திலிருந்து கையெழுத்து வாங்க வந்திருக்கும் வேலை ஆள் என்று நினைக்கிறார் பார்வதி. ஆனால் உண்மையில் சித்தார்த் யார், எதற்காக அங்கு வந்தார் என்பது தான் இந்தக் கதை.
நடிப்பிலும், உருவாக்கத்திலும் சிறப்பாக அமைந்திருக்கும் உள்ள படம் இது. இந்தக் கதையின் தொடக்கத்தில் வரும் படத்தின் தலைப்பு வடிவமைக்கப்பட்டிருக்கும் விதமே மிக நேர்த்தியாக, அழகாக இருக்கிறது. காட்சிகளின் அழகியலுக்கு விராஜ் சிங் தனது ஒளிப்பதிவின் மூலம் இன்னும் அழகு சேர்த்திருக்கிறார்.
அடுத்து இந்தக் கதைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இஸ்லாமியப் பின்னணி தனித்துவமாக இருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கை முறை, ப்ளாஷ்பேக்கில் காட்டப்படும் வீடுகளின் அமைப்பு, சூனியம் வைக்கும் கதாபாத்திரம், அவர் இருக்கும் இடம், அவர் பேசும் வசனங்கள், ரூமி கவிதைகள் என்று காட்சியமைப்பாகவும், திரைக்கதையாகவும் ஒரு புதிய அனுபவத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.
சித்தார்த், பார்வதி இருவருமே அருமையாக நடித்திருந்தாலும், இவர்களின் முழு நடிப்புத் திறனுக்கான இடம் இதில் இல்லை. ஃப்ளாஷ்பேக் காட்சியில் வரும் அம்மு அபிராமி நன்றாக நடித்துள்ளார். முக்கியமாக ஹுஸைன் ஹோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள ராஜேஷ் பாலச்சந்திரனின் நடிப்பு மனதில் பதிகிறது.
ஏதோ ஒரு பெரிய விஷயத்தைச் சொல்லப் போகிறார்கள் என்று கட்டமைத்துக் கொண்டே வருகிறார்கள். இப்படிக் கடைசிக் கட்டம் வரைக்கும் கதை நகர்த்திய விதத்தில் இயக்குநராக ரதீந்திரன் பிரசாத் ஜெயித்துள்ளார். ஆனால், அது உடையும் இடம் அவ்வளவு நேரம் உருவாக்கப்பட்ட எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யவில்லை. இது தான் இந்தக் கதையின் பிரச்சினை.
ஒரு துரோகம், அதை மறைக்க எடுத்த முயற்சிகள், ஃப்ளாஷ்பேக் காட்சியில் ஒவ்வொரு விஷயமாக வெளிவரும் விதம், அமானுஷ்யம் என அனைத்தும் இருந்தும், படம் முடியும் போது இவ்வளவு தானா என்றாகிவிடுகிறது. உருவாக்கத்தில் தரமான படம்.