ஓ.டி.டி. உலா- நவரசா: பேசும் சிறுகதைகள்

By காமதேனு

எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

தனது நண்பர் ஜெயேந்திராவுடன் இணைந்து இயக்குநர் மணிரத்னம் தயாரித்து வழங்கும் ஆந்தாலஜி படமான ‘நவரசா’, நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி உள்ளது. தமிழின் கவனிக்கத்தக்க நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் கூட்டுப் பங்களிப்பில், உணர்வுக்குத் தலா ஒரு கதையென 9 ரசங்களைப் பிரதிபலிக்கும் 9 குறும்படங்களின் தொகுப்பாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது.

1) ஆந்தாலஜியின் முதல் படைப்பான ‘எதிரி’, கருணை குறித்துப் பேசுகிறது. உரையாடல் ஒன்றின் கசப்பான தருணத்தில் ஒரு கொலை நிகழ்ந்துவிடுகிறது. தவிர்த்திருக்க வேண்டிய குற்றம் என்பதும் அது எந்த வகையிலும் தீர்வாகாது என்பதும் தாமதமாகவே கொலையாளிக்கு உறைக்கிறது. அன்றாட நிகழ்வுகளில் நாம் தவிர்த்தாக வேண்டிய இழப்புகளை ‘எதிரி’ கேள்விக்கு உட்படுத்துகிறது. மணிரத்னம் எழுதியிருக்கும் கதையை பிஜாய் நம்பியார் இயக்கியிருக்கிறார். விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், ரேவதி உள்ளிட்டோரின் முதிர்ச்சியான நடிப்பால் ஆந்தாலஜியின் முக்கியப் படைப்புகளில் ஒன்றாகிறது ‘எதிரி’.

2) ‘நகைக்காத நாளெல்லாம் வீணான நாள்’ என்ற முன்குறிப்புடன் நகைச்சுவை உணர்வைப் பேசுகிறது, ‘சம்மர் ஆஃப் 92’ குறும்படம். பிரியதர்ஷனின் இயக்கத்தில், நெடுமுடி வேணு, ரம்யா நம்பீசன், ஒய்.ஜி.மகேந்திரா எனப் பலர் நடித்துள்ளனர். புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் யோகிபாபு, தான் படித்த கிராமத்துப் பள்ளியின் விழா விருந்தினராகப் பங்கேற்கிறார். விழா மேடையில் தனது பள்ளிக்கூட பசுமை நினைவுகளையும், ஒன்பதாம் வகுப்பில் தொடர்ந்து தோற்றதன் பின்னணியிலான சம்பவங்களை யும், கூடியிருக்கும் மக்கள் ரசித்துச் சிரிக்க பகிர்ந்துகொள்கிறார். நவரசங்களில் சிரிப்பு என்பதைச் சித்தரிப்பதும், பார்வையாளருக்கு உணரவைப்பதும் எவ்வளவு சவாலானது என்பதை இந்தக் குறும்படமே உணர்த்திவிடுகிறது. வறட்சியான நகைச்சுவையுடன் உருவக் கேலி உள்ளிட்ட பல உறுத்தல்களுடன், ஆந்தாலஜியில் சறுக்கிய படைப்புகளில் ஒன்றாகிறது ‘சம்மர் ஆஃப் 92’.

3) வியப்பு உணர்வை விவரிக்கிறது ‘ப்ராஜக்ட் அக்னி’ குறும்படம். விஞ்ஞானி அரவிந்த் சுவாமி, இஸ்ரோ விஞ்ஞானியான நண்பன் பிரசன்னாவை அவசரமாக வீட்டுக்கு வரவழைக்கிறார். காலவெளிப் பயணத்தின் இன்னொரு வடிவத்தில் தொடங்கி அறிவியல் புனைவின் அத்தனை அம்சங்களின் கலவையான தனது கண்டுபிடிப்பின் மேன்மையை நண்பனுக்கு விளக்குகிறார். கூடவே, சொந்த வாழ்க்கையில் அது ஏற்படுத்திய இழப்பையும் சொல்கிறார். அந்தச் சந்திப்பும் அதைத் தொடர்ந்து நிகழும் எதிர்பாரா சம்பவங்களுமே குறும்படம்.

அறிவியல் ஆச்சரியங்களை உள்ளடக்கிய உரையாடலை விட, பூர்ணா தோன்றும் வாழ்வின் ஆதார ஆச்சரியங்களே படத்தின் சிறப்பான அம்சங்களாகின்றன. முழு நீளத் திரைப்படத்துக்கான கதையைக் குறும்படமாகச் சுருக்கியிருக்
கிறார் இயக்குநர் கார்த்திக் நரேன். சிக்கலான கருதுகோள்கள், அறிவியல் விளக்கங்களை ஆங்கிலத்தில் விளக்கும் முயற்சி அயர்வை உண்டாக்கினாலும், கதையின் ஒற்றை வரியில் சுவாரசியமூட்டுகிறது ‘ப்ராஜக்ட் அக்னி’.

4) ‘அருவருப்பு’ ரசத்துக்காக தி.ஜானகிராமனின் ‘பாயாசம்’ கதையை, அதே தலைப்பில் குறும்படமாக்கியிருக்கிறார் இயக்குநர் வசந்த் சாய். காட்சி மொழியில் நகரும் படைப்புக்கு அடித்தளமாக இருக்கும் எழுத்தின் மகத்துவத்தை இந்தக் குறும்படம் உணர்த்துகிறது. மனதில் அடையாளம் காட்டாது வெதும்பும் பொறாமை, அசூயை, அருவருப்பு ஆகியவற்றை வெளிப்
படுத்தும் நிறைவான படைப்பைத் தந்திருக்கிறார் இயக்குநர் வசந்த். டெல்லி கணேஷ், ரோகிணி, அதிதி பாலன் உள்ளிட்டோரின் நடிப்பில் சிறுகதையின் ஆன்மா கெடாது ரசனைக்குரிய ரசத்தைப் பரிமாறுகிறது ‘பாயாசம்’.

5) ‘அமைதி’ என்ற ரசத்தை அதே தலைப்பிலான கார்த்திக் சுப்பாராஜின் குறும்படம் விவரிக்கிறது. அமைதி கெட்டிருந்த ஈழத்தில் கதை நடக்கிறது. போராளிக் குழுவும், ராணுவத் துருப்புகளும் எதிரெதிர் முகாம்களில் தாக்குதலுக்காகக் காத்திருக்கிறார்கள். எதிர் எல்லையில் தான் தவிக்கவிட்டுவந்த தனது ‘தம்பி’யைக் காப்பாற்றுமாறு பாலகன் ஒருவன் போராளிகளிடம் கோருகிறான். அவனது வலியைச் சொந்த அனுபவத்தின் வழியாக உணர முடிந்த ஒரு போராளி, தனது உயிரைப் பணயம் வைத்து சாகசத்தில் இறங்குகிறார். போர்க்களத்தில் அர்த்தம் இழக்கும் அமைதி, அதுகுறித்த வெகுஜனத்தின் ஏக்கம், போர் மூலமே அமைதியை அடைய முயல்வதன் நகைமுரண் உள்ளிட்டவற்றை ‘அமைதி’ விவாதத்துக்கு உள்ளாக்குகிறது. பாபி சிம்ஹா, கௌதம் வாசுதேவ் மேனன், சனந்த் உள்ளிட்டோர் உடன் நடித்துள்ளனர்.

6) ‘சினம்’ எனும் ரசத்தை விவாதிக்கிறது ‘ரௌத்திரம்’ குறும்படம். நடிகர் அரவிந்த் சுவாமி இதில் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். அடித்தட்டுக் குடும்பத்துக்கான பிரச்சினைகள் அச்சுறுத்திய போதும் தாய், தங்கை என அற்புதமான வாழ்க்கையில் லயித்திருப்பவர் ஸ்ரீராம். அப்பகுதியில் லேவாதேவியில் கொழிக்கும் அழகம்பெருமாளிடம் ஸ்ரீராம் தனது பெருஞ்சினத்தைத் தீர்ப்பதுடன் குறும்படம் தொடங்கு கிறது. இன்னொரு திசையிலிருந்து காவல் உயரதிகாரி ரித்விகா தனது பணி நிமித்தம் கட்டுக்கடங்கா சினத்தில் உழல்கிறார். இருவரையும் இணைக்கும் உணர்வுபூர்வ மான கதையில் கீதா கைலாசம், அபிநயா ஸ்ரீ, ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

மிகச் சாதாரணமான கதை, அதைச் சுமப்பவர்களின் அழுத்தமான பின்னணியால் கனம் சேர்க்கிறது. சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவில் அழுக்குத் தெருக்களின் அன்றாடங்களில் தெறிக்கும் அழகு பதிவாகியிருக்கிறது. பின்னணி இசை ஏ.ஆர்.ரஹ்மான் என்ற தகவல் ஆச்சரியமூட்டும் அளவுக்கு பெயரளவிலேயே இருக்கிறது.

7) பயம் என்ற ரசத்தை உணர்த்துகிறது ‘இன்மை’ குறும்படம். சாதாரணப் பழிவாங்கலாக மேலடுக்கில் தோன்றும் கதையில் இஸ்லாமியப் பின்னணி, விநோத நம்பிக்கைகள், அதற்கான வண்ணங்கள் என வித்தியாசம் காட்டுகிறது ‘இன்மை’. ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கிய இந்தப் படத்தில் சித்தார்த், பார்வதி திருவோத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தனக்கான நியாயங்களைக் கொண்டிருக்கும் சவாலான எதிர்மறை வேடத்தில் ஈர்க்கிறார் பார்வதி.

8) வீர ரசத்தைப் பறைசாற்றுகிறது  ‘துணிந்த பின்’ குறும்படம். நக்ஸலைட்டுகளை வேட்டையாட வனத்துக்குள் ஊடுருவும் அதிரடிப் படையினர், எதிர்பாராத எதிர்த் தாக்குதலில் நிலைகுலைகின்றனர். குற்றுயிராய் சிக்கிய நக்ஸலைட் கிஷோரை ஜீப்பில் ஏற்றி தனியாளாய் காட்டைக் கடக்க முயல்கிறார் அதர்வா. இருவருக்கும் இடையில் நீளும் உரையாடலின் திடீர் திருப்பம், அதர்வாவின் துணிவை உரசிப் பார்க்கிறது. இறுதியில் அதர்வா எடுத்த முடிவு என்ன என்பதை ஊருக்குள் அவருக்காக காத்திருக்கும் மனைவி அஞ்சலியின் வசனங்களில் குறிப்பாக உணர்த்துகிறார் இயக்குநர் சர்ஜூன். ஆனால் அது முழுமையாக வெளிப்படாததுடன், அதர்வா - கிஷோர் இடையிலான தொய்வான பயண உரையாடலும் படத்தைச் சோதிக்கிறது.

9) கௌதம் வாசுதேவ் மேனனின் பழகிய சட்டகத்துக்குள்ளான காதல் படைப்பான ‘கிடார் கம்பி மேலே நின்று’ குறும்படத்தில்,  ‘சிருங்காரம்’ ரசம் பதிவாகியிருக்கிறது. கண்டதும் காதல், ஹஸ்கி ஆங்கில பினாத்தல்கள் என கௌதம் மேனனின் முந்தைய படங்களை நினைவுபடுத்தும் கதை. சூர்யா, ப்ரயாகா ரோஸ் மார்ட்டின் நடிப்பில் தனித்துவம் மிளிர்கிறது. பி.சி.ஸ்ரீராமின் ஒளிப்பதிவிலான இரவின் ஜொலிப்புகள், ‘தூரிகா’ பாடல், காதல் வசனங்கள் என கௌதம் மேனன் ரசிர்களுக்கான குறும்படம் இது.

நடிப்பு, இயக்கம் மட்டுமன்றி இசை, கலை, ஒளிப்பதிவு எனச் சிறந்த கலைஞர்களின் பங்கெடுப்பு ஒவ்வொரு குறும்படத்திலும் உள்ளது. பெருந்தொற்று அலைகளுக்கு மத்தியில் சீரிய நோக்கத்துக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த ஆந்தாலஜி, ஓடிடி தளத்தில் தமிழ்ப் படைப்பின் பெரும் அலைக்கு வித்திட்டிருப்பது வரவேற்புக்கு உரியது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE