ரசிகா
readers@kamadenu.in
‘கோலி சோடா 2’வில் ஹோம்லி தேவதையாகத் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்தவர் சுபிக்ஷா கிருஷ்ணா. சீர்மிகு சென்னையின் மகளான இவர், பாரதிராஜாவின் ‘அன்னக்கொடி’ படத்தின் மூலம் தமிழ் திரைக்கு அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து மலையாளம், கன்னடத்தில் தடம் பதித்துவிட்டு, தற்போது மீண்டும் தமிழில் கவனம் செலுத்தி வருகிறார். அடிப்படையில், பரதநாட்டியக் கலைஞரான சுபிக்ஷா தற்போது பாலாஜி சக்திவேல் இயக்கும், ‘யார் இவர்கள்’ படத்தில் நடித்து வருகிறார். அவரிடம் காமாதேனு மின்னிதழுக்காக பேசினோம்.
‘அன்னக்கொடி’ படத்துக்குப் பிறகு மலையாளம், கன்னடம் என போய்விட்டீர்களே..?
‘அன்னக்கொடி’ படப்பிடிப்பு தொடங்கியபோதே மலையாளத்திலிருந்து வாய்ப்பு வந்துவிட்டது. அதுவும் ஃபகத் ஃபாசில் ஜோடியாக இரண்டாவது படம் என்றதும் வாய்ப்பை விடமனமில்லை. அந்தப் படம் 2013-ல் வெளியான‘ஒளிப்போரு’. அதில் நடித்துக் கொண்டிருக்கும்போதே கன்னடத்திலிருந்து மூன்றாவது படத்துக்கான அழைப்பு வந்தது. சிவகார்த்திகேயன் நடித்த ‘மனம்கொத்திப் பறவை’ படத்தின் கன்னடப் படத்தின் ரீமேக் என்பதால் அதையும் உடனே ஏற்றுநடித்தேன்.
ஃபகத் ஃபாசிலுடன் நடித்த அனுபவம் எப்படியிருந்தது?
‘மகேஷிண்டே ப்ரதிகாரம்’ படத்துக்குப் பிறகுதான் ஃபகத் ஃபாசில் இங்கே பேசப்பட்டார். ஆனால், அங்கே ‘சாப்பா குரிசு’, ‘டைமண்ட் நெக்லஸ்’, ‘அன்னாயும் ரஸுலும்’ என முதல் 10 படங்களிலேயே நடிப்புக்காக அவர் ஃபேமஸ் ஆகிவிட்டார். நான் மலையாளப் படங்களை தொடர்ந்து பார்ப்பவள். ‘ஒளிப்போரு’ படத்தின் படப்பிடிப்பில், என்னுடைய க்ளோஸ் - அப் ஷாட்டுக்குக்கூட சும்மா நிற்காமல் ரியாக்ஷன் கொடுப்பார். ஏனென்று கேட்டபோது, “ஃபிரேம்ல என்னோட ஷோல்டர் தானே தெரியுது என்று நான் சும்மா இருக்கக் கூடாது. எனது ரியாக்ஷன் அந்த தோளின் அசைவில் கூட தெரியலாம்” என்றார். நான் அசந்து போய்விட்டேன். இப்படி நடிப்பு பற்றி அவரிடமிருந்து நுணுக்கமான பல டிப்ஸ்கள் எனக்குக் கிடைத்தது. மெட்ரோ ரயில் நிலையத்தில் எனக்கும் அவருக்குமான மாண்டேஜ் ஷாட்களை எடுத்தபோது “மாண்டேஜ் ஷாட்களில் நடிப்பது விளையாட்டு இல்லை... அதில் ஏனோ தானோவென்றெல்லாம் நடிக்கக் கூடாது” என்று எனக்குச் சொல்லித்தந்தார் ஃபகத். இப்படி நிறைய..!
பாரதிராஜாவின் அறிமுகம் என்பதில் பெருமைப்படுகிறீர்களா?
நிச்சயமா! எங்கே போனாலும் “நீங்க பாரதிராஜா சார் அறிமுகம் தானே… ஷுட்டிங் ஸ்பாட்ல அவர்கிட்ட அடி வாங்கியிருக்கீங்களா?” என்று விசாரிப்பார்கள். இது பாரதிராஜா சாரைப் பற்றி முழுமையாகத் தெரியாதவர்கள் கேட்பது. அவர் இயக்குநர் இமயம் மட்டுமல்ல; தலை சிறந்த நடிகரும் தான். ‘அன்னக்கொடி’ படத்துக்கு முன்பாக எனக்கு குறும்படத்தில் நடித்த அனுபவம்கூட கிடையாது. தண்ணீர் நிரம்பிய குடத்தை இடுப்பில் தூக்கிக்கொண்டு நடந்து வருவது போல் எனக்கு முதல் ஷாட் வைத்தார். நான் சென்னையில் பிறந்து வளர்ந்த பெண். குடம் எனது இடுப்பில் ஏறியதே இல்லை. குடத்தை வைத்துக் கொண்டு நான் நடந்து வந்ததைப் பார்த்துவிட்டு, “கேமரா அருகில் நின்று என்னைக் கவனி” என்றார். அவரே குடத்தை எடுத்துக்கொண்டுபோய், “தெற்கத்தி கிராமத்துப் பெண் ஒருத்தி தண்ணீர் குடம் சுமந்தபடி, வாயாடிக்கொண்டு வந்தால் அவளது உடல்மொழி இப்படித்தான் இருக்கும்... கூர்ந்து கவனித்து மனதில் உள்வாங்கிக்கொள்” என்று சொல்லிவிட்டு, ‘மார்க்’ செய்த இடத்திலிருந்து நடந்து காண்பித்தார். நான் அசந்துபோய்விட்டேன்.
அவர் எப்படி நடந்து காட்டினாரோ, அப்படியே செய்தேன். “நீ ஒரு கற்பூரம்” என்று பாராட்டினார். இன்னொரு பாராட்டும் அவரிடமிருந்து கிடைத்தது. மற்றவர்களுக்கான காட்சிகளை அவர் எடுக்கும்போது, நமக்கென்ன என்று நான் சும்மா இருக்கமாட்டேன். யாருக்கும் தொந்தரவு இல்லாமல் கேமராவுக்கு பின்னாலிருந்து கவனிப்பேன். அதை தொடர்ந்து கவனித்தவர், “கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற இந்த ஆர்வம் இருந்தால் போதும் சுபிக்ஷா... உன் வாழ்க்கை என்றைக்கும் சுபிக்ஷமாக இருக்கும்” என்று வாழ்த்தினார். அதை மிகப்பெரிய ஆசிர்வாதமாக நினைக்கிறேன்.
உங்கள் குடும்பப் பின்னணியைக் கொஞ்சம் சொல்லுங்களேன்..?
எங்களுடையது ஒரு பரதக் கலை குடும்பம். பாட்டியும் அம்மாவும் சிறந்த டான்சர்கள். நடன ஆசிரியர்களும் தான். அம்மா வகுப்பு எடுக்கும்போது அதைப் பார்த்து 3 வயதிலிருந்தே நானும் ஆடத் தொடங்கிவிட்டேன் என்று அம்மா சொன்னார். எனக்கு விவரம் தெரியத் தொடங்கியதும் முறைப்படி பரதம் கற்றுகொண்டேன். அரசு இசைக் கல்லூரியில் ‘ஆடல் கலைமணி’ மூன்றாண்டு படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சிபெற்று பட்டயம் பெற்றேன். மேடை நிகழ்ச்சிகளும் செய்து வருகிறேன். இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்கள் என்னுடைய மேடை நிகழ்ச்சி ஒன்றுக்கு தலைமையேற்க வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்து செல்லும்போது என்னை ஆசிர்வதித்த அவர், “சினிமாவுக்கு முயற்சி செய்... அதற்கான அத்தனை அங்க லட்சணங்களும் திறமையும் உனக்கு இருக்கிறது. காட் பிளஸ் யூ” என்றார். அந்த நாளையும் என்னால் மறக்கவே முடியாது.
உங்கள் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்கள்..?
அம்மா, அப்பாவுக்கு முதலிடம் கொடுப்பேன். அவர்கள் அனுமதிக்காவிட்டால் நான் சினிமாவில் தொடர முடியாது. திரையுலகிலும் நல்ல நண்பர்கள் உண்டு. குறிப்பாக, இயக்குநர் விஜய் மில்டன் சார். எனது திறமையையும் தோற்றத்தையும் பார்த்து அடுத்தடுத்து இரண்டு படங்களில் எனக்கு வாய்ப்புகள் வழங்கினார். எனக்கு குரு ஸ்தானத்தில் இருப்பவர். கேமராவுக்கு முன்னால் ஒரு நடிகர் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுத்து என்னை மோல்ட் செய்தவர் அவர்தான். ஒப்பனை இல்லாமலே நடிக்க வைத்து எனது தோற்றங்களை அவ்வளவு அழகாக தனது படங்களில் வடிவமைத்தார். அவர் காட்டிய வழியில்தான் ‘வேட்டை நாய்’ படத்திலும் மேக் - அப் இல்லாமலே நடித்தேன். அதற்கு அவ்வளவு பாராட்டு கள் கிடைத்தன. குறைவான படங்களில் நடித்திருந்தாலும் மிகப்பெரிய ஆளுமைகளுடன் பணியாற்றியது என் அதிர்ஷ்டம்.
தற்போது நடித்து வரும் படங்கள்..?
‘யார் இவர்கள்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறேன். பாலாஜி சக்திவேல் சார் இயக்கத்தில் நடித்தது எனது சினிமா வாழ்க்கையின் முக்கியமான நாட்கள். அடுத்ததா மு.மாறன் இயக்கத்தில் ‘கண்ணை நம்பாதே’ படத்தில் நடித்து வருகிறேன். இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்குகிறது.