பிட்லீ
readers@kamadenu.in
திருமணம் செய்து கொள்வதாக ஆர்யா ஏமாற்றிவிட்டார் என்ற சர்ச்சை மீண்டும் வெடித்துள்ளது. சிபிசிஐடி விசாரணை வரை சென்றுள்ள இவ்விவகாரத்தின் பின்னணியில், பல அரசியல் சக்திகளை விமர்சித்த ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் நடித்ததால் வந்த எதிர்வினை என்ற பேச்சும் கோலிவுட்டில் பேசப்படுகிறது.
அதை ஆர்யா சொல்லட்டும், நம்புறோம்...
ஹிந்தியில் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்த ‘பதாய் ஹோ’ படத்தைத் தமிழில் ரீமேக் செய்து இயக்குகிறார் ஆர்.ஜே.பாலாஜி. ‘வீட்ல விசேஷங்க’ என்ற பெயரில் வெளியாகவுள்ள இப்படத்தில் கதாநாயகனாக ஆர்.ஜே.பாலாஜியும், நாயகியாக அபர்ணா பாலமுரளியும் நடிக்கிறார்கள். இயக்கம், நடிப்பு என்று பிசியாக இருந்தாலும் ஸ்பாடிஃபை நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் ‘நால்னா முறுக்கு’ என்ற நிகழ்ச்சியையும் தொடர்ந்து நடத்தி வருகிறார் ஆர்.ஜே.பாலாஜி.
பேசியே கொல்லுவாரே மனுஷன்?
‘அசுரகுரு’ படத்துக்குப் பிறகு வாய்ப்புகள் இல்லாமல் இருந்த மகிமா நம்பியார், அடுத்ததாக ஓடிடி தளத்தில் முகம் காட்டுகிறார். இவர் ஜி.வி.பிரகாஷுடன் இணைந்து நடித்த ‘ஐங்கரன்’ திரைப்படம் பல தடைகளால் வெளியாகாமல் இருந்தது. பிரச்சினைகள் பேசித் தீர்க்கப்பட்ட நிலையில், இத்திரைப்படம் சோனிலிவ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாம்.
வெற்றிபெற வாழ்த்துவோம்...
300 கோடி ரூபாய் பட்ஜெட்டில், பிரபாஸ் நடிப்பில் வெளிவரவுள்ள ‘ஆதிபுருஷ்’ படத்தில் சீதையாக நடிக்கிறார் க்ரித்தி சனோன். அடுத்து அவர் நடித்து நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான ‘மிமி’ படமும் ஹிட். கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடிக்கவும் க்ரித்தி சனோனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.
பாலிவுட் நடிகைகள 30 வயசான பின்னாடி தான், தமிழனுக்கு அறிமுகப்படுத்துவீங்களா, டைரக்டர்ஸ்?
கார்த்திக் நரேன் இயக்கும் ‘மாறன்’ தனுஷின் 43-வது படம். நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இதன் திரைக்கதையை மேம்படுத்த, மலையாளத்தில் வெற்றிபெற்ற ‘வரதன்’, ‘வைரஸ்’ போன்ற படங்களுக்குத் திரைக்கதை எழுதிய ஷார்வூ மற்றும் சுகாஸ் இருவரையும் பரிந்துரைத்துள்ளார் தனுஷ்.
‘ஜெகமே தந்திரம்' கற்றுத்தந்த தந்திரமோ?
புகழ்பெற்ற கன்னட நடிகரான ராஜ்குமாரின் பேத்தியும், நடிகர் ராம்குமாரின் மகளுமான தான்யா ராம்குமாரும் சினிமா நடிகையாகிவிட்டார். அவருடைய முதல் படமான ‘நின்னா சன்னிஹக்கே’ கன்னட திரைப்படம் ஆகஸ்ட்டில் வெளியாகவுள்ள நிலையில், அடுத்தடுத்து கன்னடத்திலும் தமிழிலும் பல படங்களில் கமிட் ஆகியுள்ளாராம் தான்யா.
திராவிடச் செல்வியே வருக...