இப்படியே போனால் அதிமுக அழிந்துவிடும்!- நாஞ்சில் சம்பத் ‘நச்’ பேட்டி

By காமதேனு

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

மத்திய பாஜக அரசுக்கு எதிராகக் கூர்மையான வார்த்தை வாளைச் சுழற்றுபவர் நாஞ்சில் சம்பத். திராவிடக் கொள்கைகள் மீது தீராத காதல் கொண்ட சம்பத்திடம், இப்போதைய அரசியல் நிலவரம் குறித்து மணக்காவிளையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினோம். அவர் அளித்த பேட்டி:

கரோனா காலத்தில் மத்திய அரசின் செயல்பாட்டை எப்படிப் பார்க்கிறீர்கள்?

செயல்பாடா? கங்கையில் மிதந்த பிணங்களே அதற்கு சாட்சி. இந்தியர்களுக்குத் தடுப்பூசியை செலுத்தாமல் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்துவிட்டு, உலக அரங்கில் தன்னை ஒரு ரட்சகன் போல் காட்டிக்கொள்ளத்தான் மோடிக்குக் கரோனா பயன்பட்டி
ருக்கிறது. ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் கரோனாவை எதிர்கொண்ட விதத்திலிருந்தும் மோடி பாடம் படிக்கவில்லை. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் சோகத்துக்கு ஈடு சொல்ல முடியுமா? இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு ஏறத்தாழ 4,14,000 பேர் இறந்திருப்பதாக அதிகாரபூர்வமான புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. ஆனால், இதைவிடவும் பத்து மடங்கு அதிக மரணங்கள் நிகழ்ந்திருக்கும் என முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் சொல்கிறார்.

இப்போதும் ‘மோடி’ என்னும் பிம்பத்தை கட்டியமைப்பதிலேயே ஒன்றிய அரசு குறியாக இருக்கிறது. நாட்டு மக்களின் பாதுகாப்பில் துளியும் அக்கறை இல்லை.

நீங்களும் ‘ஒன்றிய அரசு’ என்ற சொல்லாடலைத்தான் பயன்படுத்துகிறீர்கள். மத்திய அரசு எனச் சொல்வதில் என்னதான் பிரச்சினை?

மத்திய அரசு என்ற சொல்லாடல் தவறு. ஒன்றிய அரசு என்பதே சரி. சட்டமேதை அம்பேத்கரே இதைச் சொல்லியிருக்கிறார். இந்தியா என்பது நாடு அல்ல. இணைக்கப்பட்ட ஒரு துணைக்கண்டம் என்பதே அவரது பார்வை. இந்திய அரசியலின் ஆகப்பெரும் அறிஞரான அண்ணாவும், நாடாளுமன்றத்திலேயே இதைத் தெளிவுபடுத்தியிருக்கிறார். பல்வேறுபட்ட இனம், மொழி, கலாச்சாரங்களைக் கொண்ட இந்தியாவில் மத்திய அரசு எப்படி இருக்க முடியும்? ஒன்றிய அரசுதான் இருக்க முடியும். ஒன்றியம் என்பதில்தான் மாநில மக்களின் உரிமை, வளர்ச்சி, தனித்தன்மை அத்தனையும் இருக்கும். மத்திய அரசு எனும் வாதமே கூட்டாட்சித் தத்துவத்திற்கு வேட்டுவைத்து வல்லாதிக்கத்திற்குப் பாதை காட்டுகிறது.

இந்தியா எல்லோருக்குமான நாடு. எனவே, ஒன்றியம் என்பதே சரி. அசோகர், மெளரியர், புத்தர் காலத்துக்கு முன்பு இந்தியா இருந்ததில்லை. பிரிட்டிஷ் காலத்துக்குப் பின்பே இந்தியா இணைக்கப்பட்டது. அப்படி இணைக்கப்பட்ட பல்வேறு பகுதி மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதால்தான், அம்பேத்கர் ஒன்றிய அரசு என அழைத்தார்.

தமிழக சட்டப்பேரவையில் பாஜக காலூன்றி இருப்பது பெரியார் பூமியில் பாஜகவின் வளர்ச்சிதானே?

20 தொகுதிகளை இலக்காகக் கொண்டு போட்டியிட்டு, நான்கு தொகுதிகளில்தான் பாஜகவினர் கரைசேர்ந்துள்ளார்கள். அதுவும் இது இரவல் வெற்றி. அதிகாரத்தில் இருந்த அதிமுகவின் முதுகில் ஏறி பெற்ற வெற்றி. பிரதமர், உள் துறை அமைச்சர், உத்தர பிரதேச முதல்வர் என அதிகாரமிக்கவர்களும், சங் பரிவார் அமைப்புகளும் திட்டமிட்டு கோடிகளைக் கொட்டி செலவு செய்து கிடைத்த வெற்றி. நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வென்ற எம்.ஆர்.காந்தி, காலில் செருப்பு போடமாட்டார். பல வருடங்களாகத் தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர். அவர் மீதான அனுதாபத்தால் நாகர்கோவில் தொகுதியில் பாஜக ஜெயித்தது. திருநெல்வேலியில் நயினார் நாகேந்திரன் தேர்தல் காலத்தில் அதிமுககாரராகவே மாறினார். அது நயினார் பெற்ற வெற்றி. அது பாஜகவின் வெற்றி அல்ல. மொடக்குறிச்சி தொகுதியில் திமுக வேட்பாளரின் பலவீனம் பாஜகவை ஜெயிக்கவைத்தது. கோவை தெற்கில், வானதி சீனிவாசன் கடந்த ஐந்து வருடங்களாகவே தேர்தல் வேலை செய்திருந்தார். பாஜகவின் எல்லையைத் தாண்டியதுதான் வானதியின் வெற்றி. கதை இப்படி இருக்க, திமுகவுக்கு மாற்று போல் பாஜக வேடம் தரிக்க முயற்சிக்கிறது.

கேரளத்தில் துடைத்து எறியப்பட்ட பாஜக தமிழகத்தில் நான்கு இடங்களில் ஜெயித்திருப்பது பெரியார், அண்ணாவை நேசிக்கும் என் போன்றோரைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அதேநேரம் பாஜகவினர் இதை விதை என நினைத்தால் ஏமாந்துதான் போவார்கள். சராசரி மக்களின் மனங்களைக் கொள்ளை கொண்டு சீர்மிகு ஆட்சியை நடத்திவரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்பு, பாஜகவின் வேஷமும், கோஷமும் இந்த மண்ணில் எடுபடாது.

அதிமுக தொண்டர்களுடன் அலைபேசி உரையாடல், தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி என அதிரடி காட்டும் சசிகலாவின் அரசியல் நடவடிக்கைகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழக அரசியலில் அனைவரது கவனத்தையும் அவர் ஈர்த்திருக்கிறார். அது ஆதரவாக மாறுமா என்பது அவரது பயணத்தைப் பொறுத்தது. அதிமுகவுக்கு அவர்தான் தலைமை தாங்க வேண்டும்; அப்போதுதான் அந்தக் கட்சி காப்பாற்றப்படும் என்றுதான் அதிமுக தொண்டர்கள் முதல் அரசியல் பார்வையாளர்கள் வரை பலரும் கருதுகிறார்கள். சிறையிலிருந்து வெளியே வந்ததும் அரசியலிலிருந்தே விலகுவதாக அறிவித்து தேர்தலிலும் பங்களிப்பு செய்யாமல் இருந்தவரின் இப்போதைய நடவடிக்கைகளால், அவரின் மீள்வருகையை அதிமுக தொண்டர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அதிமுகவின் எதிர்காலம் என்னதான் ஆகும்?

அதிமுக எனும் கட்சியைச் சின்னாபின்னமாக்கி சிதிலமடையச் செய்து சீர்குலைப்பதே பாஜகவின் திட்டம். இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் பல கட்சிகளிலும் இந்த விளையாட்டைத்தான் அக்கட்சி செய்தது. இந்த விளையாட்டில் ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் பலியானது அரசியல் சோகம். இப்படியே போய்க்கொண்டிருந்தால் அதிமுகவின் அழிவை யாராலும் தடுக்க முடியாது. 

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE