சிறகுகளை முறித்த பெட்ரோல் விலை உயர்வு!- இருசக்கர வாகனங்களைத் தவிர்க்கும் இல்லத்தரசிகள்

By காமதேனு

கே.கே.மகேஷ்
magesh.kk@kamadenu.in

1990-களின் தொடக்கத்தில் இந்தியப் பெண்களுக்கு இன்னொரு சிறகு முளைத்தது - அது இருசக்கர வாகனம்! கைக்கு மோதிரமோ, வளையல்களோ தேவையில்லை; காலுக்குத்தான் சக்கரம் தேவை என்று பெண்கள் உணரத் தொடங்கிய காலம் அது. அலுவலகம் செல்வது முதல் பள்ளிக்குப் பிள்ளைகளைக் கொண்டுபோய் விடுவதுவரை, எதற்கெடுத்தாலும் ஆண்களை நம்பியிருந்த நிலையை மாற்றியமைத்தது இருசக்கர வாகனங்கள்தான். துர்க்கைக்குப் புலி வாகனம் போல, ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் குறைந்தது ‘50 சிசி’ சக்தி கொண்ட வாகனம் என்பது கனவானது. பலருக்கு அந்தக் கனவு நனவானது!

அது பெண்களின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமின்றி, இருசக்கர வாகனத் தயாரிப்பாளர்களின் வளர்ச்சிக்கும் உரம் போட்டது. வழக்கம்போல தமிழ்நாடு இந்த விஷயத்தில் அடுத்தகட்டப் புரட்சியைச் செய்தது. ஏற்கெனவே, மேல்நிலைப் பள்ளி படிக்கும் மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய தமிழக அரசு, பணிக்குச் செல்லும் பெண்களுக்காக அம்மா இருசக்கர வாகனத் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. திட்டத்தைச் செயல்படுத்துவதில் அரசியல் இருந்தாலும்கூட, சொந்தமாக இருசக்கர வாகனம் வாங்கும் அளவுக்கு வசதி இல்லாத பெண்களுக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாக அமைந்தது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் வேலைக்குச் செல்கிற, கல்லூரியில் படிக்கிற பெண்களில் 60 சதவீதம் பேர் சொந்தமாக இரு சக்கர வாகனம் வைத்திருக்கிறார்கள் என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

வேகத்தடைபோடும் விலை உயர்வு

இந்த மகத்தான மாற்றத்துக்கு வேகத்தடை போட்டிருக்கிறது பெட்ரோல் விலை உயர்வு. லிட்டர் 103 ரூபாயாக அதிகரித்திருக்கும் பெட்ரோல் விலையால், பந்தா இளைஞர்களே பைக்கை வெளியே எடுக்க யோசிக்கிறார்கள். அவர்களே அப்படியென்றால், ஒவ்வொரு செலவையும் திட்டமிட்டுச் செய்யும் பெண்கள் யோசிக்க மாட்டார்களா என்ன? இதுதொடர்பாகப் பெண்கள் சிலரிடம் பேசினோம்.

“நான் தனியார் பள்ளி ஆசிரியை. கரோனாவால் சம்பளத்தைப் பாதியாக் குறைச்சிட்டாங்க. பெட்ரோல் விலையும் எக்குத்தப்பா கூடிடுச்சு. குடும்ப வருமானம் குறைஞ்சாலும், உணவு, மருத்துவ செலவுகளைக் குறைக்க முடியாது, குறைக்கவும் கூடாது. இந்த நேரத்துல ரெண்டு வண்டிக்குப் பெட்ரோலுக்காகச் செலவு செய்வது தேவையில்லாததுன்னு தோணுச்சு. குடும்பத்தில் யாராவது ஒருத்தர் விட்டுத்தரத்தானே வேணும்! இப்ப நான் என் கணவரோட வண்டியிலதான் அவர்கூட எல்லா இடத்துக்கும் போறேன். இப்படி எல்லாத்துக்கும் அவரைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறதால, சில வேலைகள் தேங்கிக்கிடக்குது” என்கிறார் மதுரை விளாங்குடியைச் சேர்ந்த ரெஜினா.

நாகர்கோவிலில் தனியார் உணவகம் ஒன்றில் ரிஷப்ஷனிஸ்ட்டாக வேலைபார்க்கும் ஸ்ரீஜாவுக்கு 34 வயதே ஆகிறது. கணவரோ வெளிநாட்டில் வேலை செய்கிறார். இரண்டு குழந்தைகளுக்குத் தாயான ஸ்ரீஜாவுக்கு அவரது ஸ்கூட்டிதான் அனைத்துமே. “நான் வேலை பார்க்கிற ஓட்டல் என் வீட்ல இருந்து 8 கிலோமீட்டர் தூரத்துல இருக்கு. பிள்ளைகளைச் சாப்பிடவைத்து, ஆன்லைன் கிளாசுக்குத் தயார்படுத்திட்டு நான் வேலைக்குப் போகணும். பஸ்சுல போனா லேட் ஆகிடும். ஸ்கூட்டிதான் என்னோட மந்திரக் கம்பளம். வேலைக்குப் போறதோட, சாயந்திர நேரத்துல பிள்ளைங்கள வெளியே ஒரு ரவுண்டு கூட்டிப் போயிட்டு வருவேன். ஆனா, பெட்ரோல் விலை அதிகமாகிட்டதால ரொம்பச் சிரமமா இருக்கு. முன்னாடி 100 ரூபாய்க்குப் பெட்ரோல் போட்டா, ரெண்டு நாளுக்கு வரும். இப்ப ஒரு நாள்தான் வருது. அதனால பிள்ளைங்கள வெளியே கூட்டிட்டுப் போறதையும், சின்னச் சின்ன வேலைக்கெல்லாம் வண்டியெடுக்கிறதையும் நிறுத்திட்டேன். வேற வழி?” என்று கேட்கிறார் ஸ்ரீஜா.

“பைக்ல காலேஜ் போகணுங்கிறது என்னோட ஆசை. அடுத்த பிறந்தநாளுக்குக் கண்டிப்பா ஹோண்டா பைக் வாங்கித்தர்றதா அப்பா ப்ராமிஸ் பண்ணிருந்தார். ஆனா, பெட்ரோல் விலை மலைபோல உயர்ந்துட்டதால, ‘மகளே அந்தக் கனவை தயவு செஞ்சு மறந்துடு’ன்னு அப்பாவே கையப் பிடிச்சி சொல்லிட்டார்” என்ற சோகத்தைப் பகிர்கிறார் கல்லூரி மாணவி ஷில்பா சுரேஷ்.

தொழில் செய்வோரின் துயரம்

வேலைக்குச் செல்லும் பெண்களுக்கே இவ்வளவு பாதிப்பு என்றால், சொந்தமாகத் தொழில் செய்வோரின் நிலை பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

டிவிஎஸ் 50-ல் சென்று டீ விற்கும் மதுரை புரட்சித் தலைவர் காலனியைச் சேர்ந்த உம்ம சல்மா, இதில் ரொம்பவே பாதிக்கப்பட்டிருக்கிறார். “வீட்டு வேலை பார்த்துக்கிட்டு இருந்த நான் கரோனா காலத்துல வேலை போனதால, அப்பாவோட டிவிஎஸ் 50-ல டீ யாவாரம் பண்ண ஆரம்பிச்சேன். காலையில 6 மணிக்கு வீட்டைவிட்டுக் கிளம்புனா, 8 மணிக்குள்ள 30 டீ வித்துட்டு வீட்டுக்கு வந்து, பையனுக்குச் சாப்பாடு கொடுப்பேன். பிறகு மதியம் ஒரு ரவுண்டு, அப்புறம் சாயந்திரம். ஒரு டீ வித்தா, ஒரு ரூபா கிடைக்கும். இப்ப பெட்ரோல் விலை கூடுனதால, கட்டுபடியாகல. மூடியிருந்த டீக்கடைகளையும் திறந்துட்டாங்க. அதனால மறுபடியும் வீட்டு வேலைக்கே போக ஆரம்பிச்சிட்டேன்” என்று வருத்தத்துடன் சொல்கிறார் சல்மா.

கோவையைச் சேர்ந்த சித்ரா சின்னு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழில் செய்பவர். அவரது நிலையும் இதுதான். “என்னோட கம்பெனிக்கு எதாவது உதிரி பாகங்கள் வாங்கணும்னா வண்டியிலதான் போயாகணும். முக்கியமான மெட்டீரியல் எல்லாம் காந்திபுரத்துல இருந்து வாங்கணும். முன்னாடி ஆட்டோ கட்டணம் 800 ரூபாயா இருந்தது. இப்ப 1,100 ரூபாய் கேட்கிறாங்க. அதனால உடனுக்குடன் எதையும் வாங்க முடியிறதில்ல. ரெண்டு, மூணு பேரு சேர்ந்து ஆர்டர் போட்டா, வாடகையைக் குறைக்கலாம். ஆனா, ரெண்டு மணி நேரம் மிஷின் ஓடாம நின்னா அதைவிட நஷ்டமாகிடும். முன்னாடி எல்லாம் அவசரம்னா நானே கார்ல போய் வாங்கிட்டு வந்திடுவேன். இப்ப காரை எடுக்கவே பயமா இருக்கு. நான் வேற காருக்குப் பவர் பெட்ரோல் (எத்தனால் கலந்தது) போட்டே பழகிட்டேன். நார்மல் பெட்ரோல் 103 ரூபாய்னா, இதோட விலை 106 ரூபாய். முடியல. கரன்ட் வேற அடிக்கடி போகுது. ஜெனரேட்டருக்கு டீசல் வாங்கி எல்லாம் இந்தத் தொழிலை செய்யவே முடியாது” என்று புலம்புகிறார் சித்ரா.

பெண்கள் பழையபடி சிறகடித்துப் பறக்க, காலில் சக்கரம் கட்டிக்கொண்டு ஓட வேண்டும் என்றால் பெட்ரோல் விலை குறைந்தாக வேண்டும். மத்திய பாஜக அரசு கூடுதலாக விதித்த வரிகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும், திமுக அரசும் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி பெட்ரோல் விலையை கொஞ்சம் குறைத்தால் புண்ணியமாகப் போகும் என்பதே ஒட்டுமொத்த பெண்களின் ஒரே கோரிக்கை.

ஆவன செய்யுமா அரசுகள்?

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE