பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட ரீமேக் படங்களில் மட்டும் நடிப்பது என்று முடிவெடுத்திருக்கிறார் ஜான்வி கபூர். 'கோலமாவு கோகிலா' படத்தின் ரீமேக்கில் நடித்து முடித்த கையோடு, மலையாள வெற்றிப்படமான 'ஹெலன்' திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறாராம் ஜான்வி.
மயிலு பொண்ணே, தமிழுக்கும் வருவீங்களா?
‘சார்பட்டா பரம்பரை', ‘எனிமி' போன்ற படங்களில் பிஸியாகிவிட்ட ஆர்யா, அடுத்ததாக வில்லன் அவதாரம் எடுக்கவிருக்கிறார். லிங்குசாமி இயக்கும் தெலுங்கு படமொன்றில் வில்லனாக நடிக்கவுள்ளாராம்.
நிறைய படம் பண்ணுங்க சார்...
அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்த கையோடு, ரஜினியின் அடுத்தப்படம் என்னவென்ற அனுமானங்கள் கோலிவுட்டில் சிறகடிக்கத் தொடங்கிவிட்டன. தற்போது இந்த ரேஸில் முன்னணியில் இருப்பவர் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. அடுத்ததாக, ரஜினி இவரது இயக்கத்தில்தான் நடிக்கப் போகிறார் என்கிறார்கள்.
நீ கலக்கு அண்ணாத்த...
ஹிருத்திக் ரோஷன் - சைப் அலிகான் நடிப்பில் ‘விக்ரம் வேதா' திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது. தமிழில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் ராதிகா ஆப்தே நடிக்கிறார். படம் செப்டம்பர் இறுதியில் திரைக்கு வரவிருக்கிறதாம்.
ஹிருத்திக் சார்... நீங்களாச்சும், வலிமை அப்டேட் சொல்லுங்களேன்...
‘அபியும் நானும்' சீரியலில், சினிமா நடிகை நந்திதா நடிப்பாரென சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. சினிமா வாய்ப்புகள் கிடைக்காததால் அம்மிணி சீரியல் பக்கம் கரை ஒதுங்கியதாகவும் பின்னாலேயே பேச்சு கிளம்பியது. ஆனால், இது ஒரு மணி நேரம் ஓடக் கூடிய சிறப்புக் காட்சிக்காக மட்டும்தானாம். தொடர்ந்து தனது சினிமா முயற்சிகளில் ஈடுபடவுள்ளாராம் நந்திதா.
ஆழம் பார்க்கிற முயற்சின்னும் சொல்லலாம்...