க.விக்னேஷ்வரன்
vigneshwritez@gmail.com
மத்திய அரசின் ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவை இந்தியாவின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் கடுமையாக எதிர்த்துவருகின்றனர். இந்நிலையில், “இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், திரைத் துறையைவிட்டே வெளியேறுவேன். என்னைப் போன்று பல இயக்குநர்களும் நடிகர்களும் வெளியேறுவார்கள்” என்று இயக்குநர் சீனு ராமசாமி கூறியதாகத் தகவல் வெளியானது. எளிய மக்களின் வாழ்க்கையைத் திரைமொழியில் சொல்லத் தெரிந்த ஒரு மக்கள் கலைஞர், தன் கலையைக் கைவிடப்போவதாகப் பரவிய செய்தி சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து சீனு ராமசாமியிடம் பேசினோம். தன்னுடைய அடுத்தப் படமான ‘மாமனிதன்' திரைப்படத்தின் இறுதிகட்டப் பணியில் இருந்தவர், ஓய்வு வேளையில் நம்மிடம் மனம் திறந்து பேசினார்.
ஒளிப்பதிவு சட்டத்திருத்த வரைவு மசோதாவில் பிரச்சினைக்குரிய அம்சமாக நீங்கள் நினைப்பது என்ன?
இந்த வரைவு மசோதாவில் சில நல்ல விஷயங்கள் இருந்தாலும் இதன் ஐந்தாவது ஷரத்தில் கூறப்பட்டிருக்கும் விஷயங்கள், ஒட்டுமொத்தத் திரைத் துறையின் கருத்துரிமையையே பறிப்பதாகும். அந்த ஷரத்தின்படி, தணிக்கை வாரியம் ஒரு படத்திற்குச் சான்றிதழ் வழங்கினாலும், மத்திய அரசு நினைத்தால் அப்படம் மீண்டும் தணிக்கைக்கு உட்படுத்தப்படும். மேல்முறையீடு செய்ய நாங்கள் நீதிமன்றத்தை அணுக வேண்டிவரும். வியாபார ரீதியாக இது திரைத் துறையைப் பெரிதும் பாதிக்கும். புதிதாக வந்த படங்களுக்குத்தான் இந்த நிலை என்றில்லை. ஒரு திரைப்படம் வெளிவந்து பத்தாண்டுகளுக்குள் அதை மீண்டும் மத்திய அரசால் மறு தணிக்கைக்கு உட்படுத்த முடியும். அது மட்டுமல்ல, ஒரு புதுப் படம் தணிக்கைச் சான்றிதழ் பெற்று, திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும்போது, முதல் நாள் காட்சியில் வேண்டுமென்றே சில விஷமிகள் அத்திரைப்படத்திற்கு எதிராகப் போராட ஆரம்பித்தால், அந்தப் படத்தை ரத்து செய்து மறு தணிக்கைக்கு உட்படுத்த அரசால் முடியும். இது வியாபார ரீதியாகப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதுடன் திரைத் துறை கருத்துரிமையின் குரல்வளையை நேரடியாக நசுக்கும் செயல் ஆகும்.
கருத்து பேசப்பட்டால்தான் சமூக மாற்றங்கள் நிகழும். இப்படி ஒரு சட்ட மசோதாவை நிறைவேற்ற நினைக்கும் இந்த அரசு, மாற்றங்களை ரசிக்கவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
தற்போதுள்ள தணிக்கை வாரியம் கருத்துரிமையை உறுதிப்படுத்துகிறதா?
நான் இயக்கிய ‘நீர்ப்பறவை' (2012) திரைப்படத்தில் ஒரு காட்சியில், “தமிழ் மீனவனைச் சுடும் இலங்கைக்கு இது தெரியவில்லையா?” என்றுவசனம் வைத்திருந்தேன். அத்திரைப்படத்தைத் தணிக்கை செய்த குழுவினர் “இலங்கை நம் நேச நாடு. இப்படி வசனம் எழுதுவது நாட்டின் வெளியுறவுக் கொள்கைக்குச் சிக்கலாகும் அதனால், இலங்கை என்ற வார்த்தையை நீக்குங்கள்” என்று வலியுறுத்தினர். “தவறாகச் சித்தரிக்கவில்லையே... நடப்பதைத்தான் சொல்லியிருக்கிறேன்” என்று எவ்வளவோ சொல்லியும் அவர்கள் கேட்கவில்லை. இறுதியில், “இது ராணுவம் சம்பந்தப்பட்ட விஷயம், இந்திய ராணுவத்திற்குப் படத்தை அனுப்பி ஒரு அனுமதி வாங்குங்கள்” என்று கூறிவிட்டார்கள்.
இதுபோன்ற ஒரு பிரச்சினையில் சிக்கித்தான் ஆர்.கே.செல்வமணி இயக்கிய ‘குற்றப் பத்திரிகை' திரைப்படம் 15 ஆண்டுகள் தடை செய்யப்பட்டது. அதையெல்லாம் கருத்தில் கொண்டு வேறு வழியில்லாமல் இரவோடு இரவாக அந்த வசனங்களை மாற்றியமைத்தோம். இதுதான் தற்போதைய தணிக்கை வாரியத்தின் நிலை. இங்கே கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், வேற்றுமையில் ஒற்றுமை காட்டும் இந்தியாவில், மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் தணிக்கை முறை மாறும். ஆபாசம், வன்முறை மீதான தணிக்கை முறை ஒரே மாதிரி இருந்தாலும், அந்தப் பிராந்தியத்திற்கு ஏற்ற கருத்துகள், அப்பிராந்திய மக்களுக்கு ஏற்ற வகையில் தணிக்கை செய்யப்படும். உதாரணத்துக்கு, மலையாளத்தில் வெளியாகி, கேரள மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட திரைப்படம் தமிழகத்தில் சர்ச்சையைக் கிளப்பலாம். இப்படி பிராந்திய காரணிகளை ஓரளவு மனதில் கொண்டு கடந்த எழுபது வருடங்களாகச் செயல்பட்டு வந்த தணிக்கை வாரியத்தை ஒரே குடையின்கீழ் கொண்டுவருவதே, மத்திய அரசின் நோக்கம். எனவே, இந்த ஐந்தாம் ஷரத்தைத் திரும்பப் பெற வேண்டும் எனப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
கடந்த ஜூன் மாதம் 18-ம் தேதியிலிருந்தே இந்த சட்ட வரைவு அறிக்கை மீதான பொதுமக்கள் கருத்துக் கேட்புக்கு அரசு தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தபோதும், கடைசி தினமான ஜூலை 2-ம் தேதிக்குப் பிறகே திரைத் துறையினர் இதற்கு எதிராகக் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். ஏன் இந்த மெத்தனப் போக்கு ?
எனது பார்வைக்கு இவ்விஷயம் வராமல் இருந்துவிட்டது. நடிகர் சூர்யா இவ்விஷயத்தைப் பற்றிப் பேசிய பிறகே, இந்த வரைவு மசோதாவை எடுத்துப் படித்தேன். ஊடகங்களும் இவ்வளவு முக்கியமான வரைவு அறிக்கையைப் பற்றி பெரிதாகப் பேசவில்லை என்பதும் வருத்தத்திற்குரிய விஷயம்.
‘இந்த மசோதா நடைமுறைக்கு வந்தால், திரைத் துறையைவிட்டு வெளியேறுவேன்’ என்று நீங்கள் கூறியதாக ஒரு செய்தி வெளியானதே, அது உண்மையா?
அப்படி நான் எந்த இடத்திலும் கூறவில்லை. இது சில விஷமிகளால் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் போலிச் செய்தி. இதுதான் இன்றைய இணைய உலகின் சாபம். குற்றச்சாட்டு - விசாரணை - தண்டனை என்பது உலக வழக்கம் என்றால், குற்றச்சாட்டு - தண்டனை என்பதே இணைய உலகின் வழக்கமாக இருக்கிறது. சினிமாவைத் தணிக்கை செய்வதைவிட இணையத்தைத் தணிக்கை செய்வதே இன்றைய அவசியம்.
‘மாமனிதன்’ திரைப்படப் பணிகள் எந்த அளவில் உள்ளன?
அனைத்துப் பணிகளும் முடிந்து விட்டன. ஒருவார காலத்தில் தணிக்கைச் சான்றிதழ் வாங்கிவிடுவோம். அடுத்த மாதம் ‘மாமனிதன்' ரிலீஸ்.
‘மாமனிதன்’ படத்திற்கு இளையராஜா, யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைக்கிறார்கள். எப்படி இருந்தது அந்த அனுபவம் ?
முதன்முதலில் இளையராஜா தன் மகன் யுவனுடன் இணைந்து இசையமைத்துள்ளார். நான் பாடல்கள் எதுவும் வாங்காமல்தான் படப்பிடிப்புக்குச் சென்றேன். பாடல்கள் இல்லாமலே காட்சிகளை மான்டேஜாக எடுத்துவந்து அவர்களிடம் கொடுத்தேன். நான் கொடுத்த முழுப் படத்தையும் ராஜாக்கள் ஒரு இசைப் படமாக மாற்றிக் கொடுத்திருக்கிறார்கள்!