ரசிகா
readers@kamadenu.in
‘பகல் நிலவு’, ‘இரட்டை ரோஜா’ என இளமை துள்ளும் இரண்டு சின்னத்திரை சீரியல்களின் கதாநாயகி ஷிவானி நாராயணன். நடிப்பு ராட்சஷியாக தமிழ் ரசிகர்களின் உள்ளங்களில் ஊடுருவி நிற்கிறார். ‘பிக்பாஸ் சீசன் 4’-ல், பார்வையாளர்களால் அதிகமாகக் கொண்டாடப்பட்ட பெண் பங்கேற்பாளரும் ஷிவானிதான். பெயரைக் கெடுத்துக்கொள்ளாமல் 90 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் தாக்குப்பிடித்த மதுரைப் பெண்ணான இவருக்கு, திரையுலகிலிருந்து அழைப்பு வந்ததா? அவரிடமே கேட்டோம். பளிச் பளிச் சென்று பதில்கள் வந்து விழுந்தன.
பிக்பாஸில் பங்கேற்றால் சினிமா வாய்ப்புகள் வரிசை கட்டும் என்று இங்கே ஒரு கதை கட்டப்படுகிறது. சீசன் 4-ல் பங்குபெற்றபின் உங்களுக்கு சினிமா வாய்ப்புகள் வந்ததா?
பிக்பாஸ் பற்றி தவறாகச் சொல்வதற்கு ஏதுமில்லை. நான் அங்கே இருந்த 90 நாட்களும் கிண்டல், கேலி, நகைச்சுவை என ஜாலியாகவே நாட்கள் நகர்ந்தன. எந்த முன்தயாரிப்பும் இல்லாமல் தான் சென்றேன். செயற்கைத்தனமான எந்தக் காரியத்திலும் ஈடுபட எனக்கு விருப்ப மில்லை. எனது வீட்டில் எப்படி இருப்பேனோ அப்படித்தான் பிக்பாஸ் வீட்டிலும் இருந்தேன். 90 நாட்களுக்குப் பிறகு வெளியேற்றப்பட்டதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை.