ரசிகா
readers@kamadenu.in
சின்னத்திரை வழியாக வெள்ளித்திரையை வெற்றிகொள்ள நினைப்பவர்களின் வரிசையில் வந்து சேர்ந்திருக்கிறார் மீனாட்சி கோவிந்தராஜன். ‘வில்லா டு வில்லேஜ்’, ‘சரவணன் மீனாட்சி சீசன் 4’ என்று விஜய் டிவியில் டிஆர்பி-யை எகிற வைத்த தொடர்களின் முகமாக இருந்தவர். சுசீந்திரன் இயக்கிய ‘கென்னடி கிளப்’ திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு பரிச்சயமானவர். தற்போது, ஒரே பாய்ச்சலில் சியான் விக்ரம் நடித்துவரும் ‘கோப்ரா’ படத்தில் கதாநாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் 45 நாட்கள் நடித்துவிட்டு வந்திருக்கிறார். அழகு தமிழில் உரையாடும் மீனாட்சி காமதேனு மின்னிதழுக்காக அளித்த பிரத்யேகப் பேட்டி இது.
விக்ரமின் ‘கோப்ரா’ படத்தில் மொத்தம் 6 கதாநாயகிகள் எனக் கேள்வி. நீங்கள் என்னவாக நடிக்கிறீர்கள்? அப்படியே... தற்போது நடித்துவரும் படங்கள் பற்றியும் சொல்லிவிடுங்கள்.
‘கென்னடி கிளப்’ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ‘கோப்ரா’ படத்தில் ஒப்பந்தமாகிவிட்டேன். அதில் எத்தனை கதாநாயகிகள் நடித்திருக்கிறார்கள் என்பதை நான் வெளிப்படுத்துவது நல்ல செயலாக இருக்காது. ஆனால், ரஷ்யா, கொல்கத்தா, சென்னை, கேரளா என நான்கு லொக்கேஷன்களில் என்னை வைத்து 45 நாட்கள் ஷூட்டிங் நடந்திருக்கிறது என்றால், என்னுடைய கதாபாத்திரம் ‘கோப்ரா’வில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பது புரியும்.