எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in
குழந்தைகள் குதூகலமாய் ரசிப்பதற்கான புதிய அனிமேஷன் திரைப்படங்கள் பலவற்றைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’. குழந்தைகள் மட்டுமன்றி, வீடடைந்த குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து ரசிப்பதற்கான டிஸ்னியின் தரமான படைப்புகளிலிருந்து இரண்டினை இந்த வாரம் பார்க்கலாம்.
மனிதன் பாதி; மீன் மீதி
முற்றிலும் புதிய இடத்துக்கு பயணிக்கும் இரு சிறுவர்களின் சாகசமும், புதியன கண்டடைதலுமான கதையே ‘லூகா’ அனிமேஷன் திரைப்படம்.
இத்தாலிய கடற்கரை மக்களிடையே பேசப்படும் பழங்குடி கதைகளின்படி, அங்குள்ள ஆழ்கடலில் கடல் பூதங்கள் வாழ்ந்து வருகின்றன. அவை கடலுக்குள் விசித்திர மீனாக வாழ்பவை. நிலத்தில் மனித உரு கொள்பவை. அப்படியான கடல் பூதக் குடும்பம் ஒன்றைச் சேர்ந்தவன் லூகா. அன்றாடம் ஆட்டுமீன் கூட்டத்தை மேய்க்கும் அவனது வேலை ஒரு கட்டத்தில் அலுத்துப் போகிறது. கடலின் மேற்பரப்பை எட்டிப் பார்ப்பது, கடலை ஒட்டிய நிலப்பரப்பு குறித்து அறிந்துகொள்வது என பிரத்யேக ஆசைகள் பலவற்றை ரகசியமாக வைத்திருக்கிறான்.
அப்படியொரு நாள் யாரும் அறியாது கடலிலிருந்து வெளிப்பட்டு கரையேறுகிறான். விசித்திர மாயமாய் நீரிலிருந்து விடுபட்ட கணத்தில் அவனது உடல் மனித உரு கொள்கிறது. அப்படி தனக்கு முன்பே சாகசப் பயணம் தொடங்கியிருந்த அல்பெர்டோ என்ற இன்னொரு சிறுவனின் நட்பு லூகாவுக்குக் கிடைக்கிறது. இருவரும் சேர்ந்து நகரை ஒட்டிய தீவில் ரகசிய தங்குமிடத்தைக் கண்டடைகிறார்கள். அங்கே சுவரை அலங்கரித்திருக்கும் இத்தாலிய ஸ்கூட்டர் ரகமான ‘வெஸ்பா’ அவர்களை அதிகம் ஈர்க்க, அது குறித்த கனவுகளை வளர்த்துக்கொள்கிறார்கள். அங்கே இறைந்து கிடக்கும் உதிரிகளிலிருந்து மாதிரி ஸ்கூட்டர் ஒன்றை உருவாக்கியும் விளையாடி மகிழ்கிறார்கள். இருவரின் அடுத்தகட்ட இலக்கு நிஜமான ஸ்கூட்டரை அடைவதாகவும் அதற்காக நகருக்குள் பிரவேசிப்பதாகவும் இருக்கிறது.
விசித்திர அனுபவங்கள்
இதற்கிடையே மகனின் நடத்தையில் சந்தேகமுறும் லூகாவின் பெற்றோர் அவனை ஆழ்கடலில் வசிக்கும் சித்தப்பாவிடம் அனுப்ப திட்டமிடுகின்றனர். அவர்களிடமிருந்து தப்பிக்கும் லூகா, அல்பெர்டோவுடன் சேர்ந்து நகருக்குள் பிரவேசிக்கிறான். அங்கே விசித்திரமான அனுபவங்கள் அவர்களுக்குக் காத்திருக்கின்றன. ஜூலியா என்ற சிறுமியின் நட்பு, எர்கோல் என்ற அடாவடிப் பேர்வழியின் சீண்டல்கள் என பலவற்றையும் சந்திக்கிறார்கள். அப்போது தங்களது கனவான வெஸ்பா ஸ்கூட்டரை அடைவதற்கான வழியாக, ‘ட்ரையத்லான்’ போட்டியின் வெற்றியையும் அடையாளம் காண்கிறார்கள்.
கடலில் நீச்சல், பாஸ்தா சாப்பிடுவது, நகருக்குள் சைக்கிளில் விரைவது ஆகிய போட்டிகளை ஒருங்கே கொண்ட அந்தப் போட்டியில் ஜூலியாவுடன் இணைந்து பங்கேற்பது என சிறுவர்கள் இருவரும் முடிவு செய்கின்றனர். பல வருடங்களாக இந்தப் போட்டியில் சாம்பியனாக இருக்கும் எர்கோல் இதனை ரசிக்கவில்லை. போட்டி நாள் நெருங்கும்போது ஜூலியாவிடம் கடல் பூதத்தின் சுய உருவுடன் அம்பலப்படுகிறான் அல்பர்டோ. அவனை அப்போது காப்பாற்ற முன்வராத லூகா, பிற்பாடு நண்பனைச் சமாதானப்படுத்தும் நோக்கில் ‘ட்ரையத்லான்’ போட்டியில் தனியாளாய் பங்கேற்க முடிவு செய்கிறான்.
சொட்டுத் தண்ணீர் தேகத்தில் பட்டாலே லூகாவின் கடல் பூத குட்டு வெளிப்படும் ஆபத்து காத்திருக்க, எப்படி அவன் கடல் நீச்சலில் கலந்துகொண்டான், கனமழையில் எப்படி சைக்கிளை விரைந்து ஓட்டினான் என்பதை பல திருப்பங்களுடன் திரைப்படம் விவரிக்கிறது. ‘பிக்ஸார் ஸ்டுடியோ’ தயாரிப்பிலான அசத்தலான அனிமேஷன் திரைப்படத்தை ‘டிஸ்னி ப்ளஸ்’ வெளியிட்டுள்ளது. இத்தாலிய பின்னணியிலான கதை, குழந்தைகளுக்குப் புதுமையான அனுபவத்தை வழங்கும். குழந்தைகளுக்கான இந்த அனிமேஷன் திரைப்படம் பெரியவர்களைப் பொறுத்தவரை, குடியேறிகள், பாலின சிறுபான்மையினர் குறித்த பார்வையையும் தரும்.
****
நம்பிக்கை; அதானே எல்லாம்!
டிஸ்னியின் நேரடி தயாரிப்பிலான திரைப்படம் ‘ரயா அண்ட் தி லாஸ்ட் டிராகன்’. திரையரங்குகளிலும் ‘டிஸ்னி ப்ளஸ் ப்ரீமியர்’ தளத்திலும் ஒரே நேரத்தில் வெளியான இந்த அனிமேஷன் திரைப்படம், அதிக அளவிலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
டிராகன் வடிவிலான நதியின் கரைநெடுக குமந்த்ரா தேசம் பரவிக்கிடக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் அப்பகுதி மக்களுடன் நெருக்கமாய் வாழ்ந்துவந்த டிராகன்கள், கெட்ட சக்தியிலிருந்து மனிதர்களைக் காப்பாற்றும் நோக்கில் கற்களாக மாறி தியாகம் செய்கின்றன. இதில் நீர் டிராகன் ஒன்று மட்டும் தப்பிக்கிறது. டிராகன்களின் தியாகத்தைப் புரிந்துகொள்ளாத குமந்த்ரா தேசத்தின் ஐந்து ஆதிகுடிகளும் தங்களுக்குள் பிரிவினை வளர்த்து பிரிந்து வாழ்கின்றனர்.
மாணிக்கக் கல்லைத் தேடி...
கெட்ட சக்தியிலிருந்து மனிதர்களைக் காக்கும் அரிய ‘டிராகன் மாணிக்கக் கல்’, இந்தப் பிராந்தியத்தை ஆளும் தலைவன் வசம் ரகசியமாய் இருக்கிறது. அவன் தனக்குப் பின்னர் அக்கல்லைக் காப்பாற்றும் பொறுப்புக்காகத் தனது மகள் ரயாவுக்குப் போர்க்கலைகளைப் பயிற்றுவிக்கிறான். தன்னிடம் நட்பு பாராட்டும் இன்னொரு பிராந்தியத்தின் இளவரசியான நமாரியிடம் நம்பிக்கை அடிப்படையில் மாணிக்கத்தின் இருக்குமிடத்தைக் காண்பிக்கிறாள் ரயா. நம்பிக்கை துரோகம் செய்யும் நமாரி மாணிக்கக் கல்லைக் களவாட முயற்சிக்க, இழுபறியில் சிதறி உடையும் கல் ஐந்து பிராந்திய பிரதிநிதிகளிடமும் ஆளுக்கொரு துண்டாக அடைக்கலமாகிறது. உடைந்த கல்லின் வீரியம் குறைந்ததில் கெட்ட சக்தி மீண்டும் புத்துயிர் பெறுகிறது. ரயாவின் தந்தை உட்பட அதனிடம் சிக்கியவர்கள் எல்லாம் கற்சிலையாய் சமைகிறார்கள்.
அடுத்த ஆறு வருடங்களாக உடைந்த மாணிக்கத் துணுக்கு களைத் தேடியும், அதற்கு உதவும் கடைசி டிராகனைக் கண்டடை யவும் இளவரசி ரயாவின் சாகசப் பயணம் தொடர்கிறது. டிராகனுடன் வேறு சில நண்பர்களையும் சேர்த்துக்கொள்ள விசித்திரமான அனுபவங்களுடன் இறுதியாக நமாரியின் ஆளுகைக்கு உட்பட்ட பிராந்தியத்தை அடைகிறாள். ரயாவை வழிநடத்தும் டிராகன் அவளுக்கு பரஸ்பர நம்பிக்கை குறித்தும் அதற்கு அடிப்படையான நேசம் குறித்தும் பாடம் எடுக்கிறாள். இறுதியாக ரயாவின் நம்பிக்கை வென்றதா, மாணிக்க கல் முழுதாய் சேர்ந்ததா, கற்சிலையாய் சமைந்த மனிதர்களும் டிராகன்களும் மீண்டும் உயிர் பெற்றார்களா என்பதை அட்டகாசமான அனிமேஷன் ஆக் ஷன் காட்சிகளில் விறுவிறுப்பாய் சொல்கிறது ‘ரயா அண்ட் தி லாஸ்ட் டிராகன்’.
சமத்துவ அரசியல் பார்வை
தென்கிழக்கு ஆசிய மண்ணின் பின்னணியில் மாயாஜாலங்கள் தூவிய கதையில், நம்பிக்கை நேசம் என அடிப்படை விழுமியங்களை விதைக்கும் திரைக்கதை வயது வேறுபாடின்றி அனைவரையும் கட்டிப்போடும். ரயாவின் சாகசங்களைவிட வெள்ளந்தி குணத்துடன் வளைய வரும் சிஷு என்ற டிராகன் கதாபாத்திரமும் அதற்கு பின்னணிக் குரல் கொடுத்திருக்கும் அக்வாபினாவும் அதிகம் ஈர்க்கிறார்கள்.
குழந்தைகளுக்கு அடிப்படை அவசியமான நேசம், நம்பிக்கை இவற்றை வலியுறுத்துவதுடன், பெரியவர்களுக்கான சமத்துவ அரசியல் பார்வையையும் சீர்தூக்கி விடுகிறது ‘ரயா அண்ட் தி லாஸ்ட் டிராகன்’ திரைப்படம்.