ரசிகா
readers@kamadenu.in
விஷாலுடன் ‘ஆக்ஷன்’, தனுஷுடன் ‘ஜகமே தந்திரம்’, ‘மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ என தமிழ் சினிமாவில் தன்னுடைய டாப் கியர் ஆதிக்கத்தைத் தொடங்கியிருக்கிறார் ஐஸ்வர்யா லட்சுமி. திருவனந்தபுரத்தில் பிறந்து வளர்ந்த இவர் மருத்துவம் படித்த வர். ஆனால், மருத்துவராகப் பயிற்சி எடுக்கும் முன்பே மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். மலையாளத்தில் ‘மாயநதி’ தொடங்கி அசரடிக்கும் துள்ளல் நடிப்புக்காக கவனம் பெற்றுவரும் இவர், ‘ஜகமே தந்திரம்’ படத்தின் ஓடிடிவெளியீட்டை ஒட்டி, காமதேனு மின்னிதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி...
நீங்கள் இதுவரை நடித்துள்ள மலையாளப் படங்கள் அனைத்திலும் நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய கதாபாத்திரங்கள் அமைந்தது எப்படி?
இப்போது வேண்டுமானால் சினிமாவில் கொஞ்சம் வளர்ந்துவிட்டேன் என்று சொல்லலாம். ஆனால், மலையாளத்தில் நடிக்கத் தொடங்கியபோது நான் புதுமுகம். படத்தில் என்னுடைய கேரக்டர் பற்றி கொஞ்சம் சொல்லுவார்கள்... அவ்வளவுதான். என்ன கதை என்று வாயைத் திறந்து கேட்டிருந்தால் இத்தனை படங்களில் நடித்திருக்க முடியாது. இதை, எனது அதிர்ஷ்டம் அல்லது விதி என எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். நடிக்க வாய்ப்புள்ள கேரக்டர்கள் மட்டுமல்ல, ஃபகத் ஃபாசில், டோவினோ தாமஸ், நிவின் பாலி என்று அசுரத்தனமாக நடித்து பெயர் வாங்கியிருக்கும் ஸ்டார்களுடன் நடிக்கும் வாய்ப்பு தொடக்கத்திலேயே கிடைத்ததை நினைத்தால் எனக்கே ஆச்சர்யமாக இருக்கும்.
‘ஆக்ஷன்’ பட அனுபவம் அவ்வளவு சிறப்பாக அமையவில்லையா?
யார் சொன்னது..? சுந்தர்.சி, விஷால், தமன்னா, ராம்கி சார், சாயாஜி ஷிண்டே என அதில் எத்தனை லெஜண்டுகள்! அந்தப் படத்தில் நடித்தபோது நான் பேசியத் தமிழைக் கேட்டு, “தயவு செய்து தமிழில் பேசி அதைக் கொலை செய்யாதே” என்று என்னைக் கண்டு ஓட்டினார்கள். அப்போது எனக்குள் இருந்த ஈகோ விழித்துக்கொண்டது. ‘தமிழை நன்றாகக் கற்றுக்கொண்டு பேசிக்காட்டு’ என்று அது என்னை விரட்டியது. இப்போது நன்றாகத் தமிழ் பேசுகிறேன் என்று தனுஷும் கார்த்திக் சுப்பாராஜும் அவரது அசிஸ்டென்ட்டுகளும் என்னைப் பாராட்டுகிறார்கள். ‘ஜகமே தந்திர’த்தில் நடித்துள்ள அகிலா கேரக்டருக்கு நானே குரல் கொடுத்திருக்கிறேன். இப்போது சொல்லுங்கள் நான் நன்றி சொல்ல வேண்டியது ‘ஆக்ஷன்’ டீமுக்குத் தானே?
‘ஜகமே தந்திரம்’ படத்துக்கு உங்களைத் தேர்வு செய்த காரணத்தை கார்த்திக் சுப்பாராஜ் கூறினாரா?
அகிலா கேரக்டர், லண்டனில் வாழும் ஒரு இலங்கைத் தமிழ்ப்பெண். தவிர, படத்தில் நான் ஒரு பாடகி. “புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழ்ப் பெண்ணுக்குரிய தோற்றத்துடன் இருக்கிறீர்கள்” என்று சொன்னார் கார்த்திக் சுப்பாராஜ் சார். மலையாள உச்சரிப்புடன் நான் பேசும் தமிழ், இலங்கைத் தமிழ்போல் இருப்பதாகவும் சொன்னார். இவற்றுடன் ‘மாயநதி’யில் என்னுடைய நடிப்புப் பிடித்துப் போனதாகவும் கூறினார்.
சுமார் 2 மாதங்கள் லண்டனில் படப்பிடிப்பு... எப்படி உணர்ந்தீர்கள்?
லண்டன் குளிரை எப்படி மறக்கமுடியாதோ அப்படித்தான் ‘ஜகமே தந்திரம்’ டீமும். ஒரு குடும்பம் போலவே பழகினார்கள். நான் சட்டென்று ஹோம் சிக் ஆகிவிடும் ஒருத்தி. ஆனால், எனக்கு அந்த நினைப்பே வராதவாறு பார்த்துக்கொண்டார்கள். ஷூட்டிங் தொடங்கிய முதல்நாள் ஒரு சின்ன டயலாக். என்னால் திருத்தமாகப் பேச முடியவில்லை. ரீடேக் போய்க்கொண்டேயிருந்தது. ரொம்பவே பதற்றமாகி, அழுதுவிடலாமா என்றுகூட தோன்றியது. ஆனால், தனுஷும் வடிவுக்கரசி அம்மாவும் தான் “முதலில் பதற்றப்படுவதை நிறுத்து... அப்புறம் நடிப்பு எப்படி வருகிறது என்று பார்” என்று எனக்கு தைரியம் கொடுத்தார்கள். அதன்பிறகு படப்பிடிப்பு முழுக்க என்னுடைய ராஜ்ஜியம்தான்.
படம் பார்த்துவிட்டு தனுஷ் என்ன சொன்னார்?
என்னுடைய நடிப்பையும் கேரக்டரையும் ரொம்பவே பாராட்டினார். ‘பவர் பாண்டி’ படத்தின் ஆடிஷனில் நான் தேர்வாகவில்லை. அதை ஒரு விருது நிகழ்ச்சிக்காக விமானத்தில் ஒன்றாகப் பயணித்தபோது தனுஷிடம் நினைவூட்டினேன். “அந்தப் படத்தில் மிஸ் ஆனது இந்தப் படத்தில் உங்களுக்குக் கிடைத்துவிட்டது; கணக்கு நேராகிவிட்டது” என்றார். தனுஷ் ஒரு பிரில்லியன்ட் ஆக்டர் என்பது நான் சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை. இந்த நேரத்தில் நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். திறமையான நடிகர்களோடு நடிக்கும்போது நமக்கும் நடிப்பு பிய்த்துக்கொண்டு வரும்.
மலையாளத்தில் மிகவும் இயல்பாக நடிக்கும் நடிகர் யாரென்று நினைக்கிறீர்கள்?
லால்லேட்டன். சான்ஸே இல்லை... அவர் எந்தக் கேரக்டரில் நடித்தாலும் அந்தக் கேரக்டராகவே நம்மை நம்ப வைத்துவிடுவார். அது நெகட்டிவ் கேரக்டராக இருந்தாலும் அந்த சார்மிங்னஸ் சான்ஸே இல்லை. அது அவருக்கே உரிய ஸ்பெஷல்.
எல்லாம் போகட்டும்.. பொன்னியின் செல்வனில் உங்களுக்கு மணிமேகலை கதாபாத்திரம் என்று செய்திகள் வெளியானதே... அதைப் பற்றிக் கூறுங்கள்?
அதை மட்டும் கேட்காதீர்கள் ப்ளீஸ்... அந்தப் படத்தின் வெளியீட்டின்போது நாங்கள் அனைவரும் பேசத்தானே போகிறோம். இப்போதைக்கு ஒரு அப்டேட் தருகிறேன். இதுவரை 60 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. மணி சார் இயக்கத்தில் நடிப்பது எனக்கு கிடைத்த ஆசிர்வாதம் என்று பணிவோடு சொல்லிக்கொள்கிறேன்.
தற்போது என்னென்ன படங்களில் நடித்து வருகிறீர்கள்?
தமிழில் ‘பொன்னியின் செல்வன்’, மலையாளத்தில் ‘காணேக் காணே’, ‘அர்ச்சனா 31 நாட் அவுட்’, ‘பிஸ்மி ஸ்பெஷல்’, ‘குமாரி’ ஆகிய நான்கு படங்களிலும் தெலுங்கில் ‘கோட்சே’ என்கிற படத்திலும் நடித்து வருகிறேன்.