பகத்பாரதி
readers@kamadenu.in
“சின்ன வயசுலேயே சினிமாவில் நடிக்க ஆரம்பிச்சிட்டேன். பொதுவா டிவியில இருந்து சினிமாவுக்கு போவாங்க. நான் சினிமாவில இருந்து டிவிக்கு வந்தேன்” என புன்னகைக்கிறார் யமுனா சின்னதுரை. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘செந்தூரப்பூவே' தொடரிலும், சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘அபியும் நானும்' தொடரிலும் நடித்துக் கொண்டிருக்கும் அவருடன் பேசியதிலிருந்து...
வெள்ளித்திரை டூ சின்னத்திரை எப்படி?
ஸ்கூல் படிக்கும்போதே நடிக்க ஆரம்பிச்சிட்டேன். ‘வெயில்' படத்தில் நடிக்கும்போதெல்லாம் நான் ரொம்பச் சின்னப் பொண்ணு. ரொமான்டிக் காட்சிகளுக்கு பயந்து சினிமா வேண்டாம்னு சீரியலுக்கு வந்தேன். இப்போ சீரியலும் சினிமா அளவுக்கு டெவலப் ஆகிடுச்சு. வளர வளர நடிப்பு பற்றின புரிதலும், அதற்கேற்ற பக்குவமும் வந்துடுச்சு. கதைகளை நாம தேர்ந்தெடுக்கிறதுலதான் இருக்குங்கிறதை புரிஞ்சுகிட்டேன். இப்போ சினிமா, சீரியல்னு ரெண்டிலும் நடிச்சிட்டு இருக்கேன்.
‘அபியும் நானும்' சீரியலில் டீச்சர் கதாபாத்திரம் பயங்கரமா ரீச் ஆகியிருக்கே?
அந்த சீரியலில் எனக்கு அப்பப்பதான் காட்சிகள் இருக்கும். ஆனாலும், இந்த அளவுக்கு ரீச் ஆகியிருக்குன்னு நினைக்கும்போது மகிழ்ச்சியா இருக்கு. பலரும் சரவணன் - கீர்த்தி லவ் காட்சிகள் எப்போது வரும்னு கேட்டுட்டு இருக்காங்க. கண்டிப்பா சீக்கிரமே வரும்னு நானும் எதிர்பார்த்துட்டு இருக்கேன்.
‘செந்தூரப்பூவே' சீரியல் குறித்து..?
‘பிரியாள்' கதாபாத்திரம் என்னோட நிஜ கேரக்டர்ங்கிறதால ரொம்பவே நெருக்கமா உணர்ந்து நடிக்கிறேன். அண்ணியும், நாத்தனாரும் நண்பர்களாகவும் இருப்பாங்கன்னு காட்டுற மாதிரியான ஒரு கேரக்டர். ரஞ்சித் அண்ணா சீரியலில் மட்டுமல்ல நிஜத்திலும் ஒரு அண்ணன் மாதிரியே பழகுவார். அதே மாதிரிதான் சாந்தி வில்லியம்ஸ் அம்மாவும் நிஜத்திலும் அம்மா மாதிரி அக்கறையா பார்த்துப்பாங்க. நிஜத்தில அவங்க அக்கறையோட பழகுறதனால தான் நடிக்கும்போது கூட இயல்பாவே அந்த அன்பு வந்திடுது.
உங்களுடைய இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் அவ்வளவு வைரல் ஆகுதே?
ஷூட்டிங் ஸ்பார்ட் அவ்வளவு கலகலப்பா இருக்கும். நான், ஸ்ரீநிதி, தர்ஷா மூணு பேரும் சேர்ந்தா எதையாவது பேசிச் சிரிச்சுக்கிட்டே இருப்போம். எனக்கும், ஸ்ரீநிதிக்கும் பயங்கரமா செட் ஆகிடுச்சு. எந்த ஈகோவும் எங்களுக்குள்ள இல்லை. ரெண்டு பேரும் ஷூட் இல்லாதப்போ காமெடி வசனங்கள், பாட்டு, டான்ஸூன்னு ஏதாவது ரீல்ஸ் பண்ணிட்டு இருப்போம். எங்களுக்குள்ள ஒரு அக்கா, தங்கச்சி உறவு இருக்கு.
சீரியல் காஸ்டியூம் செலக்ஷன் எப்படி பண்றீங்க ?
இப்போலாம் சீரியல் கமிட் ஆகும்போதே சேனலில் அந்த கேரக்டருக்கு என்ன காஸ்டியூம் போடணும்னு சொல்லிடுறாங்க. ‘யாரடி நீ மோகினி' சீரியலில் ஒரே காஸ்டியூமில் கிட்டத்தட்ட நான்கு வருஷம் நடிச்சிட்டேன். இப்போ ‘செந்தூரப்பூவே' முழுக்க பட்டுப்புடவை மாதிரி கொஞ்சம் கிராண்ட் லுக் இருக்கிற மாதிரி காஸ்டியூம் போடுறேன். ‘அபியும் நானும்' பொறுத்தவரை டீச்சர் லுக் என்பதால் சிம்பிள் புடவைகளை தேர்ந்தெடுத்து உடுத்துறேன்.
நீங்க சூப்பரா சமைப்பீங்களாமே?
நான் சமைக்கிற மட்டன் பிரியாணிக்கும், சிக்கன் பிரியாணிக்கும் என் குடும்பமே அடிமை. வீட்ல பிரியாணி சமைச்சிட்டு எங்க குடும்பத்துல யாருக்காச்சும் சாப்பாடு கொடுத்து விடலைன்னா அவ்வளவு தான். சீரியஸாகவே என் கூட பேச மாட்டாங்க. ‘குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் என்னை சமைக்க கூப்பிட்டா நிச்சயமா போவேன். எனக்கு அந்த நிகழ்ச்சி ரொம்பப் பிடிக்கும். நானும் ஜாலியா கிண்டல் பண்ணி கலாய்ப்பேன். அதனால அந்த நிகழ்ச்சி எனக்கு செட் ஆகும்.
சினிமா வாய்ப்பு..?
ஒரு படத்தில் முக்கியமான ஹீரோ ஒருத்தருக்கு ஜோடியாக நடிச்சிருக்கேன். ரொம்ப எமோஷனலான கதாபாத்திரம். அது எனக்கு ரொம்பவே முக்கியமான படமா அமையும். இன்னும் ஒருசில படங்களில் எனக்கு பிடிச்ச மாதிரி கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிச்சிட்டு இருக்கேன்.