தமிழ் பெண்களுக்கு வாய்ப்புத் தரணும்!- அதுல்யா ரவி பேட்டி

By காமதேனு

ரசிகா
readers@kamadenu.in

‘காதல் கண் கட்டுதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான கோயமுத்தூர் பொண்ணு அதுல்யா ரவி. வி.இசட். துரையின் ‘ஏமாளி’, அன்பழகனின் ‘அடுத்த சாட்டை’, சமுத்திரக்கனியின் ‘நாடோடிகள் 2’ என அடுத்தடுத்து முக்கிய இயக்குநர்களின் தேர்வாக மாறிய அதுல்யாவின் நடிப்பில் இதுவரை 6 படங்கள் வெளியாகிவிட்டன. 4 படங்கள் வெளிவரக் காத்திருக்கின்றன. அவற்றில் ‘வட்டம்’, ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ ஆகிய படங்களுக்குச் சற்று அதிகமாகவே எதிர்பார்ப்பு உருவாகி இருக்கும் நிலையில், காமதேனு மின்னிதழுக்காக அவருடன் பிரத்யேகமாக உரையாடியதிலிருந்து ஒரு பகுதி...
    
உங்களுடைய குடும்பப் பின்னணியைக் கொஞ்சம் பகிருங்களேன்...

பிறந்தது வளர்ந்தது எல்லாமே கோவையில்தான். பள்ளி முடித்து, இளங்கலை வரை கோவையில் படித்தேன். பிறகு எம்.டெக்.,சென்னையில் முடித்தேன். தாத்தா பெயர் பெற்ற ஒரு மாட்டு வியாபாரி. தோட்டம், துரவு என்று பசுமையான வாழ்க்கை. தென்னை, மா, பலா, வாழை, கரும்பு என எல்லா விவசாயமும் எங்கள் பண்ணையில் நடக்கிறது. என்னைப் பற்றி சொல்ல இதைத் தாண்டி எதுவும் இல்லை.
    
சினிமாவில் எப்படி ஆர்வம் வந்தது?

நான் சினிமாவுக்கு வந்ததே ஒரு விபத்து என்கிற பதில் சர்வ நிச்சயமாக பொருத்தமாக இருக்கும். சினிமா மீது எனக்கு துளியும் ஆர்வம் இருந்ததில்லை. அதைப்பற்றி நான் யோசித்ததும் இல்லை. எல்லோரையும் போல் நானும் நல்ல சினிமா ரசிகை மட்டும்தான். கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் இன்ஜினியரிங் படித்துக் கொண்டிருந்தேன். முதலாம் ஆண்டில் என்னுடைய சீனியர்கள், “நாங்கள் எடுக்கப்போகும் குறும்படத்தில் நீதான் கதாநாயகியாக நடிக்கவேண்டும்... இதை எங்களுக்கு ஓர் உதவியாகச் செய்” என்று கெஞ்சிக் கேட்டார்கள். எனக்கு சங்கடமாகப் போய்விட்டது. வீட்டில் கேட்கிறேன்... அனுமதித்தால் மட்டுமே நடிப்பேன் என்றேன்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE