ச.கோபாலகிருஷ்ணன்
gopalakrishnan.sn@hindutamil.co.in
தமிழ் சினிமா உலகம் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை சந்தித்துக்கொண்டிருக்கிறது. நடிகர் விவேக் அகால மரணமடைந்து 15 நாட்கள் நிறைவடைவதற்குள் ஒளிப்பதிவாளர் - இயக்குநர் கே.வி.ஆனந்த் திடீர் மரணமடைந்திருக்கிறார். சினிமாவில் இயக்குநராகவும் ஒளிப்பதிவாளராகவும் சாதனைகள் செய்த கே.வி.ஆனந்த், பத்திரிகை ஒளிப்படக் கலைஞர், தீவிர வாசகர், அரசியல் - சமூக ஆர்வலர் என பன்முகத்தன்மை மிக்க ஆளுமையாக வாழ்ந்தவர்.
வாழ்வை வடிவமைத்த பயணங்கள்
சென்னையில் பிறந்து டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியில் இளநிலைப் பட்டமும் லயோலோ கல்லூரியில் காட்சித் தொடர்பியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர் ஆனந்த். கல்லூரிப் பருவத்தில் இமய மலை உட்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டபோது அங்கு கண்ட இயற்கை நிலக் காட்சிகளை ஒளிப்படக் கருவியில் படம்பிடிக்கத் தொடங்கினார். ஒளிப்படக் கலை மீது அவருக்கு ஆர்வம் வருவதற்கும், அதுவே அவருடைய வாழ்க்கையாக மாறுவதற்கும் இந்த இளமைக் கால பயணங்களே தொடக்கப்புள்ளியாக அமைந்தன.