எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in
திரையில் அவ்வப்போது அரசியல் தலைவர்களைப் பிரதான நாயகர்களாகச் சித்தரித்து படைப்புகள் உருவாகும். முதல்வர்களை நாயகர்களாகச் சித்தரிக்கும் படங்களும் அப்பட்டியலில் அடக்கம். ஓடிடி தளத்தில் சமகாலத்தில் வெளியாகியிருக்கும் இரண்டு ‘முதல்வர்’ படங்களை இந்த வாரம் பார்க்கலாம்!
‘மக்கள் பிரதிநிதிகளைத் திரும்பப்பெறும் உரிமை மசோதா’ என்பது நாட்டின் அதிகம் விவாதிக்கப்படும் அரசியல் பேசுபொருட்களில் பிரதானமானது. இதனை மையமாகக் கொண்டு மம்மூட்டி நடிப்பில் வெளியாகியிருக்கும் மலையாளத் திரைப்படம் ‘ஒன்’(One). கோவிட் பரவல் காரணமாகக் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான வேகத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்துக்குத் தாவிய திரைப்படங்களில் ‘ஒன்’னும் ஒன்று.
கேரளத்தின் அப்பழுக்கற்ற மக்கள் சேவகராக விளங்குகிறார் முதல்வர் ‘கடக்கல் சந்திரன்’. சொந்தக் கட்சியினராக இருந்தபோதும் ஊழலில் திளைப்போர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கிறார். முத்தாய்ப்பாக ஊழல் எம்எல்ஏ-க் களை மக்களே திரும்பப் பெறும் புரட்சிகரமான மசோதாவை சட்டசபையில் முன்வைக்கிறார். அதிர்ச்சியடையும் அரசியல்வாதிகள் கட்சி பேதமின்றி அவருக்கு எதிராகத் திரும்புகிறார்கள். முன்மாதிரி முதல்வருக்கும் அவரது அரசியல் வியூகத்துக்கும் வெற்றி கிடைத்ததா என்பதே படத்தின் கதை.