எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in
ஆஸ்கர் விருதுப் பட்டியலின் முழு நீள திரைப்படங்கள் அளவுக்குக் குறும்படங்கள் கவனம் பெறுவதில்லை. ஓடிடி தயவில் இம்முறை அக்குறை நீங்கியிருக்கிறது. 93-வது ஆஸ்கர் விழாவில் விருது வென்ற மூன்று அசத்தலான குறும்படங்களை இங்கே பார்க்கலாம்.
சிறந்த குறும்படத்துக்கான ஆஸ்கர் வென்ற ‘டூ டிஸ்டன்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ்’ (Two Distant Strangers), நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கிடைக்கிறது. சுமார் அரை மணி நேரமே ஓடும் இந்தக் குறும்படம் இனவெறிக்குப் பலியாகும் கறுப்பினத்தவரின் தீனக் குரலைக் கனமாக எதிரொலிக்கிறது.
கார்டர் என்ற கறுப்பின இளைஞனின் அன்றைய பொழுது அத்தனை அற்புதமாக விடிகிறது. முன்தினம் பழகத் தொடங்கிய பெண்ணின் படுக்கையிலிருந்து இன்று காலை கண் விழித்ததன் சிலிர்ப்பை இன்னும் அசைபோடுகிறான். படுக்கையை விட்டு எழாத அந்தப் பெண்ணும் அருகிலிருந்து அதனை ரசிக்கிறாள். அங்கிருந்து கிளம்பி வீதியில் இறங்கிய வேகத்தில் ஒரு வெள்ளையின போலீஸ்காரரின் சந்தேகக் கணைகளை எதிர்கொள்கிறான். உரையாடலின் ஒரு உக்கிர கணத்தில் அந்தப் போலீஸ்காரர் கார்டரைச் சுட்டுக் கொல்கிறார்.