உலகம் சுற்றும் சினிமா - 50: பொதுப்புத்தியை உடைத்த ‘புரோக்பேக் மவுன்டன்’

By க.விக்னேஷ்வரன்

‘LGBTQ’ - மூன்றாம் பாலினத்தவர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்களைக் குறிக்கும் இச்சொல் இன்று சமூகத்தின் மைய நீரோட்டத்தில் ஓரளவுக்குச் சகஜமாகக் கலந்துவிட்டாலும், நம்மூர் திரைப்படங்கள் தன்பாலின ஈர்ப்பாளர்களைக் கையாளும் விதம் மிகவும் மோசமாகவே இருக்கிறது.

இயற்கையில் எழும் பாலியல் உணர்வுகளை இந்தச் சமூகம் வரைந்து வைத்திருக்கும் வறண்ட கோட்டுக்குள் வரையறுக்க முடியாமல், தங்களின் சுயத்தை வெளிப்படுத்தவும் வகையில்லாமல் அனுதினமும் அவதிப்பட்டுக்கொண்டிருப்பவர்களை ‘அவனா நீ’ என்ற ஒற்றை வசனத்தில் உதாசீனப்படுத்திவிடுகிறது தமிழ் சினிமா. அத்திப்பூத்தாற்போல் எப்போதாவது ‘என் மகன் மகிழ்வன்' போன்ற ஒரு திரைப்படம் தமிழில் வரும். சரி, தமிழ் சினிமாவில் இந்த நிலைமை என்றால், உலக சினிமாவுக்கே உதாரணமாக இருக்கும் ஹாலிவுட்டில் தன்பாலின ஈர்ப்பாளர்களைப் பற்றிய சித்தரிப்பு எப்படி இருக்கிறது?

குறுகிய மனப்பான்மை

21-ம் நூற்றாண்டு தொடங்கிய பின்னர் ஹாலிவுட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக உருவாக்கப்பட்ட மூன்றாம் பாலின கதாபாத்திரங்களின் எண்ணிக்கை அதிகமானது. அதைத் தொடர்ந்து தன்பாலின ஈர்ப்பாளர்களைப் பிரதான கதாபாத்திரமாகக் கொண்டு சினிமாக்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், சினிமாவின் உயர்ந்த அங்கீகாரமான ஆஸ்கர் போட்டியில் தொடர்ந்து தன்பாலின ஈர்ப்பாளர்களை முன்னிலைப்படுத்தும் படங்கள் புறக்கணிக்கப்பட்டு வந்தன. ஆஸ்கர் தேர்வுக் குழுவில் உள்ளவர்களின் குறுகிய மனப்போக்கே இதற்குக் காரணம் என்று வெளிப்படையான குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்தக் குற்றச்சாட்டுகள், போராட்டங்களுக்கு முக்கியக் காரணமாக இருந்த திரைப்படம்தான் ‘புரோக்பேக் மவுன்டன்’ (2005). ‘க்ரௌச்சிங் டைகர், ஹிட்டன் டிராகன்’ (2000), ‘ஹல்க்’ (2003), ‘லைஃப் ஆஃப் பை’ (2012) போன்ற பல புகழ்பெற்ற திரைப்படங்களை இயக்கிய ஆங் லீ இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஆனி ப்ரூல் எழுதிய ‘புரோக்பேக் மவுன்டன்’ என்ற சிறுகதையைத் தழுவி திரைக்கதை ஆசிரியர்களான லேரி மெக்மர்ட்ரி மற்றும் டயானா ஓசானா எழுதிய திரைக்கதை இரண்டு கௌபாய்களின் காதல் கதை.

தனிமையில் மலரும் நேசம்

1963-ல் எனிஸ் டெல் மார், ஜாக் ட்விஸ்ட் என்ற இரண்டு இளம் கௌபாய்கள், பெரும் மந்தை உரிமையாளரான ஜோ ஆக்யூரிடம் வேலைக்குச் சேர்வார்கள். அவரது ஆட்டு மந்தையை கோடைக்காலம் முழுவதும் புரோக்பேக் மலைப் பிரதேசங்களில் மேய்ப்பதுதான் அவர்களது பணி. வனத் துறை அதிகாரிகளின் கெடுபிடிகள் காரணமாகப் புல்வெளி குறைவாக உள்ள பகுதியில் கூடாரம் அமைத்துத் தங்கிக்கொண்டு சில கிலோமீட்டர்கள் கடந்து மலையின் மேல் இருக்கும் புல்வெளிப் பிரதேசத்தில் ஆடுகளை மேய்க்க வேண்டும். எனிஸ் கூடாரத்தில் தங்கி உணவு சமைக்கும் வேலையைச் செய்வது எனவும், ஜாக் தினமும் ஆடுகளை மேய்க்கவும் உணவு நேரத்தில் மட்டும் கூடாரத்துக்கு வந்துபோவது எனவும் அவர்களுக்குள் முடிவெடுப்பார்கள். தொடர் தனிமையில் இருவருக்குள்ளும் ஆழ்ந்த நட்பு உருவாகும், நாளடைவில் நட்பு காதலாக மாறிவிடும். எனிஸ் தான் ஒரு தன்பாலின ஈர்ப்பாளன் இல்லை என்று ஆரம்பத்தில் மறுத்தாலும், அவனால் தன் உள்ளத்தில் கொதித்தெழும் காதலை மறைக்க முடியாமல் போய்விடும்.

மலைப்பிரதேசத்தின் வாட்டும் தனிமையில் இருவரும் தங்களுக்குள் நேசத்தைப் பகிர்ந்துகொள்வார்கள். இருவரும் நெருக்கமாக இருப்பதை ஒருநாள் மந்தை உரிமையாளர் ஜோ பார்த்துவிடுவார். அவர்களின் மேய்ச்சல் காலத்தைச் சீக்கிரமாக முடித்து அனுப்பிவிடுவார். இருவேறு திசைகளில் பிரிவார்கள் எனிஸும் ஜாக்கும். எனிஸ் தன்னுடைய காதலி ஆல்மாவைத் திருமணம் செய்துகொள்வான். குதிரைகளை அடக்கும் ரோடியோவான லூலரன் என்ற பெண்ணை ஜாக் மணந்துகொள்வான்.

காலம் அதன்போக்கில் ஒடத் தொடங்கும். எனிஸுக்கு இரண்டு மகள்கள், ஜாக்குக்கு ஒரு மகன் என்று அவர்கள் வாழ்க்கை மாறிப்போகும். புரோக்பேக் மலைப்பிரதேசத்தில் அவர்கள் நேசத்தைப் பகிர்ந்துகொண்டு நான்கு ஆண்டுகள் கழித்து ஜாக் ட்விஸ்ட், எனிஸைச் சந்திக்க வருவான். அவர்களுக்குள் இருக்கும் உறவைப் பற்றி எனிஸின் மனைவி ஆல்மா அறிந்துகொண்டாலும் குடும்பம் சிதைந்துவிடக் கூடாது என்பதற்காக அமைதி காப்பாள். அதன் பின்னர் 20 ஆண்டுகளாக எனிஸுக்கும் ஜாக்குக்கும் இடையே தொடரும் உறவுப்போராட்டத்தின் முடிவு என்ன என்பதே மனதை உருக்கும் சோகம் இழையோடும் இத்திரைக்காவியத்தின் மீதிக்கதை.

புரட்சி செய்த திரைக்காவியம்

பொதுவாக இச்சமூகத்தில் பாலுணர்வு நாட்டம் எனப்படுவது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேதான் இருக்க வேண்டும் என்ற கருத்தே ஆதிக்கம் செலுத்துகிறது. இதை ஆங்கிலத்தில் ஹெட்ரோநார்மாடிவிட்டி (Heteronormativity) என்பார்கள். இதன் நோக்கம் அனைத்து வகையிலும் தன்பாலின ஈர்ப்பாளர்களைக் கட்டுப்படுத்துவதுதான். ஆணாதிக்க மனப்பான்மையில் வழிநடத்தப்படும் இச்சமூகத்துக்கு ஓர் ஆணுக்குத் துணையாக ஒரு பெண்ணும், ஒரு பெண்ணுக்குத் துணையாக ஓர் ஆணும் தேவையில்லை என்ற கருத்து பெரும் அச்சத்தை அளிக்கிறது. அதனால்தான் இச்சமூகம், தன்பாலின ஈர்ப்பாளர்களை வலுக்கட்டாயமாக ‘திருத்த’ முயல்கிறது அல்லது எள்ளி நகையாடுகிறது. இதில் வெளிப்படுவது பிற்போக்குத்தனம் நிறைந்த ஆணாதிக்கச் சமூகத்தின் கையாலாகாத்தனமே.

‘புரோக்பேக் மவுன்டன்’ திரைப்படம் இன்னொரு புரட்சியையும் செய்தது. அமெரிக்க, இத்தாலிய சினிமாக்கள், கதைகள் மற்றும் காமிக்ஸ்களில் ஆண் மகனின் அடையாளமாகக் காட்டப்படுபவர்கள் கௌபாய்கள். ஆண்மையின் இலக்கணமாகத் திகழும் கௌபாய்களைப் பிரதான கதாபாத்திரமாகக் கொண்டே இவ்வளவு மென்மையான திரைமொழியைப் பேசி பொது கற்பிதத்துக்கும் எதிராகப் புரட்சி செய்தது இப்படம். எனிஸாக நடித்த ஹீத் லெட்ஜரும், ஜாக் கதாபாத்திரத்தில் நடித்த ஜேக் கீலன்ஹாலும் நடிப்பின் உச்சத்தைத் தொட்டிருப்பார்கள். குறிப்பாக, ஹீத் லெட்ஜரின் நடிப்பு மிக நுட்பமாக வெளிப்பட்டிருக்கும். (பின்னாட்களில் ‘தி டார்க் நைட்’ படத்தில் ஜோக்கராக நடித்து நடிப்பில் மிரட்டிய ஹீத் லெட்ஜர் 28 வயதிலேயே மரணமடைந்தது திரையுலகத்துக்கே பெரும் இழப்பு!)

அங்கீகரிக்கத் தவறிய ஆஸ்கர் குழு

சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் என்று எட்டு பிரிவுகளில் புரோக்பேக் மவுன்டன் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. எனினும், சிறந்த இயக்குநர், சிறந்த பின்னணி இசை, சிறந்த தழுவி எழுதப்பட்ட திரைக்கதை ஆகிய மூன்று பிரிவுகளில் மட்டுமே ஆஸ்கர் விருதைப் பெற்றது. இப்படத்தைச் சிறந்த திரைப்படமாகத் தேர்ந்தெடுக்காமல் போனது ஆஸ்கர் தேர்வு குழு செய்த மிகப்பெரும் தவறு என்று கண்டனக் குரல்கள் எழுந்தன. தன்பாலின ஈர்ப்பாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால்தான் இப்படத்தை ஆஸ்கர் குழு தவிர்த்தது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தன்பாலின ஈர்ப்பாளர்களைப் பற்றிப் பேசும் திரைப்படம் ஆஸ்கர் விருது வெல்ல அடுத்த 11 வருடங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. அத்திரைப்படத்தைப் பற்றி வேறொரு அத்தியாயத்தில் பார்ப்போம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE