ஓ.டி.டி. உலா: மகளைத் துரத்தும் தாயின் மர்மம்!

By காமதேனு

எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

திரையரங்குகளைக் குறிவைத்து வெளியாகும் திரைப்படங்கள் பலவும் பெருந்தொற்று பீதியால் அங்கு தாக்குப்பிடிக்க முடியாமல், சுடச்சுட ஓடிடி தளங்களுக்குத் தாவுவது புதிய போக்காகியிருக்கிறது. ஹாலிவுட் மற்றும் மல்லிவுட்டிலிருந்து அப்படியான இரண்டு படங்களை இந்த வாரம் பார்க்கலாம்.

மாற்றுத் திறனாளி மகளைப் பேணி வளர்ப்பதையே வாழ்க்கையின் ஒரே பிடிப்பாகக் கொண்ட பாசத் தாயின் கதை ‘ரன்’ ஹாலிவுட் திரைப்படம். ஒரு கட்டத்தில் அந்த மகள் விடுபட்டு ஓட முயற்சிக்கிறாள். தப்பித்து ஓடும் மகளுக்கும், பிடியை விடாத தாய்க்கும் இடையிலான எலியும் பூனையுமான போராட்டமும், அதன் பின்னணியிலான புதிர்களுமே இப்படத்தின் அடிநாதம். மனோதத்துவ த்ரில்லர் ரகமான இத்திரைப்படம் தமிழ்ப் புத்தாண்டு முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணக்கிடைக்கிறது.
இதய பாதிப்பு, ஆஸ்துமா, நீரிழிவு, பக்கவாதம் உட்பட பல்வேறு உடல் நலக் கோளாறுகளுடன் தனது அன்றாடப் பொழுதுகளைச் சிரமத்துடன் கழிக்கும் பதின்ம வயதுப் பெண் க்ளோயி. தாய் டயன், சிறுமி க்ளோயி இருவரும் வாஷிங்டனிலிருந்து ஒடுங்கிய நகரொன்றில் தனியே வசிக்கின்றனர். காலை கண் விழித்ததிலிருந்து இரவு படுக்கையில் சாயும்வரை ஏராளமான மாத்திரைகளின் தயவிலேயே க்ளோயி வாழ்கிறாள். தாய் டயனும் தனக்கென தனிப்பட்ட போக்கு ஏதுமின்றி மகளே கதியாகக் கிடக்கிறார். சிறிய நகர்வுக்கும் சக்கர நாற்காலியை நம்பியிருக்கும் க்ளோயி வீட்டிலிருந்தபடியே பள்ளிப் படிப்பையும் முடிக்கிறாள்.
17 வயதாகும் க்ளோயி, தான் விண்ணப்பிக்கும் மேற்படிப்புக்கான அனைத்து அழைப்புக் கடிதங்களும் மர்மமான முறையில் கையில் கிட்டாது தட்டிப்போவதாக உணர்கிறாள். ஒரு நாள் தாயின் மளிகைப் பையில் சாக்லெட்டுக்காகத் துழாவியதில் விசித்திர மருந்துப் புட்டிகள் தட்டுப்படுகின்றன. அதில் தென்பட்ட மாத்திரையின் பெயரைக் கணினியில் தட்டியதும் வீட்டின் இணைய இணைப்பே அறுபடுகிறது. ஏதோ மாயவலை தன்னைச் சூழ்ந்திருப்பதாக கணிக்கும் க்ளோயி, அங்கே தொடங்கி தாயின் நடவடிக்கைகளில் புதிரானவற்றைத் தோண்ட முயல்கிறாள்.

திடுக்கிடவைக்கும் உண்மைகள்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE