எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in
த்ரிஷாவின் 60-வது திரைப்படம் என்ற அறிவிப்போடு, தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது ‘பரமபதம் விளையாட்டு’ என்ற த்ரில்லர் திரைப்படம்.
அரசியல் கட்சித் தலைவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனையில் கண்காணிப்பு கேமராக்களை அகற்றச் சொல்கிறார் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர். தலைவரின் உடல்நிலை குறித்த உண்மையான மருத்துவ அறிக்கையைத் தவிர்த்துவிட்டு, தாங்கள் தரும் அறிக்கையை ஊடகங்களுக்கு விநியோகிக்குமாறும் கட்டாயப்படுத்துகிறார்கள். முன்னதாக கட்சித் தலைவருக்கு எதிராக தர்ம யுத்தம் தொடங்குமாறு நம்பர் 2 தலைவரிடம் ஓர் அல்லக்கை நச்சரிக்கிறார். அண்மை ஆண்டுகளில் தமிழக அரசியலைப் புரட்டிப் போட்ட சம்பவங்களை நினைவுபடுத்தும் காட்சிகளை நம்பி நிமிர்ந்து உட்கார்ந்தால், அடுத்தடுத்த காட்சிகளில் நம்மைச் சறுக்கிவிழச் செய்கிறது ‘பரமபதம் விளையாட்டு’.
தலைவர் எப்போது சாவார், நாற்காலியை எப்படி ஆக்கிரமிக்கலாம் எனப் பலரும் காத்திருக்க, அந்தத் தலைவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர் த்ரிஷா சிரத்தையோடு அவரைக் குணமாக்க முயற்சிக்கிறார். இதில் அதிருப்தியடையும் அரசியல் தலைகளின் மிரட்டலையும் சந்திக்கிறார். தலைவரின் சிகிச்சை முயற்சியில் வெளிநாட்டு மருத்துவரான அவரின் மகன் நந்தாவும் இணைந்துகொள்கிறார். ஆனபோதும் எதிர்பார்ப்புக்கு மாறாக தலைவர் இறந்துபோக, அந்த மரணத்தில் மருத்துவர் த்ரிஷாவுக்கு சந்தேகம் தொற்றிக்கொள்கிறது. ஐசியூ அறையின் மர்மங்கள் பொதிந்திருக்கும் ‘மைக்ரோ சிப்’ அவர் வசம் வந்ததும், வில்லன்கள் அவரையும் அவரது ஆறு வயது மகளையும் துரத்த ஆரம்பிக்கிறார்கள். அவர்களிடமிருந்து இருவரும் மீண்டார்களா, அரசியல் தலைவர் மரணத்தின் மர்மம் விடுபட்டதா என பரமபதத்தின் புதிர்களுக்கு க்ளைமாக்ஸில் விடை சொல்கிறார்கள்.