திரை விமர்சனம் என்பது வெவ்வேறு கோணங்களைக் கொண்டது. அதன் அடிப்படையில், பல்வேறு இதழ்களில் வெளியாகும் திரை விமர்சனங்களின் தொகுப்பை ‘காமதேனு’ வாசகர்களுக்குத் தருகிறோம். இது திரைப்படங்களைப் பற்றிய முழுமையான, செழுமையான பார்வையைத் தரும் என்று நம்புகிறோம்.
‘நாயகன் ஜே (ஏஹான் பட்) இசைத் துறையில் முத்திரைப் பதிக்க விரும்பும் இளைஞன். ஆனால், அவனது ஆர்வத்துக்கு அவனது தந்தை அனுசரனையாக இல்லை. நாயகி சோஃபி சிகானியா (எடில்ஸி வர்காஸ்) ஒரு பெரும் தொழிலதிபரின் மகள். வாய் பேசும் திறனற்றவர். தன்னை வெளிப்படுத்த ஓவியம் வரைவதிலும் நடனம் ஆடுவதிலும் ஈடுபடுகிறார். ஒருகட்டத்தில் ஜேயும், சோஃபியும் காதலில் விழுகின்றனர்’ என்று தொடங்கும் ‘ரெடிஃப்’ இணைய இதழின் விமர்சனம், '99 சாங்ஸ் திரைப்படம், இசைத் துறை சார்ந்த கிளிஷேக்களின் தொகுப்பு என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை. அதுமட்டுமல்ல, கோர்வை இல்லாமல் துண்டுகளாக வரும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் சரியாகக் கோக்கப்படாததால் எரிச்சல் மூட்டுகின்றன. கதாபாத்திரங்களை முழுமையடையச் செய்வதற்கான சந்தர்ப்பங்களைப் படக் குழுவினர் தவறவிட்டிருக்கிறார்கள்’ என்று விமர்சித்திருக்கிறது.
‘இசை சக்தி வாய்ந்தது. அது இனிமையானது. உலகெங்கும் மாற்றத்தை விளைவிக்கக்கூடியது. இதற்கு ‘99 சாங்ஸ்’ படத்தின் இசையமைப்பாளரும் எழுத்தாளருமான ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு வாழும் உதாரணம். துரதிருஷ்டவசமாக, எழுத்தாளர் ரஹ்மானுக்கு அப்படியான ஒரு கருத்தாக்கத்தை அகன்ற திரைக்கு ஏற்ப மொழிபெயர்க்கும் திறன் இன்னமும் வாய்க்கவில்லை’ என்று கூறியிருக்கும் ‘தி இந்து’ ஆங்கில இணைய இதழின் விமர்சனம், ‘காட்சிபூர்வமான கதைசொல்லலில் ‘99 சாங்ஸ்’ திரைப்படம் துறை சார்ந்த படமாக, குறிப்பாக, இசைக் கருவிகளுடன் நெருங்கிய தொடர்புடையவர் களுக்கான படமாக உருவாகியிருக்கிறது. இசை உருவாக்கம் தொடர்பான அற்புதமான காட்சிகள் படத்தில் உண்டு. அவையும் இசைத் துறை சார்ந்தவர்களுக்கான ரசனைக்கு மட்டும் பொருத்தமானவை’ என்றும் குறிப்பிட்டிருக்கிறது. மேலும், ‘இந்தப் படம் அடிப்படையில் ஓர் இந்திப் படம். வசனங்கள் தமிழில் டப் செய்யப்பட்டிருக்கின்றன. ஏதோ ஸ்டார் விஜய் சேனலில் ஜாக்கிசான் படங்களைத் தமிழ் டப்பிங்கில் பார்த்ததுபோல் இருக்கிறது. தென்னிந்திய ரசிகர்களுக்கான பொருத்தப்பாடு படத்தில் குறைவுதான். குறிப்பாக, தமிழ் ரசிகர்களுக்கான அம்சங்கள் மிகக் குறைவு’ என்றும் ‘தி இந்து’ ஆங்கில இணைய இதழ் கூறியிருக்கிறது.
‘இந்தப் படத்தின் கதை இதுதான். நாயகன் ஒரு இசைக் கல்லூரியில் படிக்கிறார். பேச்சுத் திறனற்ற ஒரு பெண்ணைக் காதலிக்கிறார். அந்தப் பெண் தன் தந்தையிடம் நாயகனை அறிமுகப்படுத்தி வைக்கிறார். அந்தப் பெண்ணின் தந்தை நாயகனிடம், நீ 100 பாடல்களைக் கம்போஸ் பண்ணு. அதில் ஒரு பாட்டு உலகம் முழுவதும் பேசப்படும் அளவுக்கு அமையட்டும். அதற்குப் பிறகு என் பெண்ணை உனக்குத் திருமணம் செய்துவைக்கிறேன் என்று சொல்கிறார். 100 பாடல்களைக் கம்போஸ் பண்ணும் பயணத்தில் நாயகன் வெற்றி பெறுகிறாரா, காதலியைக் கரம்பிடிக்கிறாரா என்பதுதான் கதை’ என்று சொல்லும் ‘ஜெயா டிவி’யின் திரை விமர்சனத் தொகுப்பாளர், ‘ஆரம்பம் முதல் இறுதிவரை விஷூவல் ட்ரீட்டாக இந்தப் படம் இருக்கிறது. பாடல்கள் எல்லாம் கதைக்கு ஏற்றவாறு இருக்கின்றன. எனினும், படத்தில் நம்பகத்தன்மை குறைவு’ என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்!