பரந்து விரிந்த இப்பூமியின்மேல் தன் குறுகிய புத்தியைக் கொண்டு மனிதன் எல்லைக்கோடுகள் வரைய ஆரம்பித்த பின்னர்தான், இன்னல்கள் தொடங்கின எனலாம். அப்படியான வரலாற்றில் சில தருணங்கள் மிக மிக இருண்ட பக்கங்கள். அவற்றில் முக்கியமானது ஜெர்மானிய நாஜிப் படை யூதர்கள் மீது நடத்திய இனப்படுகொலை.
1933-ல் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு சிறுகச் சிறுகத் திட்டமாகத் தீட்டப்பட்டு, பின்னர் செயல்வடிவம் பெற்ற கொடூரம் அது. 1945 வரை நடந்த இனப்படுகொலையில் 60 லட்சம் யூதர்களும், ஜெர்மானியர் அல்லாதவர்களும் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தோராயமாகக் கணக்கு சொல்லப்படுகிறது.
வரலாற்றின் கறுப்புப் பிரதிகளாக எஞ்சி நிற்கும் இந்த அவலத்தின் சாட்சியாகக் கலை உலகில் பல திரைப்படங்கள், ஆவணப் படங்கள், கதைகள் இருக்கின்றன. ஆனால், இந்தக் கோர நிகழ்வை நகைச்சுவை வழியாகப் பிரதிபலித்து, அதேசமயம் யூதர்களின் வலியையும் சமரசமின்றி பதிவுசெய்து உலகின் கவனத்தை ஈர்த்த இத்தாலி மொழித் திரைப்படம்தான் ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்' (1997). ‘நத்திங் லெஃப்ட் டு டூ பட் க்ரை’, ‘தி லிட்டில் டெவில்’ போன்ற படங்களை இயக்கி நடித்த ராபர்ட்டோ பெனினிதான் இத்திரைப்படத்தின் இயக்குநர் மற்றும் கதாநாயகன். வின்சென்சோ செராமியுடன் பெனினி எழுதிய திரைக்கதை பாராட்டுகளோடு சேர்ந்து விமர்சனங்களையும் எதிர்கொண்டது.
விளையாட்டுக்கூடமான வதைக்கூடம்
1939-ல் இத்தாலியின் ஒரு மூலையில் இருக்கும் தன்னுடைய கிராமத்திலிருந்து, தன் மாமாவின் உணவு விடுதியில் பணிபுரிவதற்காக நகரத்துக்கு வருவார் யூதரான குய்டூ. இயல்பாகவே நகைச்சுவை உணர்வும், சாமர்த்தியமும் வாய்த்த குய்டூ, நகரத்தில் தோரா என்ற யுவதியைக் கண்டவுடன் காதல் கொள்வார். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் தோரா யூதப் பெண் அல்ல. தோராவின் விருப்பமின்றி அவளது அம்மா அவளுக்கு ஒருவரை நிச்சயம் செய்திருப்பதை அறியும் குய்டூ, நிச்சயதார்த்தம் நடந்துகொண்டிருக்கும்போதே தோராவின் சம்மதத்தோடு அவளை அழைத்துச் சென்று திருமணம் செய்துகொள்வார்.
சில வருடங்கள் கழித்து தன் மனைவி, தனது ஐந்து வயது மகன் ஜோஷ்வாவுடன் அதே நகரத்தில் புத்தகக் கடை வைத்து நடத்திக்கொண்டிருப்பார் குய்டூ. 1944-ல் இரண்டாம் உலகப்போரின் இறுதிக்காலத்தில் அந்தக் கொடுங்காலம் வந்துசேரும். ஜோஷ்வாவின் ஐந்தாவது பிறந்தநாளன்று குய்டூ, அவரது மாமா, அவரது மகனோடு சேர்த்து அந்த ஊரில் உள்ள பல யூதர்களை ஜெர்மானியர்கள் கைது செய்து ரயிலில் ஏற்றி சித்திரவதை முகாமுக்கு அணுப்பிவிடுவார்கள். இதை அறியும் தோரா, தான் ஒரு யூதர் இல்லையென்றாலும் தானும் அந்தச் சித்திரவதை கூடத்துக்குப் போக விரும்புவதாகக் கூறி ரயிலில் ஏறிவிடுவாள். சித்திரவதைக் கூடத்துக்கு வந்து சேர்ந்ததும் தோரா பெண்களுக்கான பகுதிக்கு அனுப்பப்பட்டுவிடுவாள். குய்டூவின் மாமா முதியோர் பகுதிக்கு அனுப்பப்படுவார். குய்டூவும் மகன் ஜோஷ்வாவும் ஆண்களுக்கான பகுதியில் அடைக்கப்படுவார்கள்.
தன் மகனுக்கு, தாங்கள் ஒரு கொடூரமான சித்திரவதைக் கூடத்தில் இருக்கிறோம் என்பது தெரிந்து விடக்கூடாது என்பதற்காக ஓர் உத்தியைக் கையாள்வார் குய்டூ. “உன்னுடைய பிறந்தநாளுக்காக நாம் இந்த இடத்துக்கு வந்திருக்கிறோம். இது ஒரு விளையாட்டு, இதில் நாம் வெற்றிபெற ஆயிரம் புள்ளிகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் இவர்கள் கொடுக்கும் வேலையை ஒழுங்காகச் செய்ய வேண்டும். ஆயிரம் புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றுவிட்டால், ஒரு பெரிய பீரங்கி பரிசாகக் கிடைக்கும். ஆனால், இதில் வெற்றிபெற நீ மூன்று விதிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும். எப்போதும் அழக் கூடாது, அம்மாவிடம் போக வேண்டும் என்று அடம்பிடிக்கக் கூடாது, நொறுக்குத் தீனி வேண்டும் என்று கேட்கக் கூடாது” என்று ஜோஷ்வாவிடம் கூறிவிடுவார் குய்டூ. தந்தையின் பேச்சைக் கேட்டு அதன்படியே நடக்க ஆரம்பிப்பான் ஜோஷ்வா. சித்திரவதைக் கூடத்தில் இருந்து அனைவரும் மீண்டார்களா, ஜோஷ்வாவுக்குப் பீரங்கி கிடைத்ததா என்பதே படத்தின் மீதிக் கதை.
மென்சோக நகைச்சுவை
இப்படம் போரினால் ஏற்படும் இழப்பை உணர்வுரீதியாக நம்முள் ஏற்படுத்தினாலும், ஒரு காட்சிகூட கொலையையோ அல்லது இறப்பையோ நேரடியாகக் காட்சிப்படுத்தவே இல்லை. மரணத்தை நேரடியாகக் காட்சிப்படுத்தாமலேயே இவ்வளவு அழுத்தமான கதைக்களத்தை அமைத்த பெனினியின் திறமையை உலகமே உச்சி முகர்ந்து வரவேற்றது. யூத இனப்படுகொலைகளை இப்படி நகைச்சுவையாகக் கதையாடலாமா என்று சில விமர்சனங்கள் எழுந்தாலும் அவை அனைத்தையும் மீறி, இத்திரைப்படம் ஓர் உன்னதத் திரை அனுபவமாக நிலைத்து நிற்கிறது.
இத்திரைப்படம் 3 ஆஸ்கர் விருதுகள் உட்பட பல விருதுகளைக் குவித்துள்ளது. முதல்முறையாக, ஆங்கில மொழி அல்லாத ஒரு படத்தின் கதாநாயகனுக்குச் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது பெனினிக்கு வழங்கப்பட்டது.
தந்தை எனும் நற்செயல்
சற்று உற்றுக் கவனித்தால் இத்திரைப்படம் போர், யூதர், நாஜி இவர்களை மையமாகக் கொண்டதல்ல என்பதை உணர முடியும். உலகமே இடிந்து விழுந்தாலும் தன் மகனின் முகத்தில் உள்ள மழலைச் சிரிப்பு குன்றிவிடாமல் இருக்க, என்ன விலையையும் தரத் தயாராக இருக்கும் ஒரு தந்தையைப் பற்றிய கதை இது. இது உலகத் தந்தைகளின் கதை. தான் அழுதாலும் தன் பிள்ளைகள் சிரிக்க வேண்டும் என்று ஓடிக்கொண்டிருக்கும் ஒவ்வொரு தந்தையின் கதை. எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சொன்னதுபோல், “தந்தை என்பதே ஒரு நற்செயல்தானே?” ஒரு நேர்காணலில், “அழுகையோ, சிரிப்போ இரண்டும் ஆன்மாவின் ஒரே இடத்திலிருந்து உருவாகுபவை தான்” என்று பெனினி கூறியிருப்பார். இத்திரைப்படம் சிரிப்புடன் அழுகையைக் கலந்து உங்கள் ஆன்மாவைத் தொட வல்லது.