திரை விமர்சனம் என்பது வெவ்வேறு கோணங்களைக் கொண்டது. அதன் அடிப்படையில், பல்வேறு இதழ்களில் வெளியாகும் திரை விமர்சனங்களின் தொகுப்பை ‘காமதேனு’ வாசகர்களுக்குத் தருகிறோம். இது திரைப்படங்களைப் பற்றிய முழுமையான, செழுமையான பார்வையைத் தரும் என்று நம்புகிறோம்.
‘எப்போதும் படித்துக்கொண்டே இருக்கும் இளைஞன் ஆர்யா. ஒருமுறை படித்துவிட்டால் அதை மறக்காமல் மூளையில் ஏற்றிக்கொள்ளக்கூடிய திறமை அவரிடம் உண்டு. ஒரு சிறிய விபத்தில் சிக்கி தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் சாயிஷா, அங்குள்ள உறுப்புகள் திருடும் கும்பலால், கோமா நிலைக்குத் தள்ளப்படுகிறார். அவரது எனர்ஜி (இறப்பதற்கு முன் ஆவியாகுவது என்றும் வைத்துக்கொள்ளலாம்), அந்த ஆவி அங்குள்ள ஒரு டெடி பொம்மைக்குள் சென்றுவிடுகிறது. அந்த டெடிக்குள் இருக்கும் சாயிஷா என்ன செய்வது என்றறியாது, ஆர்யாவிடம் செல்கிறார். தனது கதையை அவரிடம் கூறுகிறார். ஆர்யா என்ன செய்தார், ஆர்கன் திருடும் கும்பலைக் கண்டுபிடித்தாரா, சாயிஷாவின் உடலுக்குள் அவரது உயிர் சென்றதா, இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை’ என்கிறது ‘தமிழ் வீதி’ இணைய இதழ்.
‘புதுமையான கதையைத் திரையில் காட்டுவது சாதாரண விஷயம் அல்ல. அதில் இயக்குநருக்கு முழு வெற்றி கிடைக்காவிட்டாலும் அவரின் முயற்சியைப் பாராட்ட வேண்டும். டெடி பொம்மை செய்யும் காரியங்கள், அதற்கும் ஆர்யாவுக்குமான கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது. கதை இப்படியே ஜாலியாகச் செல்லாது சீரியஸாகிவிடும் என்று தெரிந்தும் ரசிக்க வைக்கிறது’ என்று குறிப்பிட்டிருக்கும் ‘சமயம் தமிழ்’ இணைய இதழ், ‘ஆர்யா தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். இமானின் இசை படத்திற்குப் பக்கபலமாக இருக்கிறது. டெடி கதாபாத்திரத்திற்கான விஎஃப்எக்ஸ் பணியைப் பாராட்ட வேண்டும். ஆர்யாவைத் தவிர பிற கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் இல்லை’ என்று விமர்சித்திருக்கிறது.
“இந்தப் படத்தைப் பார்க்கும்போது, 2005-ல வெளியான ‘ஜஸ்ட் லைக் ஹெவன்’ ஹாலிவுட் படமும், 2012-ல வெளியான ‘டெட்’ படமும் நம்ம நினைவுக்கு வந்துட்டுத்தான் போகுது. குறிப்பாக, டெடி பியரின் கதாபாத்திரம் ‘டெட்’ படத்துல இருந்து அப்படியே எடுக்கப்பட்டதுதான். இருந்தாலும், இந்தப் படத்துல அதை நீட்டாக வொர்க் அவுட் பண்ணியிருக்காங்க” என்று சொல்லும் ‘ஃபில்மி கிராஃப்ட்’ யூடியூப் சேனலின் அருண், “இந்த அளவுக்குப் பிசிறே அடிக்காத ஒரு அனிமேஷன் படத்தைப் பார்த்துப் பல நாள் ஆகுது. யுவாவின் ஒளிப்பதிவும், டி.இமானின் இசையும் படத்துக்குப் பலம்” என்று பாராட்டியிருக்கிறார். அதேசமயம், படத்தின் முதல் பகுதியில் இருக்கும் சுவாரசியம், இரண்டாம் பகுதியில் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.