உலகம் சுற்றும் சினிமா - 46: அப்பாவுடன் ஒரு பயணம்

By க.விக்னேஷ்வரன்

நம் வாழ்வின் முதல் வழிகாட்டி தந்தைதான். குறிப்பாக ஆண்களுக்கு. ஒரு ஆணுக்கும் அவனது தந்தைக்கும் இருக்கும் உறவு என்பது சற்றே சிக்கலான ஒன்று.

பால்யத்தில் மகனின் கண்களுக்கு ஒரு தேவதூதுவனைப் போல் தெரியும் தந்தை, காலப்போக்கில் வெறுக்கத்தக்கவராக மாறிவிடுகிறார். இது எதனால் நடக்கிறது? ஒரு மகன் வளர்ந்து பதின்பருவத்தை அடையும்போது, அவன் மீது தந்தை காட்டும் அக்கறை அவனுக்குப் பெரும்பாரமாக இருக்கிறது. சிறகடித்துப் பறக்க நினைக்கும் மகனுக்கு, வாழ்க்கை எனும் வானத்தில் தான் கண்ட ஆபத்துகளைச் சொல்லி தந்தை எச்சரிப்பது எரிச்சலைக் கொடுக்கிறது. அது. அவர் மீது கடுங்கோபமாக மாறுகிறது. இன்று மகன்களின் கோபத்துக்கு உள்ளாகி மனதுக்குள் புழுங்கித் தவிக்கும் அனைத்து அப்பாக்களும், மகன்களாக இருக்கும்போது, இதேபோல் தத்தமது தந்தையர்களிடம் நடந்துகொண்டவர்கள்தானே!

இந்தச் சுழல் சக்கரம் அன்பை, வெறுப்பை, கண்டிப்பை, அக்கறையைத் தன்னுள் கலந்து சதா சர்வகாலமும் சுழன்றுகொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட தந்தை - மகன் உறவை மிக உணர்வுபூர்வமாகக் காட்சிப்படுத்திய திரைப்படம்தான், 2003-ல் ரஷ்ய மொழியில் வெளியான ‘தி ரிட்டர்ன்’. 

வெனிஸ் திரைப்பட விழாவில் ‘தங்கச் சிங்கம்’ விருது உட்பட, பல விருதுகளைக் குவித்த இப்படத்தை இயக்கியவர் ஆண்ட்ரி ஸ்வ்கின்ஸ்டெவ்.

வீடு திரும்பும் தந்தை

ஆண்ட்ரே மற்றும் இவான் இருவரும் சகோதரர்கள். தங்களுடைய சிறு வயதில் வேலை நிமித்தமாகத் தங்களைவிட்டுப் பிரிந்துபோன தகப்பனைப் பற்றிய நினைவே இல்லாமல், தாய் மற்றும் பாட்டியுடன் வாழ்ந்து வருவார்கள். ஒருநாள் அவர்களது விளையாட்டு, சண்டையில் முடிய... சண்டை போட்டுக்கொண்டே வீட்டுக்கு வரும் இருவருக்கும் ஆச்சரியம் காத்திருக்கும். 12 வருடங்களுக்கு முன்பு தங்களைவிட்டுப் பிரிந்துபோன தந்தை திரும்பி வந்திருப்பதாக அவர்களது அம்மா தெரிவிப்பாள். தூங்கிக்கொண்டிருக்கும் அப்பாவை மிரட்சியுடன் மறைந்திருந்து பார்ப்பார்கள் சகோதரர்கள்.

அன்று இரவு உணவு உண்ணும்போது, அதிகம் பேசாதவராக, கண்டிப்பு நிறைந்த மனிதராகத் தோன்றும் அப்பாவிடம் பேச ஆரம்பிப்பான் மூத்த மகனான ஆண்ட்ரே. “வெளியே நிற்கும் காரில் எங்களை அழைத்துச் செல்வீர்களா?” என்று அவன் தயங்கியபடி கேட்க, “நாளை நாம் சுற்றுலாவே செல்லப் போகிறோம். தயாராக இருங்கள்” என்று அப்பா சொல்லிவிடுவார்.

குதூகலமாகச் சுற்றுலாவுக்குக் கிளம்புவார்கள் இரண்டு சகோதரர்களும். விமானியாக இருந்தவர் என்று அம்மாவால் சொல்லப்பட்ட அப்பாவின் மேல், இளைய மகன் இவானுக்கு ஒட்டுதலே வராமல் இருக்கும். அப்பாவிடமும் ஒரு ரகசியம் இருக்கும். மீன் பிடிக்கலாம் என்ற திட்டத்துடன் அவர்கள் செல்வார்கள். எனினும் பயணத்தை மாற்றி, உடைந்து கிடக்கும் ஒரு படகைச் சரிசெய்து கடலுக்கு நடுவில் இருக்கும் தீவுக்கு அழைத்துச் சென்றுவிடுவார் அப்பா. அங்கே அவர்களுக்குள் நடக்கும் உணர்வுப் போராட்டமே படத்தின் மீதிக் கதை.

கண்டிப்பும் கனிவும்

இத்திரைப்படத்தில் வரும் தந்தை, தன்னுடைய மகன்களிடம் தன்னுடைய குணங்கள் இருக்க வேண்டும் என்றே எதிர்பார்ப்பார். ஆனால் மகன்கள் இருவரும் அவரவர் அளவில் தனித்துவமானவர்கள் என்பதை உணர அவர் மறந்துவிடுவார். 12 வருடங்களுக்குப் பிறகு திடீரென்று தோன்றும் அப்பாவை எப்படி அணுகுவது என்பது தெரியாமல் தவிக்கும் மகன்களின் ஊடாட்டம், பல காட்சிகளில் உணர்வுபொங்கப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தந்தை பல நல்ல விஷயங்களைச் சொன்னாலும் அவருடைய குறைகளையும் சேர்த்தே மகன்கள் அவரை மதிப்பிடுவார்கள். இதனால், அவர் சொல்லும் நல்ல விஷயங்களை அவர்களால் மதிக்க முடிவதில்லை. குறிப்பாகத் தங்கள் காரைக் கடந்துசெல்லும் பெண்மணியை, தந்தை கண்ணாடி வழியாக ரசிப்பதை இளைய மகன் இவான் வெறுப்புடன் கவனிக்கும் காட்சி, ஆண்டாண்டு காலமாக அப்பாக்களின் மீது மகன்களுக்கு எழும் வெறுப்பின் சிறந்த உதாரணம்.

திருடர்களை எதிர்கொள்ள, சக மனிதர்களுக்கு மரியாதை தந்து பேச, சகதியில் சிக்கிய காரை வெளியே எடுக்க, உணவுக்கு மதிப்பளிக்க, சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ள, படகு ஓட்ட, நேரத்தைக் கடைபிடிக்க என்று பல விஷயங்களை அந்தப் பயணத்தில் சொல்லித்தருகிறார் தந்தை. ஆனால்… அவர் ‘அப்பா’ அல்லவா? அதனாலேயே அவரது வார்த்தைகளுடன் கண்டிப்பும் கலந்திருக்கும்.

உறவுச் சிக்கலின் கண்ணி

வேலையும், வெளியுலகும் தந்த அனுபவம் அவரது உடலோடு சேர்த்து உள்ளத்தையும் கடுமையாக மாற்றிவிடுகிறது. அதைத் தாங்கிக்கொள்ள மகன்களின் பிஞ்சு மனம் தயாராக இல்லை. அதன் விளைவாகத்தான், “இன்னொரு முறை என்னை அடித்தால், உங்களைக் கொன்றுவிடுவேன்” என்று இவான் கத்தியைத் தூக்குகிறான். “நீ தவறாகப் புரிந்துகொண்டாய் மகனே!” என்று கதறுகிறார் தந்தை. முதன்முறையாகத் தன்னை ‘மகனே’ என்று கூப்பிட்டவுடன், கழிவிரக்கம் உந்தித்தள்ளக் கத்தியைத் தூக்கி எறிந்துவிட்டு தீவின் மூலையில் இருக்கும் கோபுரத்தின் மேலேறிக் குதிக்க ஓடுகிறான் இவான். அவனைத் துரத்திக்கொண்டு தந்தை ஓடுகிறார். ஆனால், விதி அவர்களது முடிவைத் துண்டாடிவிடுகிறது.

கத்தியைத் தூக்கி எறிந்துவிட்டு தந்தையின் கரங்களுக்குள் அணைத்துக்கொள்ள ஓடாமல் இவானை எதிர்த்திசையை நோக்கி ஓடவைத்தது எது? என்ற கேள்வியிலிருந்தே தந்தை - மகன் உறவுச் சிக்கலின் மீதான விசாரணையை நாம் தொடங்க வேண்டும்.

இப்படி ஓர் அதி முக்கியமான கேள்வியை எழுப்பிய ‘தி ரிட்டர்ன்’ திரைப்படம், ஒரு மிகச் சிறந்த திரை அனுபவம். அப்பாவுடன் அவர்கள் கிளம்பிய பயணத்திலிருந்து அவர்கள் வீடு திரும்பும் தருணம் வரை ஆண்ட்ரே, இவான் மட்டுமல்ல நம் மனதிலும் நமது அப்பா எனும் தேவதூதுவனின் உருவம் எழுந்து மறைவதைத் தவிர்க்க முடியாது!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE