உலகம் சுற்றும் சினிமா - 45: மறக்கப்படும் மனிதனும் ஒதுக்கப்படும் மிருகமும்! 

By க.விக்னேஷ்வரன்

யானையைக் கட்டித் தீனி போடுவது என்பது எத்தனை சவாலான விஷயம் என்று நமக்குத் தெரியும். அப்படியான அசந்தர்ப்பம் எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. எனினும் உலகின் எங்கோ ஒரு மூலையில், யாரேனும் ஒருவருக்கு அப்படியான அனுபவம் நேர்வதுண்டு. ‘விரக்தியின் உச்சத்தில் இருக்கும் ஒரு மனிதன் தனக்குத் துணையாக ஒரு யானையை வாங்கினால் என்னவாகும்’ என்ற விசித்திரமான கேள்வியை மையமாகக் கொண்டதுதான் தாய்லாந்து மொழிப் படமான ‘பாப் அய்’ (Pop Aye-2017).

கிர்ஸ்டன் டான் என்ற பெண் இயக்குநரின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், சிங்கப்பூர் சார்பாக ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. மேலும், சன்டேன்ஸ் திரைப்பட விழாவில் சிறப்பு ஜூரி விருதையும் பெற்றது. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட மனிதனும், விலங்கும் தங்கள் சுயத்தைத் தேடி அலையும் நீண்ட பயணத்தைக் கவித்துவமாக வர்ணித்திருக்கும் இத்திரைப்படம், கிர்ஸ்டன் டானின் முதல் படைப்பு என்பது இன்னுமொரு சிறப்பு.

நெடும் பயணத்தின் முதல் அடி

தாய்லாந்து நாட்டின் முன்னணிக் கட்டிட நிறுவனத்தில் வல்லுநர் குழுவின் தலைவராக இருப்பவர் தானா. பல வருடங்களுக்கு முன்பு அவர் கட்டிய மிகப் பெரும் வணிக வளாகம் இடிக்கப்பட்டு, அங்கு வேறொரு கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கும். இதுகுறித்து அவரிடம் டிவி சேனல் ஒன்று பேட்டி எடுக்கும். அப்போது தன்னுடைய சம காலம், கடந்த காலமாக மாற்றப்பட்டு நிகழ்காலம் தன்னைக் கபளீகரம் பண்ணத் தொடங்கியிருப்பதை உணர ஆரம்பிப்பார் தானா. தன்னுடைய முன்னாள் முதலாளியின் மகன் தன்னை ஓரங்கட்டுவதை உணர்ந்து வேதனையில் இருக்கும் தானாவுக்கு மேலும் சோகத்தைச் சேர்க்கும் வகையில், அவரது மனைவியுடனான உறவிலும் விரிசல் ஏற்படும்.

மனமுடைந்த நிலையில் இருக்கும் தானா, தெருவில் வேடிக்கைக் காட்டிக்கொண்டிருக்கும் வயதான யானையைப் பார்ப்பார். தன்னுடைய பால்ய காலத்தில் தன்னிடம் வளர்ப்புப் பிராணியாக இருந்த ‘பாப் அய்’ என்ற யானைதான் அது என்பதை உணர்வார். தன் செல்ல யானை தெருவில் பிச்சை எடுப்பதைக் காணச் சகிக்காமல், உடனே அதனை விலை கொடுத்து வாங்குவார் தானா. யானை வீட்டுக்குள் வருவதைக் கண்டு அவரின் மனைவி அச்சமடைவாள். “யானை இங்கிருந்தால் வீட்டைவிட்டு வெளியேறுவேன்” என்று கூறிவிடுவாள். அதனால், வேறு வழியின்றி, தான் சிறு வயதில் வாழ்ந்த தன்னுடைய பூர்விகக் கிராமத்துக்கு யானையுடன் கிளம்புவார் தானா. அங்கே வசிக்கும் தன்னுடைய மாமாவின் பொறுப்பில் யானையை விட்டுவிடலாம் என்பது அவரது திட்டம்.

அசாதாரண மனிதர்களின் அறிமுகம்

பரபரப்பான பாங்காக் நகரைவிட்டு கால்நடையாகத் தன் யானையுடன் பயணத்தைத் தொடங்குவார் தானா. அந்த அசாதாரணப் பயணத்தில், பாங்காக்கின் பரபரப்பு மறைந்து தாய்லாந்தின் அமைதியான சூழல் காட்சியாக விரியும். வழியில், ‘டீ’ என்ற ஹிப்பி ஒருவனைச் சந்திப்பார். அனுதினமும் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு தன்னைக் கடக்கும் வாகனங்களை வேடிக்கை பார்ப்பதுதான் டீயின் வேலை. சில நேரம் தன்னை ஒரு மரம்போல் உணருவதாகக் கூறும் டீ, “என்னுடைய ஆரூடத்தின்படி நான் சீக்கிரம் இறந்துவிடுவேன். விரைவில் சொர்க்கத்தில் என் அண்ணனுடன் சேர்ந்துகொள்வேன்” என்று அடிக்கடி சொல்லிக்கொள்வான்.

“மரங்களும் மரணித்து ஆக வேண்டும் தானே?” என்று அவன் கேட்கும் கேள்வி, தானாவின் மனதில் மட்டுமல்ல நம் மனதிலும் அதிர்வை உண்டாக்க வல்லது. சாவை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் டீக்கு, வாழ்வின் மீது நம்பிக்கை ஏற்படுத்தி அவனுடைய காதலியைத் தேடிச் செல்ல உதவுவார் தானா.

இதற்கிடையில், யானையை வேறு ஊருக்கு அழைத்துச் செல்ல சரியான உரிமம் இல்லாத காரணத்தால் போலீஸாரால் கைது செய்யப்படும் தானா, நெடுந்தொலைவில் இருக்கும் வன அலுவலகத்துக்கு கால்நடையாகவே அழைத்துச் செல்லப்படுவார். ஒருகட்டத்தில் சோர்வு மிகுதியில் மயங்கிவிழும் தானாவை, அருகில் இருக்கும் மதுவிடுதிக்குக் கொண்டுசெல்வார்கள் காவலர்கள். அங்கே பாலியல் தொழிலாளியாக இருக்கும் திருநங்கையுடன் தானாவுக்கு நட்பு ஏற்படும். தனது யானையுடன் அவர் தப்பிச்செல்ல அந்தத் திருநங்கை மூலம் ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

ஒரு வழியாகத் தன் மாமாவின் வீட்டைச் சென்றடையும் தானாவுக்கு அங்கே இன்னொரு அதிர்ச்சி காத்திருக்கும். அவர்களது கூட்டுக் குடும்பம் வசித்த இடத்தில், யானைக்குட்டி பாப் அய் ஓடி விளையாடிய இடத்தில், தற்போது அடுக்குமாடிக் குடியிருப்பு முளைத்திருக்கும். கடந்த காலத்தின் பசுமையை நிகழ்காலத்தின் அபத்தம் நாசம் செய்துகொண்டிருக்கிறது என்ற மனக்குமுறலுடன் பாப் அய்யை யானைகளின் சரணாலயத்தில் விட்டுவிடலாம் என்று முடிவெடுப்பார் தானா. அதைச் செய்து முடித்தாரா? பரிதாபத்துக்குரிய யானையின் கதி என்னவானது என்பதுதான் படத்தின் க்ளைமாக்ஸ்.

கடந்தகாலம் VS நிகழ்காலம்

மகத்துவம் நிறைந்த தனது கடந்தகாலம், நிகழ்காலத்தில் கேள்விக்குள்ளாக்கப்படுவதால் தடுமாற்றமடையும் ஒரு மத்திய வயதுக்காரரின் ஊடாட்டமே படத்தின் கதை. தன்னுடைய வாழ்க்கையின் அர்த்தத்தைத் தேடிக் கிளம்பும் மனிதனின் ஆன்மப் பயணமே படத்தின் மையப்புள்ளியாக இருந்தாலும், இந்தப் பயணத்தின் ஊடாகப் பல்வேறு மனித மனங்களையும் நமக்குக் காட்டுகிறார் இயக்குநர்.

மரணத்தை ஆவலுடன் எதிர்பார்த்து ஒரு மரம்போல் வாழும் மனிதன், அவன் என்னவானான் என்று 20 வருடங்களாக அவனைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்கும் முன்னாள் காதலி, கிரெடிட் கார்ட் வாங்கிக்கொண்டு இறுதிச் சடங்கு நடத்தும் பவுத்தத் துறவி, யாருமே ரசிக்கவில்லை என்றாலும் மனமுருகிப் பாடும் திருநங்கை, யானையைக் கண்டு வியக்காமல் அதைத் துன்புறுத்த நினைக்கும் குழந்தைகள் என்று எத்தனையோ மனித மனங்களைப் போகிறபோக்கில் நம் மனதில் அறையும்படி சொன்ன இந்தத் திரைப்படம், தாய்லாந்து திரையுலகில் ஓர் ஆத்மார்த்தமான படைப்பு!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE