சாதனா
readers@kamadenu.in
கரோனா காலம் பலரது வாழ்க்கையைப் பதம் பார்த்துவிட்டது. ஆனாலும், ‘கரோனா காலத்தில் உண்டான காதல்’ என்கிற கான்செப்டை வைத்து ஏகப்பட்ட குறும்படங்கள் அண்மையில் வெளிவந்தன. வெப்சீரிஸில் பல சிக்ஸர்களை அடித்த இளைஞர்கள் மட்டுமல்லாமல், தமிழ் சினிமாவின் சீனியர் இயக்குநர்களும் இதில் களமாடினார்கள்.
சுகமான அவஸ்தை
டிஜிட்டல் யுக இளைஞர்களின் குவாரண்டைன் நாட்கள் எப்படி இருந்தது என்பதை 17 நிமிடங்களில் காட்சிப்படுத்தியது, ‘காதல் டிஸ்டன்ஸிங்’ (Kadhal Distancing) வெப்சீரிஸ். இரவெல்லாம் லூடோ மொபைல் விளையாட்டு. அப்படியே அசந்து தூங்கி அடுத்த நாள் நன்பகலில் அரக்கப் பரக்க முழித்து ஜூம் மீட்டிங்கில் அலுவலகப் பணியைத் தொடங்கும் நாயகி. இரவு பகல் பாராமல் திரைப்படத்துக்கான எடிட்டிங் பணியை செய்யும் நாயகன். அவன், தனது பணிகளுக்கு நடுவில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து பப்ஜீ வீடியோ கேமையும் விளையாடி குவாரண்டைன் நாட்களை நெட்டித் தள்ளுகிறான். இவர்கள் இருவரும் பொதுமுடக்க நாட்களில் காதல் வயப்பட்டதால் உண்டாகும் சுகமான அவஸ்தைகளை நகைச்சுவை கலந்து காட்டி இருக்கிறது இந்த வெப்சீரிஸ். ஐபோனிலேயே எடுக்கப்பட்டிருக்கும் இந்த வெப்சீரிஸில் உள்ள 5 எப்பிசோட்களையும் லட்சக்கணக்கானோர் யூடியூபில் கண்டு ரசித்துள்ளனர்.