உலகம் சுற்றும் சினிமா - 42: பெருந்திணை சொல்லும் வாழ்க்கைப் பாடம்

By க.விக்னேஷ்வரன்

வாழ்வுக்கும் இறப்புக்குமான தொடர்பு என்ன? வாழ்வின் முடிவுதான் மரணம் என்றாலும், இறப்பால் வாழ்வு ஈர்க்கப்பட்டு அதை நோக்கிப் பயணிப்பதே இயற்கையின் நீதி. இறப்புதான் முடிவு என்று தெரிந்தபின், வாழ்வைக் கொண்டாடித் தீர்ப்பதே இப்பெரும் வாழ்வைக் கடந்துசெல்ல உகந்த வழி. இவ்வாழ்க்கைப் பாடத்தைத் தன்னுடைய வயது முதிர்ந்த காதலியிடமிருந்து ஓர் இளைஞன் கற்றறியும் கதையே, ‘ஹரோல்ட் அண்ட் மாவ்ட்’ (Harold and Maude) திரைப்படம்.

டார்க் காமெடி படங்களுக்குப் பெயர் பெற்ற இயக்குநர் ஹல் ஹாஷ்பியின் இயக்கத்தில் 1971-ல் வெளிவந்த இப்படம், 79 வயது மூதாட்டிக்கும், இறப்பு தொடர்பாகவே சிந்தித்துக்கொண்டிருக்கும் 20 வயது இளைஞனுக்கும் இடையிலான உறவைக் கவித்துவமாகப் பதிவு செய்த படைப்பு. வெளிவந்த நேரத்தில் கடுமையான விமர்சனங்களையும் எதிர்கொண்டது. இப்படம் பேசிய கருத்துக்களும், கையாண்ட நகைச்சுவை விஷயங்களும் அக்காலகட்டத்தின் பெருவாரியான மக்களின் பிற்போக்கு மனநிலையால் ஏற்றுக்கொள்ள முடியாததே இதற்குக் காரணம். காலத்தோடு சேர்ந்து மக்களின் மனநிலையும் மாறியதன் விளைவாக இத்திரைப்படம் தற்போது ‘கல்ட்’ அந்தஸ்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது!

இணையும் எதிர் துருவங்கள்

பணக்காரக் குடும்பத்தின் ஒரே வாரிசான ஹரோல்ட் எனும் 20 வயது இளைஞனுக்கு, இறப்பின் மீது அலாதியான ஈர்ப்பு. மிகவும் நுட்பமாகப் போலியான தற்கொலை முயற்சிகளைச் செய்து தன் தாயை மிரட்சி அடையச் செய்வதில் சுகம் காண்பவன் அவன். முன் பின் தெரியாதவர்களின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்வதை வாடிக்கையாகக் கொண்டிருப்பவன். அப்படிச் செல்லும்போது ஓர் இறுதிச்சடங்கில் மாவ்ட் என்ற மூதாட்டியைக் கவனிப்பான். அடுத்தடுத்து அவன் செல்லும் இறுதிச் சடங்குகளிலும் மாவ்ட் இருப்பார். மாவ்டின் கவனமும் ஹரோல்ட் மீது விழுந்திருக்கும். ஒருகட்டத்தில் இருவரும் நண்பர்களாகிவிடுவார்கள். மாவ்டைப் பொறுத்தவரை சட்டம், விதிமுறை என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. வாழ்க்கையைப் பரிபூரணமாக வாழ்வது மட்டுமே தனது கடமையென வாழ்பவர் அம்மூதாட்டி.

மாவ்டின் வாழ்வின் ஒவ்வொரு நாளும் ஆசிர்வதிக்கப்பட்டவை. ஏனென்றால், அவர் ஜெர்மானிய நாஜிப் படையின் சித்திரவதைக் கூடத்திலிருந்து தப்பி வந்தவர். அவரின் அதிரடியான சுபாவமும், அதற்கு அடியில் ஒளிந்திருக்கும் குழந்தைத் தன்மையும் ஹரோல்டை வெகுவாக ஈர்த்துவிடும்.

இதற்கிடையில் ஹரோல்டுக்குத் திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் மும்முரமாக இறங்கும் அவனது தாயார், அவனுக்குப் புதுப் பெண்களை அறிமுகப்படுத்தி வைப்பார். தன்னைக் காண வரும் பெண்கள் அனைவரையும் தத்ரூபமான தற்கொலை நாடகங்கள் மூலம் மிரட்சி அடைந்து ஓடவைப்பான் ஹரோல்ட்.

இதனால் வெறுப்படையும் அவனது அன்னை, அவனது மாமாவிடம் அவனை ஒப்படைத்து ராணுவத்தில் சேர்த்துவிட முடிவெடுப்பார். ஒருகட்டத்தில், தான் மாவ்ட் மீது காதல் வயப்பட்டிருப்பதை உணரும் ஹரோல்ட் மாவ்டின் 80-வது பிறந்தநாளில் தன் காதலை வெளிப்படுத்த முடிவெடுப்பான். ஆனால், அந்த முதிய பெண்ணிடம் வேறொரு திட்டம் இருக்கும். அத்திட்டம் ஹரோல்டை மட்டுமல்ல நம்மையும் உலுக்கிவிடும். இத்திரைப்படத்தின் முடிவில் இவ்வுலகில் உயிர்த்திருத்தலின் முக்கியத்துவம், அவஸ்தை, பெருங்கொடுமை, உன்மத்தம்… என அனைத்தையும் உணர்ந்து, உள்ளம் புனரமைத்த ஓர் உணர்வு நம்முள் மேலெழும்புவதைப் பரிபூரணமாக உணரலாம்.

இருத்தலும் இறப்பும்

‘இருத்தலியல்’ எனப்படும் ‘எக்சிஸ்டென்ஷியலிஸம்’ (Existentialism) பற்றி வெளியான படங்களில் ‘ஹரோல்ட் அண்ட் மாவ்ட்' மிகவும் முக்கியமானது. இரண்டு நேர் எதிரான கதாபாத்திரங்கள் வெவ்வேறு பார்வையுடன் இவ்வாழ்க்கையை அணுகி ஒரே முடிவை நோக்கி நகரும் இத்திரைக்கதையின் தாக்கத்தை, பல்வேறு மொழிப் படங்களில் காண முடியும். உதாரணத்துக்கு, சமீபத்தில் வெளிவந்த ‘கே.டி. (எ) கருப்புதுரை' படத்தில் இந்தப் படத்தின் தாக்கத்தை உணரலாம். மிஷ்கின் இயக்கத்தில் வந்த ‘நந்தலாலா'வும் இருத்தலியல் கோட்பாட்டின் அற்புதமான வெளிப்பாடுதான்.

பலவகையான திரைக்கதைகளில் இந்தக் கோட்பாடு அலசப்பட்டிருக்கிறது. எனினும், வயதால் அல்லது மனதால் எதிர்துருவங்களில் இருக்கும் இரண்டு கதாபாத்திரங்களை வைத்து திரைக்கதை வடிவமைக்கப்படும்போது வாழ்வின் அனைத்துப் பரிமாணங்களையும் தன்னுள்ளே அடக்கும் வல்லமையை அது பெற்றுவிடுகிறது. இவ்வகைத் திரைக்கதையில் கதாபாத்திரம் பேசும் சாதாரண வசனத்தின் மூலம் வாழ்க்கைப் பாடத்தை மிகநுட்பமாக உணர்த்திவிட முடியும். உதாரணத்துக்கு, ஹரோல்ட் தன் அன்பை வெளிப்படுத்த மாவ்டுக்கு ஓர் அழகிய பரிசை அளிப்பான். அதை உவகை பொங்க வாங்கி ரசிக்கும் அந்த மூதாட்டி, “நான் பல ஆண்டுகளுக்குப் பிறகு பெறும் அழகிய பரிசு இது” என்று கூறிவிட்டு அடுத்த நொடியே அதை ஆற்றுக்குள் வீசிவிடுவார். ஏனென்றால், அப்போதுதான் அப்பரிசு எங்கிருக்கிறது என்பது எப்போதும் அவருக்குத் தெரியும்.

இது போன்ற பல ஆழ்ந்த வசனங்கள் நகைச்சுவை கலந்தே சொல்லப்பட்டிருக்கும். படத்தின் இறுதிக் காட்சியில் ஹரோல்ட் இசைக்கும் க்கேட் ஸ்டீவன்ஸ் இயற்றிய ‘If you want to Sing Out, Sing Out' எனும் பாடல்தான் இந்த வாழ்க்கைக்கு நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய மிகச் சிறந்த பாடம்.

துருக்கிப் புரட்சியின் பிறகு சிறையிலிருந்து விடுமுறையில் வரும் 5 கைதிகளின் கதையைப் பேசும் திரைப்படத்தைப் பற்றி அடுத்த வாரம் காண்போம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE