ஒரு கதையை நாம் இரண்டு விதங்களில் சொல்லலாம். சம்பவங்களின் வரிசை மாறாமல் ஒரே நேர்க்கோட்டில் கதை சொல்லும் முறை. இதை ‘லீனியர்’ வகை திரைக்கதை என்கிறார்கள். சம்பவங்களின் வரிசையை மாற்றி அடுக்கி, அதேசமயம் புரியும் வகையில் சொல்வது ‘நான் லீனியர்’ வகை கதை சொல்லல்.
பொதுவாக த்ரில்லர் வகை திரைப்படங்களில்தான் ‘நான் லீனியர்’ திரைக்கதை உத்தி அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கும். குவென்டின் டாரன்டினோ இயக்கிய ‘பல்ப் ஃபிக் ஷன்’ திரைப்படம் இதற்குச் சிறந்த உதாரணம். இப்படி தீவிரமான கதைக்களத்துக்குப் பயன்படுத்தப்படும் ‘நான் லீனியர்’ உத்தியைப் பயன்படுத்தி மனதை வருடும் ஒரு காதல் கதையை எடுக்க முடியும் என்று நிரூபித்த திரைப்படம்தான் ‘எட்டர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட்’.
2004-ல் மைக்கேல் காண்ட்ரி இயக்கத்தில் ஜிம் கேரி, கேட் வின்ஸ்லெட், க்ரிஸ்டின் டன்ஸ்ட் போன்ற ஹாலிவுட் ஜாம்பவான்களின் நடிப்பில் வெளியான படம் இது.
நினைவுச் சுமைகள்
தனது இரண்டு வருடக் காதல் முறிந்த சோகத்தில் இருக்கும் நாயகன் ஜோயலுக்கு மேலும் பேரதிர்ச்சியாக ஒரு தகவல் வரும். அவனது காதலி க்ளெமென்டைன் ஓர் அறிவியல் நிறுவனத்தின் துணையுடன், தனது மூளையிலிருந்து ஜோயல் பற்றிய எல்லா நினைவுகளையும் அழித்திருப்பாள். இதைக் கேள்விப்பட்டதும் மனமுடைந்துபோகும் ஜோயல், தானும் அந்த நிறுவனத்தை அணுகி தன்னுடைய மூளையிலும் க்ளெமென்டைன் பற்றிய நினைவுகளை அழிக்கச் சொல்லிக் கேட்பான். அன்று இரவு அவன் உறங்கும்போது அந்நிறுவனத்தினர் அவனது வீட்டுக்கு வந்து அவனுடைய நினைவுகளை அழித்துவிடுவது என்று ஏற்பாடு செய்யப்படும். மறுநாள் காலை ஜோயல் விழித்தெழும்போது அவனுக்கு அந்த நிறுவனத்தை அணுகியதுகூட நினைவில் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு.
திட்டமிட்டபடி அன்று இரவு ஜோயலின் வீட்டுக்கு வரும் அறிவியல் நிபுணர்களில் ஒருவன், அவன் கொடுத்த தகவல்களை வைத்துக்கொண்டு, நினைவுகள் அழிக்கப்பட்ட க்ளெமென்டைனைத் தன் வசப்படுத்தும் முயற்சியில் இறங்கியிருப்பான். நினைவுகளை அழிக்கும் செயல்முறை ஆரம்பமானதும், ஜோயலுக்கும் க்ளெமென்டைனுக்கும் இடையே நடந்த கடைசி சண்டையிலிருந்து ஒவ்வொன்றாக அழிந்து, நினைவுகள் பின்னோக்கிச் செல்ல ஆரம்பிக்கும். இந்த நினைவுகள் ஊடாக ஜோயலும் பயணிக்க ஆரம்பிப்பான். அவனது நினைவின் படிமமாக க்ளெமென்டைனும் அவனுடன் பயணிக்க ஆரம்பிப்பாள்.
ஆழ்மனதில் உறங்கும் காதல்
புதைந்துபோன தனது நினைவுகளை மீண்டும் உயிர் சாட்சியாகத் தரிசிக்கும் ஜோயல், தன் காதலியை இழக்கத் தான் தயாராக இல்லை என்பதை உணர்ந்துகொள்வான். தனது மூளையின் நினைவுகளை ஒவ்வொன்றாக அழித்துக்கொண்டிருக்கும் நிபுணர்களை முந்திக்கொண்டு அவர்களின் அறிவியல் கரங்களுக்குள் சிக்காமல் தன் நினைவுகளுக்குள் ஒளிந்துகொள்ள முயற்சி செய்வான். ஜோயல் தன் காதலியின் நினைவுகளை மீட்டு மீண்டும் அவளுடன் இணைந்தானா இல்லையா என்பதை வெகு சுவாரசியமாகச் சொல்கிறது இந்தப் படம்.
அதிகம் பேசாத ஓர் ஆண், அவனுக்கு நேரெதிர் குணாம்சங்கள் பொருந்திய ஒரு பெண்... இவர்களுக்கு இடையிலான உறவின் பரிணாமத்தை அலசும் பின்னோக்கிய பயணம், அறிவியலுக்கு எதிரான போராட்டத்தில் காதலின் தவிப்பு, அனைத்தையும் மீறி தன் துணையிடம் எழும் அப்பழுக்கற்ற பிரேமத்தின் உன்னத தரிசனம்…. இவையனைத்தையும் மிகையில்லாமல் அற்புதமான திரைக்கதையில் சொல்லிய விதத்துக்காகவே ரசிகர்கள் மத்தியில் ‘கல்ட்’ அந்தஸ்தைப் பெற்றுள்ளது இந்தப் படம்.
ஜிம் கேரியின் மறுபக்கம்
புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞனான ஜிம் கேரி இந்தப் படத்தில் உணர்வுபூர்வமாக நடித்திருக்கிறார். அவர் நடிப்பில் வெளியான ‘தி ட்ரூ மேன் ஷோ’ திரைப்படமும் உணர்வுபூர்வமான திரைப்படமாக இருந்தாலும் அதிலும் தன்னுடைய நகைச்சுவையைக் கலந்தே வழங்கியிருப்பார் ஜிம் கேரி. ஆனால், ‘எட்டர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட்’ திரைப்படத்தில் ஜிம் கேரியின் நேரெதிர் வடிவத்தைக் காணலாம். இயக்குநர் மைக்கேல் காண்ட்ரி கொடுத்த அழுத்தம்தான் இந்த மாற்றத்துக்குக் காரணம். 2017-ல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ‘ஜிம் & ஆண்டி’ என்ற ஆவணப்படத்தில் இதைப் பற்றி ஜிம் கேரி விவரித்திருப்பார்.
ஆண் - பெண் உறவைப் பற்றி இதுவரை ஆயிரக்கணக்கான படங்கள் வந்திருக்கும். திரைமொழியைச் சிறப்பாகக் கையாண்டு, அதே ஆண் - பெண் உறவைப் புத்திசாலித்தனமாகச் சொன்னால் அக்கதை காலத்தைத் தாண்டி நிற்கும் என்பதற்கு உதாரணமாக ‘எட்டர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட்’ திரைப்படம் திகழ்கிறது.
நமது இன்றைய செயல்கள் நாளைய நினைவுகளாக மாறும். எனவே, நாளைய நினைவுகளை இன்று கவனமாக உருவாக்குவோம். நினைவுகள் பெருமதிப்பு மிக்கவை என்ற எண்ணத்தை நம் மனதில் விதைப்பதுதான் இத்திரைப்படத்தின் வெற்றி!