ஓ.டி.டி. உலா: பக்கா ஆகாத ‘பக்க கதை’!

By காமதேனு

எஸ்.எஸ்.லெனின்
readers@kamadenu.in

காதல், காமெடி, அறிவியல், ஆன்மிகம், சமூக நீதி… இப்படி பல அம்சங்கள் கலந்த சுவாரசியமான திரை முயற்சியே ‘ஒரு பக்க கதை’. ‘ஜீ5’ ஓடிடி தளத்தின் பிரத்யேகத் திரைப்படமாக டிசம்பர் 25-ல் வெளியாகி உள்ளது.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ இயக்குநர் பாலாஜி தரணீதரனின் படைப்பு என்றதும், அதே பாணியிலான கதைக்குள் இயல்பாக ஒன்றிவிட முடிகிறது. மீரா, சரவணன் இருவரும் இளம் காதலர்கள். பள்ளிப் பருவம் தொட்டுத் தொடரும் அவர்களின் காதலுக்கு இரு தரப்புப் பெற்றோர்களின் ஆசிர்வாதமும் உண்டு.

அழகான இந்த காதல் வாழ்க்கையின் இடையே, ஓர் எதிர்பாராத திருப்பம் நேருகிறது. மீரா கர்ப்பமடைந்துவிடுகிறாள். இரு குடும்பங்களும் அதிர்கின்றன. தொடர்புடைய இருவருமே கர்ப்பத்துக்குக் காரணமல்ல என்று மருத்துவர்கள் சொல்வது மற்றொரு அதிர்ச்சி. அதை அறிவியல் பின்னணியில் விளக்கவும் செய்கிறார்கள். அதுவரை சுவாரசியம் குறையாது பயணிக்கும் கதை, பிற்பாடு ஆன்மிகம், சமூகம் எனத் தடுமாறித் தத்தளித்து ஒருவழியாக நிறைவடைகிறது.

ப்ளஸ்களின் மைனஸ்

‘பாவக் கதைகள்’ ஆந்தாலஜி படத்தில் திருநங்கையாகச் சிறப்பாக நடித்திருந்த காளிதாஸ் ஜெயராம், இந்தப் படத்தில் சற்று ஏமாற்றமளிக்கிறார். ஆனபோதும் கண்களில் தெறிக்கும் காதல், குறும்பு, பரிதவிப்புகளில் பாந்தமாக ஒன்ற முயற்சிக்கிறார். சோகத்தில்கூட பிரகாசிக்கும் நாயகி மேகா ஆகாஷின் அழகும், நடிப்பும் நிதானமான காட்சி நகர்வுக்குக் கைகொடுக்கின்றன. இளம் ஜோடியின் குடும்பத்தினர் மற்றும் அவர்கள் மத்தியிலான உணர்வுப் பரிமாறல்கள் குறித்த சித்தரிப்புகளில், சராசரி மத்தியவர்க்கத்தின் சாயல் பிரமாதமாக எடுபடுகிறது.

மகளின் மாதவிடாய் தள்ளிப்போவதைக் கவனித்து குடும்ப மருத்துவரிடம் பக்குவமாக அழைத்துச் செல்லும் தாயார், மகளிடம் எல்லை மீறியதாக அவளது காதலனிடம் நிதானித்து கடுமை காட்டும் தந்தை, கன்னித்தன்மை இழக்காமல் தாய்மையடைந்ததைத் தவிப்புடன் ஏற்றுக்கொள்ளும் நாயகி, காதலியின் குழந்தைக்கு அப்பாவாக விரும்புவதை அழுத்தமாய் வெளிப்படுத்தும் காதலன் என ஒவ்வொரு கதாபாத்திரமும் அலாதியாக வெளிப்படுகின்றன. இவர்களுக்கு மத்தியில்  ‘நான் அவதாரமாக்கும்...’ என்று பீற்றிக்கொள்ளும் சிறுவன், குறுக்கு மறுக்காய் வரும் காட்சிகள் கலகலப்பு சேர்க்கின்றன.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தின் ‘மெடுலா ஆப்லங்கேட்டா’ பாணியில், ‘ஒரு பக்க கதை’யிலும் ஓர் அறிவியல் கூற்றை முன்வைத்திருப்பது ஓகே. ஆனால், அதைச் சுற்றி பின்னப்பட்ட திரைக்கதையில் ஆங்காங்கே தென்படும் தவிப்பான திருகலையும் சரி செய்ய முயன்றிருக்கலாம்.

படம் நெடுகிலும் இழையோடும் மெல்லிய நகைச்சுவை பெரும் ஆறுதல். கடினமான கதையோட்டத்தை ஆசுவாசமான காட்சிகளில் சொல்வது பல இடங்களில் அவசியமானாலும், சில இடங்களின் நீளம் கொட்டாவி எழுப்புகிறது. வசனங்களில் வாய்க்காத காட்சிச் சித்தரிப்பை கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை வழங்கிவிடுகிறது. முதல் பாதியின் மெனக்கிடலை, இரண்டாம் பாதியின் ஆசிரம் - நீதிமன்ற காட்சிகளுக்கும் அழுத்தமாக தந்திருந்தால் ‘ஒரு பக்க கதை’ மெய்யாலுமே ஒரு ‘பக்கா’ கதையாகியிருக்கும்!

2. திரைக்குள் ஒரு மர்மத் திரை

சினிமாவுக்குள் விரியும் சினிமா பாணியிலான திரைப்படங்கள் அரிது. ‘மெட்டா சினிமா’ எனப்படும் இந்த வகையில், நெட்ஃப்ளிக்ஸில் கடந்த வாரம் வெளியாகி பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்தித் திரைப்படம் AK vs AK.

பாலிவுட் பிரபலங்களான நடிகர் அனில் கபூர் (AK), இயக்குநர் அனுராக் காஷ்யப் (AK) இருவரும் தங்கள் நிஜப் பாத்திரங்களாகவே திரையில் தோன்றுகிறார்கள். நேற்றைய சூப்பர் ஸ்டாரான அனில் கபூர் நடப்பு பாலிவுட் கோதாவில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ளத் தடுமாறிவருகிறார். சரிவின் விளிம்பிலிருக்கும் இயக்குநர் அனுராக் காஷ்யப்பும் தன்னை நிறுவுவதற்கான வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார். முன்னதாக அந்த முயற்சியில் கபூரை அணுகும் காஷ்யப்புக்குப் புறக்கணிப்பே பதிலாகக் கிடைக்கிறது. இந்தக் கசப்பின் பின்னணியில் ரசிகர் மத்தியிலான பொது நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் வார்த்தைகளால் மோதிக்கொள்கிறார்கள்.

கடத்தல் ஆட்டம்

கடுப்பான காஷ்யப் அதேவேகத்தில் ஒரு திரைக்கதையை வடிவமைக்கிறார். அதன்படி கபூரின் மகளைக் கடத்துவது என்றும், மகளை மீட்க நடிகர் கபூர் படும்பாட்டை ரத்தமும் சதையுமாக நேரடி கேமராவில் பதிவுசெய்து உயிரோட்டமான ஒரு படைப்பை உருவாக்குவது என்றும் முடிவுசெய்கிறார். தனது பெண் உதவியாளர் துணையுடன் அதற்கான வியூகத்திலும் இறங்குகிறார். பின்னிரவில் படப்பிடிப்பு முடிந்து தனது பிறந்தநாளைக் குடும்பத்தினருடன் கொண்டாடத் தயாராகும் கபூரிடம், அவரது மகள் சோனம்கபூர் கடத்தப்பட்டதைச் சொல்கிறார் காஷ்யப். கூடவே, குரூர ஆட்டத்தின் விதிமுறைகளையும் விளக்குகிறார்.

ஆரம்பத்தில் அலட்சியம் காட்டும் அனில் கபூர், விபரீதத்தை உணர்ந்ததும் மகளை மீட்க பதறிக் கிளம்புகிறார். மும்பையின் தெருக்களில் மகளைத் தேடி கபூர் கலங்கித் தடுமாறுவதைக் காஷ்யப்பின் கேமரா கோரப் பசியுடன் தொடர்கிறது.

கபூர் – காஷ்யப் இடையிலான உரசல், வாரிசுகள் முதன்மைப்படுத்தல் தொடர்பான நடப்பு பாலிவுட்டின் உள்ளரசியல், ஊதிப் பெருக்கப்படும் ரசிக பிம்பம் என்பதான பல காட்சிகள் உண்மைக்கு அருகில் இருக்கின்றன. அனில் கபூரின் மகள் சோனம், மகன் ஹர்ஷவர்தன், அண்ணன் போனி உட்பட கதாபாத்திரங்கள் நிஜமாகவே வந்துபோகிறார்கள். ஒற்றை இரவில் தொடங்கி முடியும் கதையில் கபூர் – காஷ்யப் இருவருமே திரைநெடுக ஆக்கிரமித்தாலும், விக்ரமாதித்ய மோத்வானேயின் இயக்கமும், அனுராக் காஷ்யபின் வசனங்களும் ரசிகர்களைக் கட்டிப்போடுகின்றன. போகிறபோக்கில் பாலிவுட்டின் இருட்டு திசைகளைச் சுரண்டிவிட்டு ஒரண்டை இழுக்கவும் செய்கிறார்கள். ஒரு நடிகர் சொந்த வேதனையில் உழலும்போதும் விவஸ்தையின்றி ரசிகப் பட்டாளம் செல்ஃபி எடுக்க முட்டிமோதும் அவலமும் பதிவாகியிருக்கிறது.

கைகூடிய முயற்சி

சினிமாவுக்குள் சினிமா என்பதின் இயல்பாய் ஆங்காங்கே வரும் குழப்பங்களை தெளிவான திரைக்கதையால் சமாளிக்கிறார்கள். தனது திரைப்பயணத்தில் இதுவரையில்லாத நடிப்பை வழங்கியிருக்கிறார் அனில் கபூர். ‘இமைக்கா நொடிகள்’ மூலம் வில்லனாக நமக்கும் அறிமுகமான அனுராக் காஷ்யப்பும், கபூருடன் சரி நிகராக நடிப்பை வெளிப்படுத்துகிறார்.

காட்சிக்குக் காட்சி புதுமைகளுடன் சுவாரசியமான திரில்லராகச் செல்லும் திரைப்படத்தின் கடைசியில் பாலிவுட்தனமான திருப்பத்தை வைத்திருக்கிறார்கள். மற்றபடி, இந்தி சினிமாவைப் பின்தொடருவோருக்குக் கூடுதல் சிலாகிப்பு தருவதுடன், ஏனைய ரசிகர்களை ஏமாற்றாமலும் ரசிக்க வைக்கிறது இந்தப் படம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE