உலகம் சுற்றும் சினிமா - 36: கதைசொல்லியின் புரட்சிக் கதை!

By க.விக்னேஷ்வரன்

இதுவரை இந்த உலகத்தில் எத்தனைத் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டிருக்கும்? தோராயமாகப் பத்து லட்சத்தைத் தாண்டும் என்று ஐஎம்டிபி இணையதளம் கூறுகிறது. இப்பெரும் கூட்டத்தில் உன்னதமான படைப்புகள் என்று போற்றப்படும் திரைப்படங்களும் கணிசமாக உண்டு. அந்த வரிசையில் முதல் மூன்று இடங்களுக்குள் எப்போதும் இடம் பிடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம்தான் ‘சிட்டிசன் கேன்’ (1941). இதுவரை வெளியான மிகச் சிறந்த படம் என்று புகழப்படும் திரைப்படமான ‘சிட்டிசன் கேன்’ ஹாலிவுட்டின் கதை சொல்லும் பாணியை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது.

ஆனால், இந்தக் கட்டுரை ‘சிட்டிசன் கேன்’ திரைப்படத்தின் திரைக்கதையைப் பற்றியது அல்ல. மாறாக அந்தத் திரைக்கதைக்குப் பின்னால் இருந்த திரைக்கதை ஆசிரியரான ஹெர்மன் ஜே.மேன்கிவிக்ஸின் கதையைப் பற்றியது. தான் எழுதிய கதைகளைவிடவும் சுவாரசியமான வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் மேன்கிவிக்ஸ். அவரது வாழ்க்கையை ‘மேன்க்’ என்ற திரைப்படமாகக் கற்பனை கலந்து உருவாக்கியிருக்கிறார் புகழ்பெற்ற இயக்குநர் டேவிட் ஃபின்ச்சர். ‘ஃபைட் கிளப்’, ‘செவன்’, ‘ஸோடியாக்’ போன்ற த்ரில்லர் படங்களை இயக்கியவரான டேவிட் ஃபின்ச்சர் ஏன் ஒரு வாழ்க்கை வரலாற்றுப் படத்தை இயக்கினார் என்பதை இக்கட்டுரையின் முடிவில் பார்க்கலாம்.

இத்திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியானது. இதற்கு முன்பு கடந்த நவம்பர் மாதம் 13-ம் தேதி அமெரிக்காவில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெகுசில திரையரங்கங்களில் மட்டுமே வெளியிடப்
பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முழுக்க முழுக்க கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டிருப்பது இப்படத்தின் இன்னொரு சிறப்பம்சம்.

கதைசொல்லியின் கதை

மேன்கிவிக்ஸ், திரைக்கதை ஆசிரியர் என்பதைத் தாண்டி அறச்சீற்றம் கொண்ட, தன் மனதுக்குச் சரி என்று தோன்றியதில் உறுதியாக நின்ற மனிதர். ‘மேன்க்’ திரைப்படமும் இதைத்தான் முன்னிறுத்துகிறது. பண முதலைகளும், முதலாளித்துவம் ஊறிப்போன ஸ்டூடியோ உரிமையாளர்களும் நிறைந்த ஹாலிவுட்டில் பணிபுரிந்தாலும் தன்னுடைய கொள்கைகளிலிருந்து சற்றும் விலகாமல் நின்றவர் மேன்கிவிக்ஸ். அந்தப் பிடிவாத குணத்தால், அவர் இழந்தவை அதிகம். தோல்விகளும் புறக்கணிப்புகளும் தன்னைக் கீழ்நோக்கித் தள்ளியபோதும், தன்னிடம் இருக்கும் ஒரே ஆயுதமான எழுத்தைக் கொண்டு அமெரிக்க முதலாளித்துவத்தை எதிர்த்து அவர் செய்த புரட்சிதான் ‘சிட்டிசன் கேன்’ திரைக்கதை.

மேன்கிவிக்ஸ், 1930-களில் ஹாலிவுட்டில் சந்தித்த மனிதர்களையும், 1940-ம் ஆண்டு விபத்தில் கால் எலும்பு முறிந்து வீட்டில் முடங்கிய நிலையில் ‘சிட்டிசன் கேன்’ திரைக்கதையை எழுதும்போது எதிர்கொள்ளும் நிகழ்வுகளையும் மாற்றி மாற்றி அடுக்கிச் செல்கிறது படத்தின் திரைக்கதை. கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்டிருப்பதால் படம் ஆரம்பித்த சில மணித் துளிகளில் 1930-களுக்குள் மனம் லயிக்க ஆரம்பித்துவிடுகிறது. காட்சி அமைப்பு, நடிகர்களின் தேர்வு, வசனங்கள் என்று அனைத்திலும் கிளாசிக் ஹாலிவுட்டின் சுவையைக் கச்சிதமாக உணர முடிகிறது. மேன்கிவிக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் கேரி ஓல்ட்மேனை அடுத்த ஆஸ்கர் மேடையில் காணும் வாய்ப்பு இருக்கிறது.

தந்தையின் தடத்தில் மகன்

இப்படி ஒரு படத்தை டேவிட் ஃபின்ச்சர் எடுக்கக் காரணம், இப்படத்தின் திரைக்கதையை எழுதியது அவரது தந்தை ஜாக் ஃபின்ச்சர் என்பதுதான். ஜாக், ‘மேன்க்’ திரைக்கதையை 1990-களிலேயே எழுதிவிட்டார். தந்தை எழுதிய திரைக்கதையால் ஈர்க்கப்பட்ட டேவிட் ஃபின்ச்சர், 1997-ல் ‘மேன்க்’ திரைப்படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கினார். கெவின் ஸ்பேசியை மேன்கிவிக்ஸ் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. கறுப்பு வெள்ளையில்தான் எடுப்பேன் என்று டேவிட் பிடிவாதமாக இருந்ததாலும், மேலும் சில காரணிகளாலும் படத்தின் ஆயத்த வேலைகள் பாதியில் நின்றுபோயின. 2003-ல் ஜாக் ஃபின்ச்சர் இறந்துவிட்டார்.

இத்தனை வருடங்கள் கழித்து அதைத் திரைப்படமாக உருவாக்கி தன் தந்தையின் நினைவுக்குப் பெருமை சேர்த்துள்ளார் டேவிட் ஃபின்ச்சர். ‘சிட்டிசன் கேன்’ திரைக்கதை அமெரிக்க முதலாளித்துவத்துக்கு எதிரான கலகக் குரல் என்றால், ‘மேன்க்’ திரைக்கதை புரையோடிப்போன ஹாலிவுட் அரசியல் வரலாற்றுக்கு எதிரான கலகக் குரல் என்றே சொல்லலாம்.
‘சிட்டிசன் கேன்’ திரைப்படத்துக்குப் பின் இருக்கும் போராட்டத்தை மையமாகக் கொண்டு 1999-ல் ‘ஆர்கேஓ 281’ (RKO 281) என்ற திரைப்படம் வெளியானது. ஆனால், அத்திரைப்படம் ‘சிட்டிசன் கேன்’ படத்தை வெளியிட்ட ஆர்.கே.ஓ ரேடியோ பிக்சர்ஸ் நிறுவனத்தில் நடந்த சிக்கல்கள், எதிர்கொண்ட மோதல்களையே பிரதானமாகப் பேசியது. முக்கியக் கதாபாத்திரங்களில் ஒன்றாக மேன்கிவிக்ஸின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கும். ‘சிட்டிசன் கேன்’ திரைக்கதையை மேன்கிவிக்ஸ் மற்றும் அத்திரைப்படத்தின் இயக்குநரும், நாயகனுமான ஆர்சன் வெல்ஸ் இருவரும் சேர்ந்து எழுதியதாகக் கூறப்பட்டு, சிறந்த திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது இருவருக்கும் இணைந்து வழங்கப்பட்டது. பின்னாளில் ஆர்சனுக்கு அவ்விருது கொடுக்கப்பட்டதை மையமாக வைத்துப் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதற்கான விடையும் ‘மேன்க்’ திரைப்படத்தில் இயல்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

“ஒரு மனிதன் என்ன செய்தான் என்பதைக் காட்டுவது முக்கியமல்ல, அவன் யாரென்று காட்ட வேண்டும்” - இது ‘சிட்டிசன் கேன்’ திரைப்படத்தில் வரும் வசனம். “ஒரு மனிதனின் முழு வாழ்க்கையை இரண்டு மணி நேரத்தில் (திரைக்கதையில்) விவரித்துவிட முடியாது. அவனைப் பற்றிய எண்ணத்தைவிட்டுச் செல்ல மட்டுமே நம்மால் முடியும்” - இது ‘மேன்க்’ திரைப்படத்தில் வரும் வசனம். சற்று யோசித்துப் பார்த்தால் இவ்விரண்டு திரைப்படங்களுமே இந்த இரண்டு வசனங்களுக்குமான முழுமையான அர்த்தத்தைத் தம்முள் பொதித்து வைத்திருப்பது புரியும். நீளமான வசனங்களையும், பொறுமையான காட்சி நகர்வுகளையும் நீங்கள் கேட்க, பார்க்கத் தயார் என்றால், ‘மேன்க்’ திரைப்படத்தை தாராளமாகப் பார்க்கலாம்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE