உலகம் சுற்றும் சினிமா - 35: பழிவாங்கும் படலம்

By க.விக்னேஷ்வரன்

பழிவாங்கும் உணர்வு... வாழ்வின் ஏதோ ஒரு தருணத்தில் நாம் இந்த உணர்வைக் கடந்திருப்போம். இந்த உணர்வின் அளவு வேண்டுமானால் ஆளாளுக்கு மாறுபடலாம். நேரடியாக வெளிப்படும் கோபத்தைவிட, நிதானித்து, திட்டம் தீட்டி... சரியான நேரத்தில் வெளிப்படக் காத்திருக்கும் பழிவாங்கும் உணர்வு பல மடங்கு ஆபத்தானது.

தனக்கு இழைக்கப்படும் கொடுமையின் காரணமாகவே, பலருக்குப் பழிவாங்கும் உணர்வு மேலோங்குகிறது. சரியான சந்தர்ப்பத்தில் தன் எதிர்ப்பை வெளிக்காட்ட, அடிபட்ட புலியைப் போல் தன் கோரப் பற்களுடன் அது காத்திருக்கிறது. 15 வருடங்கள் ஒரு அறையில் அடைக்கப்பட்ட ஒரு மனிதன், தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகப் பழிவாங்கக் கிளம்பினால் என்னவாகும் என்பதைக் கூறும் படம்தான், கொரிய மொழியில் வெளிவந்த ‘ஓல்டுபாய்’ (2003).

மனிதனின் வக்கிரம் எந்த எல்லைக்கும் செல்லும் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்த இத்திரைப்படம், 1996 முதல் 1998 வரை ‘ஓல்டுபாய்’ என்ற பெயரில் வெளிவந்த ஜப்பானிய மங்கா கார்ட்டூனைத் தழுவி எடுக்கப்பட்டது. 'ஜாயின்ட் செக்யூரிட்டி ஏரியா’, ‘தர்ஸ்ட்’ போன்ற புகழ் பெற்ற கொரியப் படங்களை இயக்கிய பார்க் ச்சான் வூக் இயக்கிய இத்திரைப்படம், இந்த நூற்றாண்டில் வந்த சிறந்த படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

கடத்தல், சிறைவைப்பு

குடிக்கு அடிமையான ஓ டே-ஷூ எனும் மனிதர், தன் மகளின் நான்காவது பிறந்த நாளன்று குடிபோதையில் செய்த அடாவடிக்காகக் கைது செய்யப்படுவார். அவரது நண்பர் வந்து அவரைப் பிணையில் விடுவித்து அழைத்துச்செல்வார். போகும் வழியில் தன் வீட்டுக்குப் பொதுத் தொலைப்பேசி மூலம் பேசுவார் ஓ டே-ஷூ. அப்போது மர்ம மனிதன் அவரைக் கடத்திச்செல்வான்.
ஓர் அறைக்குள் சிறை வைக்கப்படுவார் ஓ டே-ஷூ. எதற்காகக் கடத்தப்பட்டோம், ஏன் அடைக்கப்பட்டிருக்கிறோம் என்று புரியாமலேயே பதினைந்து வருடங்கள் ஓடிவிடும். அந்த அறையில் இருக்கும் தொலைக்காட்சி மூலமாகவே வெளியுலக விஷயங்களையும் அறிந்துகொள்வார். தன் மனைவி கொலை செய்யப்பட்டதையும் அந்தக் கொலையில் முக்கியக் குற்றவாளியாகப் போலீஸ் தன்னை அறிவித்திருப்பதையும் தெரிந்துகொள்வார். தொலைக்காட்சி மூலமாகவே சண்டைப் பயிற்சியும் பழகுவார். எப்படியும் தப்பித்துவிட வேண்டும், வெளியுலகில் நிர்கதியாக இருக்கும் தன் மகளைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்துதலில், அந்த அறையின் சுவற்றில் ஓட்டை போட ஆரம்பிப்பார்.

முதல் செங்கல்லைப் பெயர்த்தெடுக்கவே பல வருடங்கள் ஆகிவிடும். முதல் செங்கல்லை உடைத்த அடுத்த நாள் கண் விழிக்கும் ஓ டே-ஷூ வெளியுலகில் இருப்பார். குழம்பிப்போகும் அவர், தன்னை அடைத்து வைத்தவன்தான் தன்னை விடுதலை செய்துள்ளான் என்பதைப் புரிந்து கொள்வார்.

வித்தியாசமான நிபந்தனை

வளர்ப்பு பெற்றோரிடம் தன் மகள் பாதுகாப்பாக இருக்கிறாள் என்ற செய்தியை அறிந்துகொள்ளும் ஓ டே-ஷூ தன்னை இத்தனை வருடங்கள் அடைத்துவைத்து, தன் வாழ்க்கையை நாசமாக்கிய வனைப் பழிவாங்கக் கிளம்புவார். ஆனால், அவரை அடைத்து வைத்திருந்த லீ வூன் ஜின் என்ற பெரும் பணக்காரனே அவரைச் சந்திக்க வருவான். “உன்னை நான் அடைத்துவைத்தது ஏன், வெளியில் விட்டது ஏன் என்பதை ஐந்து நாட்களில் கண்டுபிடிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நீ விரும்பும் மி-டோ என்ற பெண்ணைக் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டும் லீ வூன் ஜின், “அப்படிக் கண்டுபிடித்துவிட்டால், நான் தற்கொலை செய்துகொள்வேன்” என்றும் தெரிவிப்பான்.

கையறு நிலையில் இருக்கும் ஓ டே-ஷூ, வேறு வழியின்றி அவனதுநிபந்தனைகளை ஏற்றுக்கொள்வார். இறுதியில் ஓ டே-ஷூ காரணங்களைக் கண்டுபிடித்தாரா, லீ வூன் ஜின்னிடமிருந்து மி-டோவைக் காப்பாற்றினாரா, தன் மகளுடன் இணைந்தாரா என்பதை ஊகிக்க முடியாத திருப்பங்களுடனும், மனதைப் பிசையும் முடிவுடனும் சொல்லியிருப்பார் இயக்குநர்.

சமூகத்தை நோக்கிய கேள்வி

தகாத உறவுகள், அதிரவைக்கும் சண்டைக் காட்சிகள் என்று எந்த வித சமரசமும் இன்றி, கதைக்கு நியாயம் சேர்க்கும் வகையில் உருவாக்கப்பட்ட இத்திரைப்படம், பெரியவர்களுக்கானது மட்டுமே. சமூகக் கட்டமைப்புகளுக்குக் கட்டுப்பட்டு அனைவரும் இயங்குவதாகப் பொதுத் தோற்றம் இருந்தாலும் தனி மனித மனம் என்பது எப்போதும் அந்தக் கட்டமைப்புகளைக் கடக்கத் தயங்குவதே இல்லை என்பதை, இந்தப் படம் அபாரமான கதைசொல்லல் மூலம் விவரிக்கும்.

அழுத்தமான காட்சிகள் நிறைந்த திரைக்கதைதான் இப்படத்தின் பெரும்பலம். “நான் மிருகத்தைவிடக் கேவலமானவனாக இருந்தாலும், வாழும் உரிமை எனக்கில்லையா?” என்று இரு வேறு காட்சிகளில் இரு வேறு கதாபாத்திரங்கள் கேட்கும் கேள்வி, மனிதனின் இயற்கைத்தன்மை மீது சமூகம் எழுப்பியுள்ள கனமான கட்டமைப்புகள் மேல் எழுப்பப்படும் கேள்வியாகும். என்னதான் சமூக ஒழுங்கு, நியாயம் என்று நாம் வரிந்துகட்டிக்கொண்டு பேசினாலும் மனித மனம் என்பது கட்டமைப்புகளுக்கு உட்படாத குரங்குதான் என்பதைப் பூடகமாகச் சொல்லியிருப்பார் இயக்குநர்.

சமரசமில்லாத மூலக் கதை

இந்தப் படத்தை அப்பட்டமாக நகலெடுத்து, சஞ்சய் தத், ஜான் ஆபிரஹாம் நடிப்பில் ‘ஜிந்தா’ (2006) எனும் இந்திப் படத்தை உருவாக்கினார் சஞ்சய் குப்தா. இதையடுத்து, ‘ஜிந்தா’ படத்தின் நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்போவதாக ‘ஓல்டுபாய்’ படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்தனர். பிறகு அந்த விஷயம் கைவிடப்பட்டது. பின்னர் 2013-ல், ஆங்கிலத்தில் ‘ஓல்டுபாய்’ என்ற பெயரிலேயே ஜோஷ் போர்லின் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்றது. ஆனால், இந்தி நகல், ஆங்கில ரீமேக் இரண்டிலும் மூலக்கதையில் உள்ள முடிவை மாற்றி வேறொரு முடிவைக்கதைக்குக் கொடுத்திருப்பார்கள். குறிப்பாக, ‘ஜிந்தா’ படத்தின் முடிவு, மூலத் திரைக்கதையின் ஆன்மாவையே கொல்லும் வகையில் இருக்கும். இதற்குக் காரணம், இந்த இரண்டு படங்களை உருவாக்கியவர்களும் கதையில் செய்துகொண்ட சமரசங்கள்தான். மூலக் கதையில் வரும் முடிவு அழுத்தமானது, பொதுச் சமூகத்துக்கு எதிரானது. ஆனால், அதைச் சமரசமின்றி கதையாக பார்க் ச்சான் வூக் சொன்னதால்தான் காலத்தைக் கடந்து பேசப்படுகிறான் ‘ஓல்டுபாய்’!

கதாபாத்திரங்களை வலுவாக கட்டமைத்தால் சிறுவர்களையும் மாபெரும் வில்லன்களாக மாற்றி பார்வையாளர்களை கதிகலங்க வைக்கலாம் என்று நிரூபித்த படத்தைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE