உலகம் சுற்றும் சினிமா - 34: காலச் சிறை கற்றுத்தரும் பாடம்

By க.விக்னேஷ்வரன்

ஹாலிவுட் திரையுலகில் அறிவியல் புனைகதைகளுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. அறிவியல் புனைகதை வகைமையில் ரசிகர்களின் ஏகோபித்த அபிமானத்தைப் பெற்றவை காலப் பயணம் (Time Travel) தொடர்பான கதைகள். அந்த வகைமையில் நூற்றுக்கணக்கான படங்கள் வந்துவிட்ட நிலையில்தான் ‘டைம் லூப்’ (Time Loop) கதைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. காலம் என்ற மாய அமைப்பினுள் - ஒரு குறிப்பிட்ட நேரத்தினுள் சிக்கிக்கொண்டு மீண்டும் மீண்டும் அதே நேரத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதுதான் ‘டைம் லூப்’ கதைகளின் அடிப்படை.

இந்தக் கதைக்களத்தில் பல சீரியஸான படங்கள் வந்திருந்தாலும், 2017-ல் வெளிவந்த ‘ஹேப்பி டெத் டே’ (Happy Death Day) படம், நகைச்சுவை, மனித உறவு, பரபரப்பு என்று எல்லாம் கலந்த அட்டகாசமான திரைக்கதை மூலம் ஹிட் அடித்தது. ‘பாராநார்மல் ஆக்டிவிட்டி’ (Paranornal Activity) படத்தின் இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் பாகங்களை இயக்கிய க்ரிஸ்டோபர் லேண்டன் இயக்கிய இந்தப் படம், ‘டைம் லூப்’ வகைமைப் படங்களின் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

மரணிக்காத மரணம்

கல்லூரி மாணவியான தெரஸா ட்ரீ சுயநலம் உடையவள், புற அழகுக்கு முக்கியத்துவம் அளிப்பவள், அடுத்தவரின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காத நவநாகரிக கல்லூரி யுவதி. தன் பிறந்தநாளுக்கு முந்தைய இரவைக் குடிபோதையில் கழிக்கும் ட்ரீ, சக மாணவனான கார்ட்டரின் அறையில் காலையில் கண்விழிப்பாள். அவனிடம் கோபமாகப் பேசிவிட்டு அறையிலிருந்து கிளம்புவாள். தனது அறைக்கு வந்து அவசர அவசரமாகக் கிளம்பி கல்லூரிக்குச் செல்வாள்.

அன்று இரவு பார்ட்டி ஒன்றுக்குத் தனியாகச் செல்லும் ட்ரீயை முகமூடி அணிந்த மர்ம மனிதர் கொலை செய்துவிடுவார். நெஞ்சில் கத்தி பாய்ந்து இறந்த அடுத்த நிமிடம் கார்ட்டரின் அறையில் கண்விழிப்பாள் ட்ரீ. முதலில் அவள் கேட்ட அதே வார்த்தைகள், பார்த்த காட்சிகள் என்று அந்த நாள் கழியும். மீண்டும் அதேபோல் கொலை செய்யப்படுவாள். மீண்டும் கார்ட்டரின் அறையில் கண்விழிப்பாள். பின்புதான், டைம் லூப்பில் தான் சிக்கிக்கொண்டிருப்பது அவளுக்குத் தெரியும்.

அதிலிருந்து தப்பிக்க முடிவெடுக்கும் ட்ரீ, தன்னைக் கொல்லும் மர்ம ஆசாமி யார் என்று கண்டுபிடிக்க வேண்டும் என்பதையும் உணர்வாள். தனக்குச் சந்தேகம் இருக்கும் நபர்களை எல்லாம் பின்தொடர ஆரம்பிப்பாள். ஒரு முறை கொலையாகி இறந்த பின்பு அடுத்த விழிப்பில் அடுத்த ஆளைப் பின்தொடர்வாள். இறுதியில், தன்னைக் கொலை செய்வது யார் என்று அவள் கண்டுபிடித்தாளா, டைம் லூப்பிலிருந்து விடுபட்டாளா என்பதைப் பரபரப்பான திரைக்கதையில் சொல்லி அசத்தியிருப்பார் க்ரிஸ்டோபர் லேண்டன். ட்ரீ ஒவ்வொரு முறை இறந்து மீண்டு வரும்போதும் அவள் ஒரே விஷயத்தைத்தான் பார்ப்பாள், கேட்பாள். ஆனால், ஒவ்வொரு முறையும் அதை வித்தியாசமாகக் காட்சிப்படுத்தி அலுப்புத் தட்டாமல் கதையை நகர்த்தியதுதான் க்ரிஸ்டோபர் லேண்டனின் சாமர்த்தியம்.

மரணத்தில் பிறக்கும் ஞானம்

இப்படத்தின் பிரதான அம்சமே ஒரு டைம் லூப் கதையாக மட்டும் அல்லாமல் உணர்வு ரீதியான படைப்பாகவும் உருவாக்கப்பட்டதுதான். ஒவ்வொரு முறையும் ஒரே நாளை மீண்டும் மீண்டும் வாழும் ட்ரீ, தான் யார் என்ற ஆன்ம விசாரணையை எதிர்கொள்வாள். தன்னுடைய தீய பண்புகளை அடையாளம் காண்பாள். தன்னை மாற்றிக்கொள்ள அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்வாள். நம் அன்றாட வாழ்க்கையில் போகிற போக்கில் நாம் சொல்லும் வார்த்தைகளை, செய்கின்ற காரியங்களை நின்று நிதானித்து அலசிப் பார்த்தால் நாம் யாரென்று நமக்கும் புரியும் என்பதே நிதர்சனம். அதைத்தான் இந்தப் படம் அலசுகிறது.

எடுபடாத இரண்டாம் பாகம்

‘ஹேப்பி டெத் டே’ படத்தில் ட்ரீ கதாபாத்திரம் எப்படி டைம் லூப்பில் சிக்கிக்கொள்கிறது என்பதை, இதன் இரண்டாம் பாகமான ‘ஹேப்பி டெத் டே 2யு' (Happy Death Day 2U) படத்தில் விரிவாகச் சொல்ல முயன்றிருப்பார்கள். ஆனால், முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாகத்தில் இல்லை என்று ரசிகர்கள் குறைபட்டுக்கொண்டார்கள். எனினும், படம் வணிக ரீதியாக ஹிட் அடித்தது. தமிழில் டாப்ஸி நடிப்பில் வெளிவந்த ‘கேம் ஓவர்’ திரைப்படத்தின் மையக்கருவும் ‘ஹேப்பி டெத் டே’ படத்தின் கதைதான்.

தனக்குத் துன்பம் இழைத்தவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம், ஒரு மனிதனுக்கு எல்லையற்ற ஆற்றலை வழங்கி அவனை எந்த எல்லைக்கும் இட்டுச் செல்லும். அப்படி ஒரு மனிதனைப் பற்றிய தென் கொரியாவிலிருந்து வெளிவந்த திரைப்படத்தைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE