ஜிப்ஸி- திரை விமர்சனம்

By காமதேனு

காஷ்மீர் கலவரத்தில் பெற்றோரை இழந்த ஜீவா நாடோடியாக தனது நடனக்குதிரையோடு சேர்ந்து பாட்டுப் பாடுவதை தொழிலாகக் கொண்டவர். அப்படி நாகூரில் தர்ஹா திருவிழாவுக்குப் போன இடத்தில் ஜீவாவுக்குள் காதல் துளிர்க்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம் முட்டுக்கட்டை போட, அதை உடைத்து வெளியேறி  ஜீவாவைக் கைப்பிடிக்கிறார் நாயகி. பிறகு, வட இந்தியாவில் குடியேறும் இந்த ஜோடி ஒரு கலவரத்தால் ஆளுக்கு ஒரு திசையில் பிரிகிறார்கள். அதன் பின்னணியையும் மதவாத அரசியலையும் சாடி மனிதத்தைக் கொண்டாட அழைப்பதே ‘ஜிப்ஸி’யின் கதை.

காலையில் தூங்கி விழித்ததும் தொழுகை, பெண்களுக்கான கடுமையான கட்டுப்பாடு என அடிப்படைவாத இஸ்லாமிய குடும்பத்தலைவனின் மனநிலை, இஸ்லாமியர்களை வேட்டையாடி கட்சி வளர்க்கும் எதிர் தரப்பு அரசியல் என எடுத்துக்கொண்ட விஷயத்தை மிக நேர்த்தியாக பார்வையாளர்களிடம் கடத்தியிருக்கிறார் இயக்குநர் ராஜூ முருகன்.

ஜீவாவுக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிப்பதற்கு வாய்ப்புள்ள படம். ‘சே’ என்னும் தன் குதிரையின் மீது அவர் காட்டும் சிநேகம், மனைவியிடம் தன்னை நிரூபித்து அவரது மனநிலையை சரிசெய்ய எடுக்கும் முயற்சி, காவல்நிலையக் காட்சிகள், தெருப்பாடகனாக மிளிர்வது எனத் தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார்.

அடிப்படைவாத சிந்தாந்தத்தில் திளைத்திருக்கும் குடும்பத்தின் மகளாக நடாஷா சிங் ஆரோக்கிய வரவு. முதல் பகுதியில் அடிப்படைவாதத்துக்குள் மூழ்கி இருக்கும் குடும்பத்தவரின் மகளாக அச்சு அசலாக உணர்வுகளைப் பிரதிபலிக்கிறார். ஆனால், பின்பகுதியில் அவர்பெரும்பாலான காட்சிகளில் ஒரேமாதிரியான முகப்பாவனையையே காட்டுவது சலிப்பூட்டுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE