‘தும்பா’ படத்துக்குப் பிறகு ‘போஸ்ட்மேன்’ என்ற வெப் சீரிஸில் நடித்த கீர்த்தி பாண்டியன், மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தவுள்ளார். மலையாளத்தில் பெரிய வெற்றியைப் பெற்ற ‘ஹெலன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் கீர்த்தி பாண்டியன் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
அப்பா அருண் பாண்டியன் நலமா?
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் திரையில் முகம் காட்டுகிறார் கவுண்டமணி. தனுஷ் இயக்கத்தில் வெளியான ‘பவர் பாண்டி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளாராம். இயக்கம் சுப்ரமணியம் சிவா.
அப்பாவாகவா மகனாகவா?!
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி உருவாகும் ‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பும், ‘குயின்’ வெப் சீரிஸின் இரண்டாவது சீசன் படப்பிடிப்பும் மும்முரமாக நடந்துவருகின்றன. இந்நிலையில், கதையைப் பற்றி தன்னிடம் விவரிக்காமல் படப்பிடிப்பு நடத்துவது தவறு என்று ஜெ.தீபா வழக்குத் தொடுத்துவிட்டார். இயக்குநர்கள் ஏ.எல்.விஜய், கௌதம் வாசுதேவ் மேனன் இருவரும் இரண்டு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வழக்கில்லாத (ஜெ) வாழ்க்கை வரலாறா?
13 வருடங்களுக்கு முன்பு தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’ திரைப்படம், இப்போது இந்தியில் ரீமேக் ஆகவிருக்கிறது. ‘கன்ஸ் ஆஃப் பனாரஸ்’ என்ற பெயரில் தயாராகும் இப்படத்தில், கரன் நாத் ஹீரோவாக நடிக்கவுள்ளாராம். ‘பிக் பாஸ்’ கணேஷ் வெங்கட்ராமனும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகத் தகவல்.
‘குத்து’ ரம்யா கேரக்டர்ல யாருப்பா?