உலகம் சுற்றும் சினிமா - 26: அன்பெனும் ஆயுதமேந்திய தேவதை!

By க.விக்னேஷ்வரன்

பெண் என்பவள் பலவீனமானவள் என்ற அபத்தமான கருத்து நெடுங்காலமாகக் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இன்றைக்கு அதிகாரத்துக்கு எதிராக அஞ்சாமல் நின்று போராடுபவர்களில் பெண்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். ஒரு நடுத்தர வயதுப் பெண், தான் வசிக்கும் நிலத்தின் வளங்கள் சீரழிக்கப்படுவதைச் சகிக்க முடியாமல் வெகுண்டெழுந்தால் என்னவாகும்? பெண்ணின் மன திடமும், தயாள குணமும் எது வரை நீளும்? பிரதிபலன் பார்க்காமல் ஒரு பெண் தன் சமூகத்துக்காகக் களமிறங்கும் போது அவளின் தனிப்பட்ட துயரங்கள் அவளை எப்படி ஆட்டிப்படைக்கும் என்பதைச் சுவாரசியமாகச் சொன்ன திரைப்படம்தான் ‘வுமன் அட் வார்’.

தனது முதல் படமான ‘ஆஃப் ஹார்சஸ் அண்ட் மென்’ (2013) மூலம் உலக அளவில் கவனம் ஈர்த்த ஐஸ்லாந்து திரைப்பட இயக்குநர் பெனடிக்ட் எர்லிங்சனின் இரண்டாவது படைப்புதான் ‘வுமன் அட் வார்’. ஐஸ்லாந்து, ஸ்பானிஷ், உக்ரைனியன், ஆங்கிலம் என்று நான்கு மொழியில் வெளியான இத்திரைப்படம், வித்தியாசமான கதை சொல்லும் விதத்துக்காக உலக ரசிகர்களிடம் பாராட்டுகளை அள்ளியது.

தாய்மையின் போராட்டம்

ஐஸ்லாந்தில், இசை ஆசிரியையாகப் பணிபுரிபவள் ஹாலா. 50 வயதை நெருங்கிக்கொண்டிருக்கும் ஹாலா, தனியே வசிப்பவள். ஒரு குழந்தையைத் தத்தெடுக்கப் பல ஆண்டுகளாக முயன்றுவருவாள். நெல்சன் மண்டேலாவையும், காந்தியையும் தன் மானசிக வழிகாட்டிகளாகக் கொண்டிருக்கும் ஹாலாவுக்கு மற்றொரு முகமும் உண்டு. ஐஸ்லாந்து நாட்டின் இயற்கை வளத்தைச் சூறையாடும் அலுமினிய உருக்காலைகளை எதிர்த்து யாருக்கும் தெரியாமல் போராடிவருவாள்.

தொழிற்சாலைகளுக்குச் செல்லும் உயர் மின்னழுத்தக் கம்பங்களைச் சேதப்படுத்துவதுதான் அவளின் போராட்ட முறை. தொடர்ந்து மின்சாரம் தடைப்படுவதால் தொழிற்சாலைகள் பெரும் நஷ்டத்தைச் சந்திக்கும். வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்யத் தயங்கும். பொருளாதார நெருக்கடி உருவாவதால், இந்த நாச வேலையைச் செய்வது யார் என்பதைக் கண்டுபிடிக்க ராணுவத்தை அரசு களமிறக்கும். ஆரம்பத்தில் இது தீவிரவாதக் குழுக்களின் செயல் என்று எண்ணப்படும். பின்பு ஹாலாவே துண்டுப் பிரசுரங்கள் மூலம் தன்னை ‘மலைப் பெண்’ என்று அடையாளப்படுத்திக் கொள்வாள்.

இதற்கிடையே, ஒரு குழந்தையைத் தத்தெடுக்க வேண்டும் என்ற ஹாலாவின் நீண்ட நாள் ஏக்கத்துக்கும் ஒரு முடிவு வரும். உக்ரைனில் தன் பெற்றோரை இழந்த ஐந்து வயது சிறுமியைத் தத்தெடுக்கும் வாய்ப்பு அவளுக்குக் கிடைக்கும். ராணுவத்தின் தேடுதல் வேட்டைக்கு இடையே ஹாலா குழந்தையைத் தத்தெடுத்தாளா? அவளின் போராட்டம் என்னவானது என்பதை கணிக்க முடியாத திருப்பங்களுடன் சொல்லியிருப்பார் இயக்குநர் பெனடிக்ட்.

வித்தியாசமான திரைமொழி

வழக்கமான திரைமொழி இலக்கணங்களைச் சோதனை முயற்சியாக மீறியதுதான் இப்படத்தின் தனிச்சிறப்பு. குறிப்பாக, காட்சிக்கு ஏற்ற பின்னணி இசையை, அக்காட்சியிலேயே இசைக் குழு அமர்ந்து இசைப்பார்கள். ஹாலா காடு, மலை என்று அலைந்து திரியும்போதும் இசைக் குழுவும் அவளைப் பின் தொடர்ந்து செல்லும். ஆரம்பத்தில் உறுத்தலாக இருந்தாலும் அடுத்தடுத்த காட்சிகளில் இயக்குநரின் குறும்புத்தனம் ரசிக்கவைக்கும். ஹாலா ஒரு பாட்டு ஆசிரியையாகவும் இருப்பதால் அந்த இசைக் கலைஞர்களும், பின்னணி இசையும் அவளது கற்பனைகள் என்றும் புரிந்துகொள்ளலாம்.

அதேபோல் ஹாலா சைக்கிளில் வீட்டுக்கு வரும்போது, கடக்கும் ஒவ்வொரு வீட்டுத் தொலைக்காட்சியில் ஓடும் செய்திகள் மூலம் அவளைப் பற்றிய செய்திகள் எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாகத் திரித்து தவறாகச் சித்தரிக்கப்படுகின்றன என்பதை இயக்குநர் சுவையாக உணர்த்தியிருப்பார்.

“உன்னதமான அன்பை உணர்தலே உண்மையான புரட்சிக்கு வழிகாட்டும்” என்ற சே குவேராவின் வார்த்தைகளே இப்படத்தின் அடித்தளம். புரட்சியை வன்முறையால் வழிநடத்திட முடியாது... அதற்கு அன்பெனும் பெரும் ஆயுதம் வேண்டும். ஹாலாவுக்குத் தான் வசிக்கும் பூமி மேல் இருக்கும் அன்பு, அவளுக்கும் அவளது சகோதரிக்கும் இடையே இருக்கும் அன்பு, உக்ரைனில் அனாதையாகத் தவிக்கின்ற, தான் இதுவரை சந்தித்திராத ஐந்து வயதுக் குழந்தையின் மேல் ஹாலாவுக்கு ஊற்றெடுக்கும் அன்புதான் அவளைச் சாமானியத்திலிருந்து விலக்கி அசாதாரணமானவளாக மாற்றியது என்பதை எல்லாம் யதார்த்தமாகக் காட்சிப்படுத்தும் இத்திரைப்படம் புரட்சிக்கு புது வர்ணம் பூசிய படைப்பு.

1940-களில், அமெரிக்காவில் கொடிகட்டிப் பறந்த பந்தயக் குதிரையையும் அதைச் சுற்றிய மனிதர்களின் வாழ்வியலையும் பேசும் திரைப்படத்தைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE