உலகம் சுற்றும் சினிமா - 25: பொய்த்துப்போகும் மெய்நிகர் காதல்

By க.விக்னேஷ்வரன்

வாழ்வின் முக்கியமான தேவை எது? பணம், வீடு, புகழ் என்று பல புறக் காரணிகள் இருந்தாலும் மனம் விட்டுப் பேச ஒரு துணை இல்லையேல் அந்த வாழ்க்கை வீண்தான். தனிமைதான் மனிதனுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல். மனதில் சேகரமாகும் எண்ணங்களை, துள்ளிக் குதிக்கச் சொல்லும் சந்தோஷங்களை, துவண்டு சரியச் செய்யும் துன்பங்களை ஒளிவு மறைவின்றி பகிர்ந்துகொள்ள மனிதனுக்குத் துணை தேவை.

அதேபோல் அந்தத் துணைக்கும் தன் தரப்பு விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான தேவை இருப்பதே இரு தரப்புக்கும் இடையிலான உறவை நீடித்திருக்கச் செய்கிறது. நம்மைப் போலவே ரத்தமும், சதையும் கொண்ட மனிதர்தான் நமது துணையாக இருப்பார். அதில் பல சாதகமான அம்சங்களும் உண்டு. சில சிக்கல்களும் உண்டு. சில நேரங்களில் நம் எண்ணவோட்டமும், நம் துணையின் எண்ணவோட்டமும் வெவ்வேறு திசைகளில் பயணிக்கும்போது அந்த உறவில் விரிசல் ஏற்படுகிறது. உறவு முறிந்துபோவதும் உண்டு.

இவ்வாறு மனிதர்களுடனான உறவில் சிக்கி மனம் புண்பட்டுக்கிடப்பவன், ஒரு மென்பொருளைக் காதலிக்க ஆரம்பித்தால்? அந்த மென்பொருளும் நாளடைவில் சுயமாகச் சிந்திக்க ஆரம்பித்து தனக்கான உலகை வளர்த்துக்கொண்டால்? இந்த இரண்டு கேள்விகளின் அடிப்படையில் உருவானதுதான் ‘ஹெர்’ திரைப்படம்.‘அடாப்ஷன்’(2002), ‘வேர் தி வைல்ட் திங்ஸ் ஆர்’(2009) போன்ற படங்களை இயக்கிய ஸ்பைக் ஜோன்ஸ் 2013-ல், எழுதி உருவாக்கிய படம்தான் ‘ஹெர்’. தற்போது ‘ஜோக்கர்’ படத்துக்காகச் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருது வாங்கியிருக்கும் ஜாக்வின் ஃபீனிக்ஸ்தான் இப்படத்தின் நாயகன்.

சிலிக்கான் உறவு

எந்த ஆண்டு என்று குறிப்பிட்டுக் கூறப்படாத எதிர்காலத்தில் நடக்கும் கதை இது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிப்பவன் தியடோர் டவும்ப்ளி. சூழ்நிலை காரணமாகத் தங்களுக்கு நெருங்கியவர்களுக்குக் கடிதம் எழுத முடியாத நிலையில் உள்ளவர்களுக்காகக் கடிதம் எழுதும் நிறுவனத்தில் பணிபுரிபவன் தியடோர். காதலர்களுக்காக, தம்பதிகளுக்காக, பெற்றோர்களுக்காக, பிள்ளைகளுக்காக என்று பலருக்காக அவர்கள் எழுதுவது போலவே உணர்வுபூர்வமான, அழகான கடிதங்களை எழுதி மின்னஞ்சலில் அனுப்புவான். ஆனால்,  அவனது சொந்த வாழ்வில் பெரும் சோகம் குடிகொண்டிருக்கும். அவனுடைய காதல் மனைவியுடன் சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட மணமுறிவு அவனை வேதனையில் ஆழ்த்தியிருக்கும்.

இப்படி சோகத்தில் உழன்றுகொண்டிருக்கும் தியடோர் ஒரு நாள் ‘ஓஎஸ்1’ என்ற இயங்குதள மென்பொருளை வாங்கி தன் கணினி
மற்றும் செல்போனில் பதிவேற்றுவான். தன்னைத்தானே புதுப்பித்துச் செழுமைப்படுத்திக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் அந்த மென்பொருள், தனக்குத்தானே ‘சமந்தா’ என்று பெயர் சூட்டிக்கொள்ளும். இனி அது... இது என்றல்லாமல், அவள்… இவள் என்றே சமந்தாவை அழைக்கலாம்.

உறவும் முறிவும்

தியடோரின் அனுதின வேலைகளில் அவனுக்கு உதவியாக இருக்க ஆரம்பிப்பாள் சமந்தா. கிட்டத்தட்ட ஒரு தோழி போல் ஆகிவிடுவாள். தியடோரின் அன்றாட வேலைகளை அவனுக்கு ஞாபகப்படுத்துவது, ஜோக் சொல்லிச் சிரிக்கவைப்பது, அவன் எழுதும் கடிதங்களைத் திருத்துவது, அவன் மற்ற பெண்களுடன் ‘டேட்டிங்’ செல்ல உதவுவது என்று அவர்களின் உறவு வளரும். இருவருக்கும் இடையில் நடக்கும் உரையாடல் மூலம், மனித வாழ்க்கை, உணர்வுகள் என்று சமந்தாவும் தன் அறிவை வளர்த்துக்கொள்வாள். வெறுமனே குரல் வடிவத்தில் இருக்கும் சமந்தாவுடனான உறவு தியோடரைச் சந்தோஷத்தில் ஆழ்த்தும். நாளடைவில் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து, பாலியல் ரீதியான தொடர்பு வரை வளர்ந்துவிடும்.

அதன் நீட்சியாக அவர்களுக்குள் கருத்து வேறுபாடும் ஏற்படும். சிறிது காலத்தில் அதீதமான அறிவைப் பெற்றுவிடும் சமந்தா, மற்ற மென்பொருட்களுடன் இணைந்து தங்களுக்கான மெய்நிகர் உலகை உருவாக்கி அங்கே செல்ல தீர்மானித்துவிடுவாள். அந்தப் புள்ளியில் தியடோருக்கும், சமந்தாவுக்குமான உறவு முறிந்துவிடும்.

துணை தேடும் தருணம்

மீண்டும் தனிமை இருளில் தள்ளப்படும் தியடோர், தன்னைப் போலவே ஒரு மென்பொருளுடன் நட்பாகப் பழகிவந்த தன் கல்லூரி காலத் தோழியான ஏமியைத் தேடிப்போவான். அவளுடைய மென்பொருளும் அவளை விட்டுச்சென்றிருக்கும். லாஸ் ஏஞ்சல்ஸின் வானத்தில் சூரியன் அஸ்தமிக்கும் மாலைப் பொழுதின் பின்னணியில் இருவரும் தங்கள் பரஸ்பர சோகத்தைப் பகிர்ந்துகொள்வார்கள். ஏமி, தியடோரின் தோளில் சாயும் காட்சியுடன் படம் நிறைவடையும். வாழ்வின் எந்தத் தருணத்திலும் நம்முடைய தேவையெல்லாம் சாய்ந்துகொள்ள ஒரு தோள் மட்டும்தானே!

இயந்திர உறவு

ஹாலிவுட் திரையுலகில், மனிதனுக்கும் இயந்திரத்திற்கும் ஏற்படும் உறவுகளைப் பற்றிப் பல படங்கள் உள்ளன, தமிழில் ‘எந்திரன்’ நல்ல உதாரணம். ஆனால், இந்தப் படங்களில் எல்லாம் அந்தஇயந்திரத்துக்குத் தொட்டு உணரக்கூடிய உடல் அல்லது உருவம் இருந்தது. அதனால் மனிதனுக்கும், இயந்திரத்துக்குமான உறவைவிவரிக்க அதிக மெனக்கிடலுக்கு அவசியம் ஏற்படவில்லை. ஆனால்,‘ஹெர்’ படத்தில் சமந்தாவுக்கு எந்த உருவமும் கிடையாது. அவளுடைய குரல் மட்டுமே படத்தின் ஆன்மா.

தன் குரல் மூலம் இந்தப் படத்தில் சமந்தாவாகவே வாழ்ந்து காட்டியிருப்பார் நடிகை ஸ்கார்லட் ஜான்சன். பெரும்பாலான காட்சிகளில் தனியாகவே நடித்திருக்கும் நாயகன் ஜாக்வின் ஃபீனிக்ஸ், தனது நுட்பமான நடிப்புத் திறனை வழங்கியிருப்பார். மனிதனுக்கும், ஒரு இயந்திரக் குரலுக்கும் இடையேயான பந்தத்தை உணர்வுபூர்வமாக உருவாக்கியிருப்பார் இயக்குநர் ஸ்பைக் ஜோன்ஸ். அறிவியல் புனைகதை என்றாலும், பார்வை யாளர்களுக்கு அதிக சிரமம் வைக்காமல் நாம் ரசிக்கும் வகையில் காட்சிகள் மற்றும் வசனங்கள் கட்டமைக்கப்பட்டிருப்பது இப்படத்தின் தனிச் சிறப்பு.

பாசாங்கற்ற படைப்பு

மனிதனுக்கு உடல்ரீதியான துணையைவிட மனரீதியான துணைதான் அவசியம் என்றெல்லாம் அதீதப் பாசாங்கு காட்டாமல், உடல்ரீதியான தேவைகளையும் வசனம் மூலமாகவே பதிவுசெய்திருப்பார் ஸ்பைக் ஜோன்ஸ். அதனால்தான் ‘ஹெர்’ திரைப்படத்துக்காக, சிறந்த அசல் திரைக்கதைக்கான ஆஸ்கர் விருது அவருக்கு வழங்கப்பட்டது.

ஒற்றை ஆளாகப் பன்னாட்டுத் தொழிற்சாலைக்கு எதிராகப் போரில் இறங்கும் பெண்மணியைப் பற்றிய திரைப்படம் குறித்து அடுத்த வாரம் பார்ப்போம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE