உலகம் சுற்றும் சினிமா - 24: துளிர்க்கும் அசல் ‘மனிதம்’!

By க.விக்னேஷ்வரன்

மனித இனத்தின் அழிவு எப்படி ஆரம்பிக்கும்? இயற்கைச் சீற்றம், கொள்ளை நோய் என்று மனித இனத்தின் அழிவுக்கான சாத்தியங்களாகப் பல அனுமானங்கள் சொல்லப்படுகின்றன். ஆனால், இவை அனைத்தையும் தாண்டி ஜீவித்து நிற்கும் வல்லமையைப் பரிணாம வளர்ச்சி மனிதனுக்கு வழங்கியுள்ளது என்பதைச் சரித்திரத்தின் ஏடுகளைப் புரட்டினால் புரியும். ஆம், மனித இனத்தின் உண்மையான அழிவு, மனிதன் தனக்கு அடுத்த சந்ததியை உருவாக்க முடியாமல் போகும் தருணத்தில்தான் தொடங்குகிறது.

ஒருவேளை, குழந்தை பெற்றுக்கொள்ளும் திறனை ஒட்டுமொத்த மனித இனமும் இழந்துவிட்டால்? புதிதாகக் குழந்தைகள் பிறக்காமல், நிகழ்காலத்தில் இருப்பவர்கள் எல்லாம் வயதாகி ஒருவர் பின் ஒருவராக இறக்க ஆரம்பித்தால்? இதைக் கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்தான் ‘சில்ட்ரன் ஆஃப் மென்’. பெண் எழுத்தாளர் பி.டி.ஜேம்ஸ் எழுதிய ‘தி சில்ட்ரன் ஆஃப் மென்’ நாவலைத் தழுவி 2006-ல் வெளிவந்த படம் இது. இதன் இயக்குநரான அல்ஃபோன்சா குரோன், ஹாலிவுட் திரையுலகில் முக்கியமானவர். ‘ஹாரி பாட்டர் அண்ட் தி ப்ரிசனர் ஆஃப் ஆஸ்கபான்’(2004), ‘கிராவிட்டி’(2013) போன்ற படங்களால் அறியப்படும் அல்ஃபோன்சா குரோனின் மாஸ்டர்பீஸ் இந்தப் படம்.

கதை என்ன?

2027-ல், நடக்கும் கதை இது. 2009 முதல் உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் குழந்தை பெற்றுக்கொள்ளும் திறனை இழந்துவருவார்கள். லண்டனில் வசித்துவரும் தியோ ஃபாரன் தான் படத்தின் நாயகன். அகதிகளை விலங்குகளைப் போல் நடத்தும் லண்டன் அரசை எதிர்த்துப் போராடிய முன்னாள் கலகக்காரனான தியோ, தற்போது சாதாரண குமாஸ்தா வேலை பார்ப்பவன். உலகில் கடைசியாகப் பிறந்த குழந்தையான 18 வயதுடியாகோ ரிகார்டோ கொல்லப்பட்ட செய்தியை ஊரே துக்கத்துடன் கேட்டுக்
கொண்டிருக்கும்போதும் தன் வேலையில் மட்டும் கவனமாக இருப்பான்.

தியோவின் முன்னாள் மனைவியான ஜூலியன், புரட்சியாளர் படையான ‘ஃபிஷ்’ எனும் அமைப்பின் தலைவியாகச் செயல்படுபவள். ஒருநாள், ஜூலியனால் தியோ கடத்தப்படுவான். அவள் விதிக்கும் நிபந்தனையின் பேரில் பணத்துக்காக ‘கீ’ என்ற அகதிப் பெண்ணை லண்டனை விட்டு தப்பிக்கச் செய்ய உதவ ஒப்புக்கொள்வான் தியோ. கீயை அழைத்துக்கொண்டு இவர்கள் பயணிக்கையில் ஒரு மர்ம கும்பல் தாக்குதல் நடத்தும். அதில் ஜூலியன் இறந்துவிடுவாள். அப்போது தியோவுக்கு ஓர் உண்மை தெரியவரும். கீ கர்ப்பமாக இருக்கிறாள், 18 ஆண்டுகள் கழித்து உலகில் கர்ப்பம் தரித்த முதல் பெண் கீ தான்.‘ஹியூமன் ப்ராஜெக்ட்’ என்றழைக்கப்படும் அறிவியல் அறிஞர் குழுவிடம் அவளை ஒப்படைத்து மீண்டும் மனித இனப்பெருக்கத்தை உருவாக்குவதுதான் ஜூலியனின் லட்சியம். ஆனால், அவளது குழந்தையைக் காட்டி தங்கள் புரட்சிக் குழுவுக்குப் படை திரட்ட முடிவுசெய்த ‘ஃபிஷ்’ குழுவினர்தான் ஜூலியனைக் கொலை செய்திருப்பார்கள். இதையெல்லாம் அறிந்துகொள்ளும் தியோ, அவர்களிடமிருந்து கீயை மீட்டு ‘ஹியூமன் ப்ராஜெக்ட்’ குழுவிடம் சேர்த்தானா என்பதே மீதிக் கதை.

மிகையில்லாத ‘டிஸ்டோபியன்’

வருங்காலத்தில் வரப்போகும் சீரழிவைக் கற்பனையாகச் சொல்வதுதான் ‘டிஸ்டோபியன்’ வகைக் கதைகள். பெரும்பாலும் டிஸ்டோபியன் வகை திரைப்படங்களில் வருங்காலங்களில் இருக்கப்போகும் தொழில்நுட்பங்கள் என்று காட்டப்படுபவை மிகவும் மிகைப்படுத்தப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு 1982-ல், வெளிவந்த ‘ப்ளேட் ரன்னர்’ திரைப்படத்தில் 2019-ல், பறக்கும் கார்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக ஆகிவிட்டதுபோல் காட்டப்பட்டிருக்கும். ஆனால், ‘சில்ட்ரன் ஆஃப் மென்’ படத்தில் அதுபோன்ற மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் ஏதுமில்லாமல், சின்னச் சின்ன அறிவியல் விஷயங்களை மட்டுமே புகுத்தி நம்பகத்தன்மையைக் கூட்டியிருப்பார் இயக்குநர் அல்ஃபோன்ஸா குரோன்.

ஒளிப்பதிவில் புரட்சி

உலகத் திரைப்பட வரலாற்றில் ‘சில்ட்ரன் ஆஃப் மென்’ படத்தின் ஒளிப்பதிவுக்கு என்று சிறப்பு அந்தஸ்து உள்ளது. அதற்குக் காரணம் இப்படத்தில் வரும் ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட, நீளமான மூன்று காட்சிகள். கீ குழந்தை பெற்றுக்கொள்ளும் 199 நொடிகள் நீளம் கொண்ட காட்சி, ராணுவத்தின் குண்டு மழைக்கு நடுவே தியோ, கீயைத் தேடி ஓடும் 378 நொடிகள் கொண்ட காட்சி மற்றும் காருக்குள் சுற்றிச் சுழன்று எடுக்கப்பட்ட 247 நொடிகள் நீளம் கொண்ட காட்சி – இவை மூன்றுமே ஒளிப்பதிவுத் துறையின் அசாத்தியமான சாதனைகள். குறிப்பாக, காருக்குள் எடுக்கப்பட்ட காட்சியின் ஒளிப்பதிவு ரொம்பவே பிரபலம். (இதை எப்படி எடுத்தார்கள் என்பதை விளக்கும் காணொலிகள் யூ-டியூபில் உள்ளன). சிறந்த ஒளிப்பதிவுக்கான ஆஸ்கர் விருதுக்கு இத்திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், விருது கிடைக்கவில்லை.

ஆஸ்கர் கிடைக்கவில்லை என்றாலும், சிறந்த ஒளிப்பதிவுக்கு எடுத்துக்காட்டு என்றால் அது ‘சில்ட்ரன் ஆஃப் மென்’ என்றுதான் ரசிகர்கள் சிலாகிக்கிறார்கள். இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் இமானுவேல் லுபெஸ்கியின் திறமையின் மற்றொரு சான்றுதான் 2015-ல், லியானார்டோ டி காப்ரியோ நடிப்பில் வெளிவந்த ‘ரெவனென்ட்’ திரைப்படம்.

காக்கும் குழந்தைகள்

நம் வாழ்வின் நம்பிக்கை அடுத்த தலைமுறையின் கரங்களில்தான் உள்ளது என்பதை அழகாகப் பதிவுசெய்த படம் ‘சில்ட்ரன் ஆஃப் மென்’. இறுதிக் காட்சியில் தங்களை நோக்கி வரும் கப்பலைப் பார்த்துவிட்டு தன் குழந்தையிடம், “நாம் பாதுகாப்பாக இருக்கிறோம்” என்று கீ சொல்லும் வசனம் மிக முக்கியமானது. உண்மையில் அந்த வசனம் கப்பலைக் குறித்தது அல்ல. தன் குழந்தையால்தான் ஒட்டுமொத்த மனித இனமும் பாதுகாப்பாக இருக்கப்போகிறது என்பதே கீயின் வார்த்தைகளின் மறைபொருள். ஆம், குழந்தைகள் நம்மை மீட்டெடுக்க வந்த ரட்சகர்கள் அல்லவா!

மனிதனுக்கும் மென்பொருளுக்கும் இடையே காதல் மலர்ந்தால் எப்படியிருக்கும்? அடுத்த வாரம் பார்ப்போம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE