உலகம் சுற்றும் சினிமா - 20: பெர்லின் சுவரும் ‘பாப்’ இசையும்

By க.விக்னேஷ்வரன்

போர்களைத் தன் அடித்தளமாகக் கொண்டே உலக வரலாறு தன்னைக் கட்டமைத்துக்கொள்கிறது. உலக நாடுகளுக்கு இடையேயான போர், அண்டை நாடுகளுடனான உரசல், உள்நாட்டுக் கலவரம் என்று வன்முறையின் கோர நிழல் விழும் இடமெல்லாம் மனிதனின் வாழ்வு சிதைக்கப்படுகிறது. போர் மேகங்கள் சூழும் இடங்களில் கலை, ரசனை, நகைச்சுவை அனைத்தும் சாமானியர்களுக்கு மறுக்கப்படுகின்றன. ஆனால், போரினால் துவண்டுபோன மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்கும் ஆகச் சிறந்த கருவிகள்தான் இசையும் கலையும் என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் ஏனோ உணர்வதேயில்லை.

பெர்லின் சுவரால் கிழக்கு - மேற்கு என்று இரு தேசங்களாக ஜெர்மனி பிரிந்து கிடந்த துயரமானகாலத்தில் வாழ்ந்த இளைஞர்களின் வாழ்க்கையையதார்த்தமாகப் பதிவுசெய்த படம்தான் ‘சன் ஆலி’(1999). ஜெர்மன் மொழியில் Sonnalle. ‘என்விஏ’ (2005), ‘ஹோட்டல் எக்ஸ்' (2011) போன்ற வித்தியாசமான திரைப்படங்களை இயக்கிய லியாண்டர் ஹூஸ்மன் முதன்முதலில் இயக்கிய படம் இது.

சுவரைத் தகர்த்த இசை

1970-களில் கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிக்கு இடையிலான எல்லைக் கோடாக உருவான பெர்லின் சுவர்தான் படத்தின் பிரதான கதைக் களம். ‘சன் அவென்யு’ தெருவை இந்தச் சுவர் குறுக்காகப் பிரித்துச்செல்லும். தெருவின் ஒருபுறம் கிழக்கு பெர்லின்; மறுபுறம் மேற்கு பெர்லின். கிழக்குப் பக்கத்தில் உள்ள ‘சன் அவென்யு’ பகுதியில் வசிக்கும் மிச்செல் மற்றும் அவனது நண்பர்களைப் பற்றிய கதைதான் இத்திரைப்படம். பதினேழு வயதாகும் மிச்செலுக்கும் அவனது நண்பர்களுக்கும் ‘பாப்’ இசை மீது அதீத நாட்டம். ‘பாப்’ இசையும், ‘ஹிப்பி’ கலாச்சாரமும் அக்காலகட்டத்தில் ஜெர்மனியில் தடை செய்யப்பட்டிருந்தது. ‘பாப்’ இசையின் தீவிரக் காதலர்களான மிச்செலும் அவனது நண்பர்களும், ‘பாப்’ இசைத் தட்டுகளைத் திருட்டுத்தனமாகக் கள்ளச்சந்தையில் வாங்கிக் கேட்டு மகிழ்வார்கள்.

இதற்கிடையே, தன் பள்ளியில் படிக்கும் மிரியத்தை மிச்செல் ஒருதலையாகக் காதலித்து வருவான். அவளைக் கவரத் தன்னை ஒரு புரட்சியாளனாகக் காட்டிக்கொள்ள முயற்சி செய்வான். ஆனால், மிரியம் மேற்கு பெர்லினைச் சேர்ந்த ஒருவனைக் காதலிப்பாள். அரசின் கெடுபிடிகளுக்கு மத்தியில் வாழும் மிச்செலின் காதல் வெற்றிபெற்றதா, அவனது நண்பர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தன என்பதை சுவாரசியமாக, அதேசமயம் அழுத்தமாகச் சொல்லியிருப்பார் லியாண்டர் ஹூஸ்மன்.

படத்தின் மையமாக மிச்செலின் காதலை வைத்துக்கொண்டு, பெர்லின் சுவரைச் சுற்றிய அரசியல், அரசாங்கத்தின் கையாலாகாத்
தனம், சர்வாதிகாரம் என அனைத்தையும் பகடி செய்த படம் இது. மிச்செலையும் அவனது நண்பர்களையும் ஓயாமல் சோதனை போடும் ராணுவ அதிகாரி, மேற்கு பெர்லினிலிருந்து தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கடத்திவரும் மிச்செலின் மாமா, மேற்கு பெர்லினுக்கு ஓடிவிட நினைக்கும் மிச்செலின் தாய், ‘பாப்’ இசை ஆல்பத்தைக் காப்பாற்ற ராணுவத்திடம் குண்டடிபடத் தயாராக இருக்கும் சிறுவன் என்று ஒவ்வொரு கதாபாத்திரமும் பெர்லின் சுவரைச் சுற்றி வாழ்ந்த மனிதர்களைப் பிரதிபலிக்கும் வகையில் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கும்.

இசை வழியும் இறுதிக்காட்சி

கதாபாத்திர அமைப்பில், கதாசிரியர்களான தாமஸ் ப்ரூசிக், டெட்லவ் பக், லியாண்டர் ஹூஸ்மனின் திறமை மிளிரும். படத்தின் இறுதிக்காட்சி கவித்துவமானதாக அமைக்கப்பட்டிருக்கும். புகழ்பெற்ற ‘பாப்’ பாடகர் வெய்ன் கார்ஸன் பாடிய ‘தி லெட்டர்' பாடலை இசைக்கவிட்டு மிச்செலும் அவனது நண்பனும் பால்கனியில் ஆடுவார்கள். அதைப் பார்க்கும் தெருவாசிகளிடமும் இசையின் துள்ளல் ஒட்டிக்கொள்ளும். அனைவரும் நடனமாட ஆரம்பிப்பார்கள். நடனம் ஊர்வலமாக மாறும். இசையின் பின்னணியில் அனைவரும் நடனமாடியபடியே பெர்லின் சுவரை நோக்கி நடக்க ஆரம்பிக்கும் காட்சியுடன் படம் நிறைவடையும்.

படத்துக்கு விமர்சனங்கள் எழாமல் இல்லை. கிழக்கு ஜெர்மனியில் நிலவிய உண்மையான பிரச்சினைகளைப் பேசாமல், அங்கு வாழ்க்கை சிறப்பாக இருப்பதாகவும், மேற்குப் பகுதியில்அடக்குமுறை அதிகமாக இருப்பதாகவும் படத்தில் காட்டப்பட்டுள்ளதாக விமர்சனம் எழுந்தது. ஆனால், அதையெல்லாம் தாண்டி இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

இசையின் வலிமை

1989 நவம்பர் 9-ம் தேதி பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டு, கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனி மக்கள் ஒன்றிணைந்தனர். இந்த வரலாற்று நிகழ்வுக்கு ‘பாப்’ கலாச்சாரமும் ஒரு காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை. 1987-ல், டேவிட் பவ்வி என்ற ‘பாப்’ பாடகர் பெர்லின் சுவரின் மேற்குப் பகுதியின் அருகிலிருந்து நடத்திய இசைவிழாவை, கிழக்குப் பக்கத்தில் சுவருக்கு அருகில் நின்று நூற்றுக்கணக்கான மக்கள் கேட்டு ரசித்தார்கள். இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத கிழக்கு ஜெர்மனி ஆட்சியாளர்கள், அவர்கள் மீது ராணுவத்தைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இது போன்ற பல நிகழ்வுகளின் சங்கிலித் தொடராக மக்கள் மனதில் அரசாங்கத்தின் மேல் ஏற்பட்ட வெறுப்பே பெர்லின் சுவரின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.

அரசின் இரும்புக் கரங்கள் எவ்வளவு இறுக்கினாலும், அதன் விரல்களுக்கிடையே நழுவி, மனித மனங்களுக்குள் ஊடுருவும் வலிமை இசைக்கு உண்டு. ஏனென்றால், இசைக்கு எல்லைகள் கிடையாது. எல்லை தாண்டி எதிரியின் மனதையும் வருடிச் செல்ல இசையினால் முடியும். போரினாலும், பகைமை உணர்வினாலும் வறண்டுபோன மனித மாண்பின் ஈரத்தை மீட்டெடுக்க இசையால் மட்டுமே முடியும் என்பதை யதார்த்தமாகச் சொன்ன இந்தப் படம், ‘பாப்’ கலாச்சாரத்துக்கு ஜெர்மன் தேசத்திலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட பூங்கொத்து.

பயணங்களின்போது நாம் பலரைக் கடந்திருப்போம். அப்படிப்பட்ட ரயில் சிநேகம் வாழ்க்கைக்கே அச்சுறுத்தலாக மாறினால்? அடுத்த வாரம் பார்ப்போம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE