எங்க சாருக்கு கண்ணுல தண்ணியே வந்துருச்சாம்! - ‘கே.டி (எ) கருப்பு துரை’ புகழ் நாகவிஷால் பேட்டி

By காமதேனு

க.விக்னேஷ்வரன்
vigneshwaran.k@hindutamil.co.in

படிய வாரிய முடி, துறுதுறுப்பான கண்கள், சிங்கப் பல் சிரிப்பு, வெள்ளந்தியான மதுரை பாஷை… என்று பார்த்ததும் மனதில் ஒட்டிக்கொள்கிறான் நாகவிஷால். ‘கே.டி (எ) கருப்புதுரை’ படத்தில் ‘குட்டி’ கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்களின் மனதை வென்றிருக்கும் இந்தச் சிறுவன், வெகு நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவுக்குக் கிடைத்திருக்கும் திறமையான குழந்தை நட்சத்திரம்.

மதுரை அண்ணாநகரில் உள்ள நாகவிஷாலின் வீட்டில் அவனைச் சந்தித்தோம். சில கேள்விகளுக்குக் கண்கள் சுருக்கிய சிரிப்புடன் பதில் சொன்ன நாகவிஷால், சில கேள்விகளுக்கு ‘பெரிய மனுச’ தோரணையுடன் நெற்றிப்பொட்டில் விரல் வைத்து யோசனையுடன் பதில் சொன்னது தனி அழகு. இனி, நாகவிஷாலின் பேட்டி:

என்ன படிக்கிறீங்க தம்பி..?

மதுரை மங்கையர்கரசி ஸ்கூல்ல எட்டாங் கிளாஸ் படிக்கிறேன். படம் ரிலீஸ் ஆனதால மூணு நாள் ஸ்கூலுக்குப் போகல. நாளைக்குத்தான் போகணும். படத்துல நடிக்க நான் லீவே போடல தெரியுமா? பரீட்சை லீவுலேயே ஷூட்டிங்ல நடிச்சு முடிச்சுட்டேன். ‘ஒழுங்கா படிக்கணும்’னு டைரக்டர் மதுமிதா மேடம் சொல்லிட்டே இருப்பாங்க.

இந்தப் படத்துல நடிக்க வாய்ப்புக் கிடைச்சது எப்படி ராஜா?

டிவி-யில படங்கள் பார்க்கையில, இவுக கூடவெல்லாம் சேர்ந்து நடிச்சா எப்படி இருக்கும்னு நினைச்சுப்பேன். சும்மா, வீட்டுல சினிமா வசனம் எல்லாம் பேசிக்காட்டுவேன். ஒரு நாள், என் பெரியம்மாக்கு தெரிஞ்சவங்க, ‘ஒரு படத்தோட ஆடிஷன் இருக்கு, இந்தப் பயலக் கூட்டிப் போகலாம்ல’னு கேட்டாங்க. குற்றாலத்துல ஆடிஷன் நடந்துச்சு. ஆடிஷன்னா என்னான்னே எனக்குத் தெரியாது. அது நடக்கிற இடத்துக்குப் போனதும், அங்க ஒரு தாத்தா படுத்துக் கிடந்தாரு. அவரை எந்திரிக்க வைக்கச் சொன்னாங்க. நான் போய், ‘தாத்தா ப்ளீஸ், எந்திரிங்க’னு பல முறை சொல்லிப் பார்த்தேன். அவர் என்னைச் சட்டையே செய்யல. கடுப்பாகிப்போய், ‘இந்தார்யா யோவ், இப்போ எந்திக்கிறியா இல்ல கல்லக் கொண்டு மண்டைய ஒடைக்கவா?’னு நம்ம மதுரை பாஷையில கேட்டேன். உடனே அவரு சிரிச்சிட்டே எந்திரிச்சிட்டார். என்னைய செலக்ட் பண்ணிட்டாங்க. அப்புறம்தான் எனக்குத் தெரியும், ஆடிஷனுக்கு வந்த 250 பசங்கள்ல என்னை மட்டும்தான் செலக்ட் பண்ணியிருக்காங்கன்னு. ஸ்கூல்ல ஃபர்ஸ்ட் ரேங்க் வாங்கின மாதிரி ஜாலியா இருந்துச்சு.

முதல் நாள் ஷூட்டிங் எப்படி கண்ணு இருந்துச்சு?

முதல் நாளு குற்றாலத்துல ஷூட்டிங். மு.ரா தாத்தாவோட லவ்வரப் பாக்கப் போற சீன்தான் எடுத்தாக. எனக்கு முதல் நாள் எந்த வசனமுமில்லை. ஷூட்டிங் போக முன்னாடியே எனக்குப் பத்து நாளு சென்னைல வச்சு நடிக்க கிளாஸ் எடுத்தாக. அப்பவே கேமராமேன் அண்ணே, அசிஸ்டென்ட் டைரக்டர் அண்ணனுங்க, மு.ரா தாத்தாகூடவெல்லாம் நல்லா பேசிப் பழகிட்டேன். ஆரம்பத்துல கேமரா முன்னாடி நடிக்கவே வரலை. அப்புறம் அது பழகிடுச்சு.

மு.ராமசாமிகூட நடிக்கிறது சுலபமா இருந்துச்சாம்மா?

அவரை மு.ராமசாமினுலாம் எனக்குக் கூப்பிட வராது. மு.ரா தாத்தாதான் ஈசியா இருக்கு. அவர்கூட நடிக்க ஜாலியா இருந்துச்சு. அவர் பெரிய நடிப்பு வாத்தியார்னு எங்க அம்மா சொல்லித்தான் எனக்குத் தெரியும். எனக்கு ஷூட்டிங்கும் ஸ்கூல் மாதிரிதான் இருந்துச்சு. அவங்க சொல்லிக் கொடுக்கிறத செய்வேன். அம்புட்டுதான்.

உங்க ஸ்கூல் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் படம் பார்த்துட்டு என்ன சொன்னாங்க ராஜா?

‘சூ….ப்ப்ப்ப்பரா இருந்துச்சு’ன்னு சொன்னாய்ங்க. இன்னும் சில பயலுக படம் பாக்கல. டிக்கெட் கேட்டு இருக்காய்ங்க. அம்மாகிட்ட வாங்கித் தாரேன்னு சொல்லியிருக்கேன். எங்க ஸ்கூல் வாத்தியார் ரமேஷ் சாருக்குப் படம் பார்த்து கண்ணுல தண்ணியே வந்துருச்சாம். ஸ்கூல் பிரேயர்ல பிரின்சிபால் என்னைக் கூப்பிட்டுப் பாராட்டுனார். இதுக்காகவே இன்னும் நிறைய படங்கள்ல நடிக்கணும்ணே.

ஜாக்ரன்ல நடந்த திரைப்பட விழாவுல சிறந்த நடிகருக்கான விருது வாங்கி இருக்கீங்களே குட்டி?

ஆமா. பெரிய பெரிய இந்தி ஹீரோக்கள்கூட என் பெயரும் போட்டியில இருந்துச்சாம். கடைசில என்னைத் தான் செலக்ட் பண்ணாங்க. ஒரு ஹீரோ கூட, நான் சூப்பரா நடிச்சிருக்கேன்னு பாராட்டுனாரு. அவரு பேரு... அச்சச்சோ மறந்து போச்சே… (’அம்மா அவரு பேரு என்னமா?’என்று தனது அம்மாவிடம் கேட்டுவிட்டு மனோஜ் பாஜ்பாய் என்கிறான்).

அடுத்து யார்கூட நடிக்கணும்னு ஆசை தங்கம்?

எனக்கு அஜித்னா ரொம்பப் பிடிக்கும். அதுக்காக அவர்கூட மட்டும்தான் நடிப்பேன்னு சொல்ல மாட்டேன். விஜய், தனுஷ்னு யார் படமா இருந்தாலும் ஒகே. என்ன வேஷம்னாலும் ஓகே. தைரியமா நடிக்க ரெடி. அதே மாதிரி எனக்கு எல்லா ஹீரோயின் அக்காக்களையும் புடிக்கும். ஆனா, எந்தப் படத்துல நடிச்சாலும் ஒழுங்கா படிக்கணும்னு அம்மா சொல்லியிருக்காங்க. படிப்புதான் ஃபர்ஸ்ட். ஆக்டிங் நெக்ஸ்ட்.

படம்: பு.க.பிரவீன்

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE