மிக மிக அவசரம் - திரை விமர்சனம்

By காமதேனு

காமதேனு விமர்சனக் குழு
readers@kamadenu.in

பவானி ஆற்றங்கரையில் உள்ள கோயில் திருவிழாவுக்கு வெளிநாட்டு மந்திரி வருகிறார். அவருடைய பாதுகாப்புக்கு வழியெங்கும் காவல்துறை ஆட்கள் நிற்கவைக்கப்படுகிறார்கள். அதில் ஒரு பாலத்தின் மீது பெண் காவல்துறை அதிகாரி ஸ்ரீ ப்ரியங்கா நிற்க வைக்கப்படுகிறார். நாள் முழுக்க நிற்கும்போது இயற்கை உபாதை கழிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அவரை எங்கேயும் நகரக் கூடாது என்று மேலதிகாரியும் டார்ச்சர் பண்ணுகிறார். இப்படியான சூழலில் அவர்படும் துன்பத்தையும், எப்படி சமாளித்தார் என்பதையும் சொல்லும் படம் ‘மிக மிக அவசரம்’.

நடிகைகள் பலரும் ஏற்று நடிக்கத் தயங்கும் கதாபாத்திரத்தில் ஸ்ரீ ப்ரியங்கா நடித்துள்ளார். அதற்காக வாழ்த்துகள். முதலில் சாதாரணமான கதைதான் போல என வழக்கமான காட்சியமைப்பாக இருந்தாலும், காட்சிகள் நகர நகர, தான் படும் அவஸ்தைகளை நடிப்பால் நம்பகத்தன்மையைப் பார்ப்பவர்களுக்குக் கடத்தியுள்ளார். இதன் மூலம் தமிழகக் காவல்துறை
யில் இருக்கும் பெண்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

ப்ரியங்காவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்கும் அதிகாரியாக என்.முத்துராமன், அதிக வசனங்கள் இல்லாமல் தன்  நடிப்பால் வில்லத்தனத்தைக் காட்டியுள்ளார். பாசமுள்ள காவல்துறை அதிகாரியாக ராமதாஸ் யதார்த்தமாக நடித்துள்ளார். வீ.கே.சுந்தர், ஹரிஷ் குமார், சரவண சக்தி, லிங்கா, பேபி சனா ஜெயின் என சில கதாபாத்திரங்களும் தங்களுடைய பணியைக் கச்சிதமாக செய்துள்ளனர். கவுரவ தோற்றத்தில் சீமானும் காவல்துறை உயர் அதிகாரியாக க்ளைமாக்ஸில் சுபம் போட்டு முடிக்கிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE