காமதேனு விமர்சனக் குழு
readers@kamadenu.in
மகளிர் கால்பந்து அணியின் மூலம் தனது கனவை நிறைவேற்றப் போராடும் ஒரு கால்பந்து பயிற்சியாளரின் கதையே `பிகில்'
சென்னையில் குப்பத்து மக்களின் பாதுகாவலனாக இருக்கிறார் விஜய். அங்கு அவரின் நண்பர் கதிர் தனது மகளிர் கால்பந்தாட்ட அணியுடன் வருகிறார். அப்போது விஜய்யைத் தாக்க வரும் ரவுடிகளால் கதிர் தாக்கப்படுகிறார். இதனால் கதிர் தயார் செய்த மகளிர் கால்பந்தாட்ட அணி தவிக்கிறது. அப்போது அந்த அணிக்கு பயிற்சியாளராகிறார் விஜய். இத்தனை நாள் ரவுடியாக இருந்தவரை எப்படி பயிற்சியாளராக ஏற்றுக் கொள்வது என வீராங்கனைகள் தயங்குகிறார்கள். இதனால் வரும் பிரச்சினைகளை சமாளித்தாரா, யார் அந்த விஜய், அவரது பின்புலம் என்ன, அவரது கனவு ஏன் நிறைவேறாமல் போனது, அவரது அப்பா ராயப்பன் என்ன ஆனார், வீராங்கனைகள் கால்பந்தாட்டத்தில் ஜெயித்தார்களா என்பதுதான் திரைக்கதை.
ராயப்பன், மைக்கேல் என்று இரட்டை வேடங்களில் விஜய் நடித்துள்ளார். கழுத்தில் சிலுவை, நெற்றியில் குங்குமம், காவி வேட்டி, கலர் சட்டை என்று 60 வயதை நெருங்கும் கேங்ஸ்டர் ராயப்பன் கதாபாத்திரத்தில் விஜய் கொஞ்சம் பொருந்துகிறார். ஆனால், அதற்கான உடல் மொழி எதுவும் இல்லை. மகன் மைக்கேலை நினைத்துப் பெருமைப்படும் போதும், ரவுடிகளைப் பந்தாடும்போதும் கவன ஈர்ப்பை ஏற்படுத்துகிறார்.