உலகம் சுற்றும் சினிமா - 13: சாமானியனின் பெருங்கோபம்

By க.விக்னேஷ்வரன்

‘போக வழியின்றி பூனையை மறித்துப் பார் - புலியைக் காண்பாய்’ - கவிஞர் இன்குலாபின் இந்த வரிதான் எவ்வளவு ஆழமான அர்த்தம் பொதிந்தது! இழக்க ஒன்றுமே இல்லை என்ற நிலையில் இருப்பவனின் போராட்டம் எந்த வரையறைக்குள்ளும் சிக்காமல் ரவுத்திரத்தின் உச்சமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒருவனின் வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை அழுத்தமாகச் சொன்ன படம்தான் 1976-ல், வெளிவந்த ‘டாக்சி டிரைவர்’.

‘காட் ஃபாதர்-2’ படத்தில் நடித்து உலகப் புகழ் பெற்ற ராபர்ட் டி நீரோ நடிப்பில் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர், திரைத் துறை பிதாமகன் மார்ட்டின் ஸ்கார்செஸி. ‘ரேஜிங் புல்’ (1980), ‘தி கலர் ஆஃப் மணி’(1986), ’தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் கிரைஸ்ட்’ (1988) போன்ற படங்களை இயக்கிய இந்த மேதையின் படைப்புப் பட்டியலில் ‘ஷட்டர் ஐலேண்ட்’ (2010), ‘தி வுல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்’ (2013) போன்ற படங்களும் அடக்கம்.

‘டாக்சி டிரைவர்’ படத்துக்கு முன்பே டி நீரோ - ஸ்கார்செஸி கூட்டணியில் வெளிவந்த ‘மீன் ஸ்ட்ரீட்ஸ்’ (1973) படம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்நிலையில், எதிர்பார்ப்புகளுடன் வெளியான ‘டாக்சி டிரைவர்’ படமும் பெரிய அளவில் பேசப்பட்டது. காலப்போக்கில் ‘கல்ட் கிளாஸிக்’ அந்தஸ்தையும் அடைந்தது.

நியூயார்க்கின் இரவுகள்

வியாட்நாம் போருக்குப் பின்பு ராணுவத்திலிருந்து கவுரவ ஓய்வுபெற்ற ட்ராவிஸ் பிக்கிள் (ராபர்ட் டி நீரோ) நியூயார்க் நகரில் டாக்சி ஓட்டும் பணியில் சேர்கிறான். போரினால் ஏற்பட்ட மனச்சிதைவின் காரணமாகத் தூக்கமின்மையால் தவிக்கும் ட்ராவிஸ், இரவு நேரங்களிலேயே டாக்சி ஓட்டுவான். இரவு நேர நியூயார்க் நகரின் தெருக்களில் கிடக்கும் குப்பைகளையும், அச்சுறுத்தும் வகையில் உலவும் போக்கிரிகளையும், பாலியல் தொழிலாளிகளையும் காணும்போது ட்ராவிஸ் உள்ளத்தில் ஒரு வித வெறுப்பு உண்டாகும். இதுதான் என்று அறுதியிட்டுக் கூற முடியாத அந்த வெறுப்பு ஒட்டுமொத்த சமூகத்தின் மீதான வெறுப்பாக மாறும். ஒட்டுமொத்த நியூயார்க் நகரமும் தன்னுடன் ஒட்டாமல் தனித்து இயங்குவதாக நினைக்க ஆரம்பிக்கும் ட்ராவிஸ், நியூயார்க்கை ‘சுத்தம்’ செய்ய முடிவெடுப்பான்.

ஏற்கெனவே மனச்சிதைவுக்கு உள்ளாகியிருக்கும் அவனின் காதலும் முளையிலேயே முறிந்துவிட, ஆத்திரம் இன்னும் அதிகமாகும். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரான பேலன்டைனைக் கொன்றுவிட்டால் சமூகத்தைக் காப்பாற்றிவிடலாம் என்று முடிவெடுப்பான். அவன் அப்படிமுடிவெடுக்க குறிப்பிட்ட காரணம் எதுவுமில்லை. காரணம் வேண்டும் என்ற கட்டத்தை ட்ராவிஸ் கடந்திருப்பான். அக்கொலை முயற்சியில் தோல்வியடையும் ட்ராவிஸ், பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட 12 வயதான ஐரிஸைக் காப்பாற்றக் கிளம்புவான்.

அவனைப் பொறுத்தவரை, பேசுவதற்கு ஆளில்லாமல் கழியும் பொழுதுகள் முடிவுக்கு வர வேண்டும், தனிமையில் ஏற்படும் கழிவிரக்கத்திலிருந்து விடுதலை வேண்டும். அதற்கு மரணம்தான் வாயிற்படி என்றால் அதிலும் ஒரு சுவாரசியம் வேண்டும். ட்ராவிஸுக்கு வேண்டியது கிடைத்ததா இல்லையா என்பதுதான் படத்தின் ஆதார முடிச்சு.

பால் ஷ்ராடர் எழுதிய இக்கதையைத் தன் கைவண்ணத்தைக் குழைத்து, காலத்தைக் கடந்து நிற்கும் படைப்பாக மாற்றிய மார்ட்டின் ஸ்கார்செஸி 1963 முதல் இப்போது வரை இயங்கிக்கொண்டிருக்கும் இணையற்ற கலைஞர். ஹாலிவுட் வணிகப் பரப்புக்குள் இருந்தபடி, கேளிக்கை சினிமாக்களைக் கேள்விக்கு உட்படுத்துபவர்.

சமீபத்தில், மார்வெல் காமிக்ஸ் தயாரிப்பில் வெளியான ‘அவெஞ்சர்ஸ்’ வரிசை படங்களைப் பற்றி விமர்சித்த ஸ்கார்செஸி, “இவை அனைத்தும் திரைப்படங்களே இல்லை, சிறுவர்களுக்கான தீம் பார்க்குகள்” என்று கூறி பரபரப்பைக் கூட்டினார்.

டாக்சி டிரைவர் vs ஜோக்கர்

சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள ‘ஜோக்கர்’ படத்தைப் பற்றி சமூக வலைதளங்களில் பதிவிடும் சினிமா காதலர்கள் ‘டாக்சி டிரைவர்’ படத்தை நினைவுகூர மறப்பதில்லை. டிசி காமிக்ஸின் கற்பனை கதாபாத்திரமான ‘ஜோக்கர்’ கதாபாத்திரத்திற்கும், ட்ராவிஸ் கதாபாத்திரத்துக்கும் இடையில் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை உணர முடிகிறது. ஜோக்கராக மாறும் ஆர்தர் ஃப்லெக்கும், ட்ராவிஸ் பிக்கிளும் கடக்கும் பாதை ஒன்றே. ஜோக்கரின் பாசாங்கும், மிகைத்தன்மையும் இல்லாத அடிப்படை வடிவம்தான் ட்ராவிஸ் பிக்கிள் எனலாம்.

‘டாக்சி டிரைவர்’ படத்துக்கு ராபர்ட் டி நீரோ கொடுத்த உழைப்பும் அர்ப்பணிப்பும் அசாத்தியமானவை. கதாபாத்திரத்துக்குள் தன்னைப் பொருத்திக்கொள்ள, படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு ஒரு மாதம் முன்பே தினமும் 15 மணி நேரம் டாக்சி ஓட்டிப் பழகினாராம். அமெரிக்க மெரைன் ராணுவ வீரர்களைச் சந்தித்துப் பேசி, அவர்களின் பேச்சை டேப்பில் பதிவுசெய்துகொண்டாராம். அதை மீண்டும் மீண்டும் கேட்டு அவர்களின் பேச்சுவழக்கைப் பழகிவிட்டுத்தான் படப்பிடிப்புக்கு வந்தாராம். அந்த அர்ப்பணிப்புதான் இன்று அவருக்கு உலகப் புகழையும் கோடிக்கணக்கான ரசிகர்களையும் பெற்றுத் தந்துள்ளது.

மீண்டும் இணையும் ஆளுமைகள்மார்ட்டின் ஸ்கார்செஸி இயக்கத்தில் அல் பாசினோ, ராபர்ட் டி நீரோ, ஹார்விகெட்டில் என்ற மெகா கூட்டணியில் உருவாகியுள்ள ‘தி ஐரிஷ் மேன்’ திரைப்படம் வருகிற நவம்பர் மாதம் 1-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ளது. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கும் அனைவரும் திரைத் துறையில் அரை நூற்றாண்டு கடந்தஆளுமைகள். இவர்கள் ‘டி-ஏஜிங்’(De-Aging) எனப்படும் நவீன கிராஃபிக்ஸ்தொழில்நுட்பம் மூலமாக வயதைக் குறைத்து சற்று இளமையாகத் தோன்றவுள்ளனராம். எக்கச்சக்க எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்.

இனவெறி கும்பலிடமிருந்து, ஒடுக்கப்பட்ட மக்களைக் காப்பாற்றக் களமிறங்கிய ஒரு சாமானியனின் கதையைச் சொல்லும் படத்தைப் பற்றி அடுத்த வாரம் காண்போம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE