உலகம் சுற்றும் சினிமா - 9: வறுமையின் வட்டத்தில் ஒரு முடிவுறாப் பயணம்

By க.விக்னேஷ்வரன்

நீங்கள் எப்போதேனும் இக்கட்டான சூழ்நிலையில் அவசரமாகப் பணம் புரட்ட முயன்றிருக்கிறீர்களா? எல்லா வழிகளும் அடைக்கப்பட்டிருக்கும்போது, கடினமான, அசாத்தியமான வாய்ப்புகளைப் பயன்படுத்தி அதைச் செய்தாக வேண்டிய கட்டாயத்தில் இருந்திருக்கிறீர்களா? கையறு நிலையில் இருக்கும்போது வாழ்க்கை மீதான புரிதலும் பார்வை யும் மாறும். அச்சூழ்நிலையிலிருந்து போராடி மீண்டவர்களிடம், மனதை அறுக்கும் அனுபவக் கதைகள் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கதைதான் ‘தி சைக்ளிஸ்ட் .'

புகழ்பெற்ற ஈரானிய இயக்குநர் மோஸென் மாக்மெல்பாஃப் இயக்கத்தில், 1987 -ல் ‘பைசைக்கிள்ரான்’ என்ற பெயரில் பெர்ஷியன் மொழியில் வெளிவந்த இப்படம், உலக அரங்கில் ஈரானிய சினிமா மீதான மதிப்பைப் பன்மடங்கு உயர்த்திய முக்கியமான படைப்பு.
ஒரு சைக்கிள், ஒரு வட்டம், ஏழு நாள்ஈரானில் வாழும் ஆஃப்கன் நாட்டு அகதி நசீம். நோய் முற்றிய அவரது மனைவியை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு, மருத்துவச் செலவுக்குப் பணம் தேடி தன் பத்து வயது மகன் ஜாமியுடன் அலைகிறார். மரணக் கிணற்றில் மோட்டார் சைக்கிள் ஒட்டும் நண்பனிடம் உதவி கேட்டுப் போகிறார். அவன் மூலமாக ரேஸ் நடத்தும் இடைத்தரகர் ஒருவன் அறிமுகமாகிறார். ஆப்கானிஸ்தானில் நசீம் தொடர்ந்து மூன்று நாட்கள் சைக்கிள் ஓட்டியவர் என்பதை அறியும் இடைத்தரகர், நசீமை வைத்து ஏழு நாட்கள் தொடர்ச்சியாக ஒரே வட்டப் பாதையில் சைக்கிள் ஓட்டும் சாகச நிகழ்வை நடத்த ஏற்பாடு செய்கிறார். நசீம் ஏழு நாள் ஓட்டி முடிப்பார் என்று  சிலரும், பாதியிலேயே விழுந்து விடுவார் என்று சிலரும் பந்தயம் கட்டத் தொடங்குகிறார்கள்.

ஒவ்வொரு நாளின் முடிவிலும் நசீமின் மகன் ஜாமியிடம் அவன் அம்மாவின் அன்றைய மருத்துவச் செலவுக்கான பணத்தை இடைத்தரகர் கொடுத்து அனுப்புகிறார். இதற்கிடையே, நசீமைக் கீழே விழவைக்கவும் சதிகள் நடக்கின்றன. ஏழு நாட்கள் வரை தாக்குப்பிடித்து நசீம் சைக்கிள் ஓட்டினாரா இல்லையா என்பதே மீதிக் கதை.

இப்படத்தில் நசீம் என்னும் ஒற்றைக் கதாபாத்திரத்தின் எதிரில் ஒட்டுமொத்த அதிகார வர்க்கத்தையும் நிறுத்தி கடுமை
யாகச் சாடியிருப்பார் இயக்குநர் மோஸென் மாக்மெல்பாஃப். மருத்துவமனையில் சுவாசிக்க முடியாமல் போராடிக்
கொண்டிருப்பாள் நசீமின் மனைவி. கைக்கெட்டும் தூரத்தில் சுவாசக் கருவி இருந்தாலும், அதை அவளுக்குப் பொருத்த மருத்துவமனை ஊழியர்கள் மறுத்துவிடுவார்கள். ஜாமி வந்து பணம் கொடுத்த பின்புதான் சுவாசக் கருவி மாட்டப்படும். சில நொடிகளில் கடந்துபோகும் இந்தக் காட்சி, மனித உயிரைவிட பணமே பிரதானம் என்று வாழும் மனிதர்களின் மனசாட்சியைக்கூட உலுக்கியெடுத்துவிடும்.

வறுமையை எந்தவிதமான ஜோடனையும் இல்லாமல் சொன்ன விதமே இப்படத்தின் வெற்றிக்குக் காரணம். ஒரு காட்சியில் லாரியின் சக்கரத்தில் தற்கொலை செய்துகொள்ள முயலும் முதியவரை மீட்டு அவரை அடித்து உதைத்து, கையில் கொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்புவார்கள் சிலர். இதைப் பார்க்கும் நசீம் தானும் லாரியின் அடியில் போய்ப் படுத்துக்கொள்வார். ஆனால், அவருக்கு மிஞ்சுவது அடி உதை மட்டும்தான். பணத் தேவை ஒரு மனிதனை எந்த நிலைக்கும் தள்ளும் என்பதை உணர்த்தும் வலி மிகுந்த காட்சி இது.

போட்டியின் நான்காவது நாள் இரவு, தூக்கம் கண்களைச் சுழற்ற, கண்ணை மூடாமல் இருப்பதற்காகக் கண் இமைகளுக்கு இடையே குச்சிகளைச் சொருகிக்கொண்டு நசீம் சைக்கிள் ஓட்டும் காட்சி நம் மனதை விட்டு அகலப் பல நாட்களாகும். ஏழாவது நாள் இரவு தூக்கத்தில் அவர் கீழே விழப்போக, அவர் மகன் ஜாமி அப்பாவின் கன்னத்தில் மாறி மாறி அடிப்பான். சிறிது அடித்துவிட்டு கன்னத்தில் முத்தம் கொடுப்பான். மீண்டும் அடி, மீண்டும் முத்தம்... தாய்க்காக மகனும் தகப்பனும் போராடும் அக்காட்சிதான் இப்படத்தின் மையப்புள்ளி.

ஏழாவது நாள் முடிந்ததும் போட்டி நிறைவு பெற்றதாக அறிவிப்பார்கள். ஆனால், நசீமின் சைக்கிள் நிற்காது. அவருடைய சைக்கிளின் சக்கரங்கள் காலச்சக்கரம் போல் சுழன்றுகொண்டேயிருக்கும். அன்றைய நாளுக்கும் அவரின் மனைவிக்கு மருத்துவச் செலவு இருக்கிறதல்லவா!

இப்படத்தின் இன்னொரு சிறப்பம்சம் மஜித் என்டஸமியின் பின்னணி இசை. படம் முழுவதும், காட்சிக்கு வலுசேர்க்கும் விதமாகவும் மனதை உருக்கும் விதமாகவும் அமைக்கப்பட்டிருக்கும்.

மரண தண்டனையிலிருந்து தப்பியவர்

இப்படத்தின் இயக்குநர் மோஸென் மாக்மெல்பாஃப், தனது 15-வது வயதில் ஈரான் மன்னர் முகம்மது ரஜா பஹ்லவியின் ஆட்சிக்கு எதிரான புரட்சியில் ஈடுபட்டவர். ஒரு போலீஸ்காரரை நெஞ்சில் கத்தியால் குத்திய குற்றத்திற்காக 17 வயதில் கைதுசெய்யப்பட்டார். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 5 வருடங்கள் கழித்து ஈரானியப் புரட்சியின் வெற்றிக்குப் பின் விடுதலையானார்.
‘புதிய அலை' ஈரானிய சினிமாவின் மிக முக்கியமான இயக்குநரான இவர் இயக்கிய ‘தி சைலன்ஸ்' (1998), ‘கந்தஹார்' (2001), ‘தி பிரசிடென்ட்' (2014) போன்ற திரைப்படங்களும், ‘தி ஆப்கன் ஆல்பபெட்’(2001), ‘தி கார்டனர்’(2012), ‘தி எண்ட்லெஸ் ஸ்மைல்’ (2013) போன்ற ஆவணப் படங்களும் ஈரானிய அரசின் அக்கிரமங்களையும், அந்நாட்டு மக்களின் அவல நிலையையும் பகிரங்கமாக உலகுக்கு வெளிக்காட்டின. சர்வதேச அளவில் மிகவும் மதிக்கப்படும் இவர், தற்போது ஒரு சினிமா கல்லூரியை நடத்திவருகிறார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE