உலகம் சுற்றும் சினிமா - 8: சுயத்தை மீட்டெடுக்க ஒரு பயணம்

By க.விக்னேஷ்வரன்

‘தங்கள் வாழ்க்கையில் பயணங்களை மேற்கொள்ளாதவர்கள், உலகம் எனும் பெரும் புத்தகத்தின் ஒரே ஒரு பக்கத்தை மட்டுமே படித்த துரதிருஷ்டசாலிகள்’ என்பது புனித அகஸ்டினின் வாக்கு. பயணங்கள் நம் அறிவையும் உள்ளத்தின் விசாலத்தையும் விரிவுபடுத்தத் தவறுவதே இல்லை. புற விஷயங்களைவிட அகம் சார்ந்த மாற்றங்களைத் தருவதில் பயணங்கள் போல் சிறந்த ஆசான் வேறேதும் இல்லை. அப்படிப்பட்ட ஓர் எளிமையான, உணர்வுகளால் நகர்த்திச் செல்லப்படும் பயணம் ஒன்றினை விவரிக்கும் திரைப்படம் ‘சென்ட்ரல் ஸ்டேஷன்.’

1998-ல் பிரேசில், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டுத் தயாரிப்பில், போர்த்துக்கீசிய மொழியில் ‘சென்ட்ரல் டு பிரேசில்’ என்ற பெயரில் வெளிவந்த இத்திரைப்படம் ஆங்கிலத்தில் ‘சென்ட்ரல் ஸ்டேஷன்' ஆனது. இப்படத்தின் இயக்குநர், ‘கன்ஸ் அண்ட் பீஸ்’(2003), ‘மோட்டார் சைக்கிள் டைரீஸ்'(2004), ‘ஆன் தி ரோட்’(2012) போன்ற புகழ்பெற்ற படங்களை இயக்கிய வால்டர் சால்ஸ். பிரேசிலைச் சேர்ந்த இவர், லத்தீன்-அமெரிக்க சினிமாவின் மிக முக்கியமான இயக்குநர்.

தேடல், பயணம், பிரிவு

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகர ரயில் நிலையத்தில், கல்வியறிவில்லாத வாடிக்கையாளர்களுக்குக் கடிதம் எழுதித் தரும் வேலை பார்ப்பவள் டோரா. ஓய்வுபெற்ற ஆசிரியையான டோரா, பண விஷயத்தில் கறாரான பேர்வழி. கணவன், குழந்தை என்ற எந்த உறவும் இல்லாத ஒற்றை ஜீவன். சிடுமூஞ்சி. சுயநலம் கொண்டவள். இப்படிப்பட்ட டோராவிடம், கடிதம் எழுதித் தரச் சொல்லி தன் 9 வயது மகன் ஜோஸ்வேவைக் கூட்டிக்கொண்டு வருவாள் அனா. பிறந்ததிலிருந்து குடிகாரத் தந்தையைப் பார்த்திராத ஜோஸ்வே, தற்போது அவரைப் பார்க்க வேண்டும் என்று அடம் பிடிப்பதால், டோராவிடம் தன் கணவனுக்குக் கடிதம் எழுதச் சொல்லிக் கேட்பாள். கடிதம் எழுதி முடித்ததும் ரயில் நிலையத்தைவிட்டு வெளியே செல்லும் அனா, சாலை விபத்தில் இறந்துவிடுவாள். அனாதையாகி நிற்கும் சிறுவன் ஜோஸ்வேயை ஆரம்பத்தில் பாராமுகமாக நடத்தும் டோரா, சின்ன மனமாற்றத்திற்குப் பிறகு அவனைக் கூட்டிக்கொண்டு அவனின் தந்தையைத் தேடிப் பயணப்படுவாள்.

இறுதியில் அவர்கள் பயணம் வெற்றி கண்டதா இல்லையா என்பதே மீதிக் கதை.

இந்தப் பயணத்தில், டோரா தன் சுயத்தை நோக்கி உள்ளார்ந்து எழும் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் தவிப்பை மிக நுட்பமாகப் பதிவுசெய்திருப்பார் இயக்குநர் வால்டர் சால்ஸ். நம்மை டோராவின் இடத்தில் எளிதாகப் பொருத்திப் பார்த்துக்கொள்ள முடியும். ஏனென்றால் அவளின் மனநிலைதான் பொதுவான மனித மனத்தின் அப்பட்டமான நிலை. ஜோஸ்வேயை ஒரு சுமையாகவே கருதும் டோரா, ஒருகட்டத்தில், எங்கே ஜோஸ்வே வளர்ந்ததும் தன்னை மறந்துவிடுவானோ என்று கவலைகொள்ளும் அந்தத் தருணம்... கவிதை!

பயணத்தின்போது இவர்கள் சந்திக்கும் லாரி ஒட்டுநரின் கதாபாத்திரமும் அவ்வளவு ஆழமாக வடிவமைக்கப்பட்டிருக்கும். அவரின் குடும்பத்தைப் பற்றி ஜோஸ்வே கேட்கும்போது, “நான் லாரியில்தான் வாழ்கிறேன், சாலைதான் என் மனைவி” என்பார் வெகு இயல்பாக. லாரி ஓட்டுநரின் நடவடிக்கைகளால் ஈர்க்கப்படும் டோரா அவரைக் காதலுடன் அணுக, அவரோ இருவரையும் அங்கேயே விட்டுவிட்டு, பயணத்தைத் தொடர்வார். வாழ்வின் நிலையின்மையின் மீது ‘நிலையான’ நம்பிக்கை கொண்டிருக்கும் மனிதர்களை லாரி ஓட்டுநர் பாத்திரம் மூலம் நேர்த்தியாகச் சித்தரித்திருப்பார் வால்டர் சால்ஸ்.
‘தி கிரேட் லேடி ஆஃப் பிரேசிலியன் சினிமா' என்றழைக்கப்படும் ஃபெர்ணான்டா மான்டெநெக்ரோ, டோரா கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார். ஜோஸ்வே வேடத்தில் நடித்த வினிசியுஸ் டி ஓலிவெய்ரா உலகரங்கில் பிரேசில் சிறுவர்களுக்கான முகமாகிப் போனார். இவர்கள் இருவருக்கும் இடையில் உள்ள முரண்கள் கலந்த பாசப்பிணைப்பே படத்தின் மைய ஊற்று. இவர்களுக்கிடையே இருக்கும் வாஞ்சையின் ஈரம், படத்தின் இறுதியில் நம் கண்களை நனைத்துவிடும்.

அள்ளிக் குவித்த அவார்டுகள்

சர்வதேச அளவில் இத்திரைப்படம் இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றது. அதில் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான ‘கோல்டன் குளோப்’ விருதும் அடக்கம்.

அத்துடன் 7 பரிந்துரைகளையும் இப்படம் பெற்றது - சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான ஆஸ்கர் பரிந்துரை, சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் பரிந்துரை உட்பட!

ஒவ்வொரு நாளும் மரணத்தை நோக்கி நகரும் இவ்வாழ்வு, சக மனிதனுக்காக நாம் சிந்தும் ஒரு துளி கண்ணீரில்தான் அர்த்தம் பெறுகிறது என்பதை சில கதாபாத்திரங்களைக் கொண்டு, ஒரு மழை நேரக் கவிதை போல் உருவாக்கப்பட்ட படம் இது.
தன் சுயத்தை மீட்டெடுத்த பெண்ணின் கதையைப் பற்றிப் பார்த்தோம், தன் மனைவிக்காக சைக்கிளில் ஏழு நாட்கள் தொடர்ந்து பயணித்த ஆப்கன் அகதியின் கதையை அடுத்த வாரம் பார்ப்போம்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE