உலகம் சுற்றும் சினிமா - 2: ஒரு தாயின் காதல் கதை 

By க.விக்னேஷ்வரன்

ஒரு பெண் தன் மனதுக்கு விருப்பமான மனிதரைத் திருமணம் செய்துகொள்ள இன்றைய சமூகத்தில்கூட பல முட்டுக்கட்டைகள் இருப்பதைப் பார்க்கிறோம். அதுவும் மறுமணம் என்றால் அதில் பலரது குறுக்கீடுகளும் தடைகளும் இருக்கும். அமெரிக்கா போன்ற நாடுகளில் நிலவரம் அப்படி அல்ல. எனினும், 1950-களில் அமெரிக்காவின் குடும்ப அமைப்பில், கணவர், குழந்தைகள் என்று குடும்பத்தினரைச் சார்ந்தே இருக்கும் சூழலில்தான் பெண்கள் இருந்தார்கள் (விவாகரத்து போன்ற விஷயங்கள் 1960-களுக்குப் பின்னர்தான் அதிகரித்தன). அப்படியான ஒரு காலகட்டத்தில் நடக்கும் கதை இது.

ஜெர்மனி இயக்குநர்

நடுத்தர வயது பணக்கார விதவை, ஒரு இளைஞனைக் காதலிக்கிறாள். அதில் ஏற்படும் சிக்கல்கள் என்று நீளும் கதையுடன் வந்த படம் ‘ஆல் தட் ஹெவன் அலோவ்ஸ்’ (All That Heaven Allows). 1955-ல் வந்த இந்தப் படத்தை, டக்ளஸ் சிர்க் இயக்கியிருந்தார்.

ஜெர்மனிக்காரரான சிர்க், அமெரிக்காவுக்கு வருவதற்கு முன்னர் ஜெர்மனியில் மேடை நாடகங்களையும் சில திரைப்படங்களையும் இயக்கியவர். 1930-களில் ஜெர்மனியில் இருந்த கொந்தளிப்பான சூழலை வெறுத்து (அவரது மனைவி ஒரு யூதர்!) அமெரிக்காவுக்கு வந்தவர். பெண் மையப் பாத்திரங்கள் கொண்ட படங்களாகத் தொடர்ந்து இயக்கிவந்த டக்ளஸை அப்போதைய ஹாலிவுட் விமர்சகர்கள் பொருட்படுத்தவில்லை. வெறுமனே மெலோடிராமா படம் எடுப்பவர் என்றுதான் அவரைப் பார்த்தார்கள். ஆனால், அவரது காலத்துக்குப் பின்னர்தான் அவரது அருமை உணரப்பட்டது. டாட் ஹெயின்ஸ் முதல் குவென்டின் டாரன்டினோ வரை பலரும் அவரது படங்களின் காவியத் தன்மையைக் கொண்டாடுகிறார்கள்.

கதை என்ன?

அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியில் வசிக்கும் மேல் தட்டு சமூகத்தைச் சேர்ந்தவள் கேரி ஸ்காட். அவள் வாழும் பகட்டான சமூகத்துடன் கலக்க முடியாமல் அவதிப்பட்டு வாழ்பவள். வயது வந்த மகனும் மகளும் உண்டு. அவர்களும் சுயநலமே பிரதானம் என்று வாழ்பவர்கள். இப்படியான சூழலில், தனது வீட்டருகே உள்ள மரங்களைப் பராமரிக்க வரும் தோட்டக்கலை வல்லுநரான ரான் கிர்பி எனும் இளைஞனின் பாந்தமான குணங்களால் கவரப்படுகிறாள் கேரி. முதல் சந்திப்பிலேயே அவன் மீது ஓர் இனம்புரியாத ஈர்ப்பு அவளிடம் ஏற்பட்டுவிடுகிறது. ஏற்கெனவே, வேறு சில பணக்கார ஆண்கள் அவளை அணுகியிருந்தாலும், அவள் மனம் ரானையே சுற்றிவருகிறது. ரானும் அவளைக் காதலிக்கத் தொடங்குகிறான்.

இருவரும் இணைவதற்குத் தடையாக இருப்பது, கேரியின் பிள்ளைகள். தங்கள் தாய் ஒருவனைக் காதலிக்கிறாள் என்பதைவிடவும், அந்த நபர் எளிய பின்னணி கொண்ட மனிதன் என்பதால்தான் அதைக் கடுமையாக எதிர்க்கிறார்கள். பகட்டான மேல் தட்டு சமூகத்து கிளப் நண்பர்களும் அவர்களுடைய காதலைப் பரிகசிக்கவே, ரானைவிட்டு வேறு வழியின்றி விலகிவிடுகிறார்கள். ஒருகட்டத்தில் பிள்ளைகளும் தங்களுக்கான வாழ்க்கையை வாழ வீட்டை விட்டு வெளியேற, தனித்து விடப்படும் கேரி, தனது இளம் காதலன் ரானைக் கரம் பிடிக்கிறாளா என்பதுதான் கதை.

அற்புதத் தருணங்கள்

படத்தின் தொடக்க காட்சியிலேயே கதை நடக்கும் சூழலையும், பிரதானக் கதாபாத்திரங்களையும் மனதை வருடும் இசையின் துணையுடன் ஆர்ப்பாட்டம் இல்லாமல் சொல்லியிருப்பார் சிர்க்.

எளிய வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்கும் ரானுடன் வாழ்வதுதான், போலி வாழ்க்கையிலிருந்து தன்னை மீட்டெடுக்கும் ஒரே வழி என்று நினைப்பாள் கேரி. ஆனால், பொருளாதார அந்தஸ்தை வைத்து எடைபோடும் அவளது சமூகப் பின்னணி அதற்கு முட்டுக்கட்டையாக நிற்கும். கதையின் போக்கில் இவை அனைத்தையும் இயல்பாகச் சித்தரித்திருப்பார் சிர்க். எளிமையான தனது வீட்டுக்குக் கேரியை அழைத்துச் சென்று, தனது காதலை ரான் வெளிப்படுத்த, அதை ஏற்பதா, மறுப்பதா என்று கேரி தயங்கி நிற்கும் காட்சி படத்தின் அற்புதமான தருணங்களில் ஒன்று.

“ஒரு தோட்டக்காரனையா திருமணம் செய்யப்போகிறாய்?” என்று கேட்கும் தோழியிடம், “அவன் என் தோட்டக்காரன் அல்ல. அங்கிருக்கும் மரங்களைத் தற்காலிகமாகப் பராமரிக்க வந்தவன். அப்படியே அவன் தோட்டக்காரன் என்று வைத்துக்கொண்டாலும், அவன் என் காதலன்” என்று சொல்லும் காட்சியில் கேரியாக நடித்திருக்கும் ஜேன் வைமன் மிக இயல்பாக ஆத்மார்த்தமாக நடித்திருப்பார். “இந்த உறவு எனக்கு எத்தனை முக்கியமானது என்று புரிந்துகொள்ளுங்கள்” என்று மகனிடமும் மகளிடமும் அவள் கேட்கும் காட்சியும் சிறப்பானது. ரானாக வரும் ராக் ஹட்ஸன்,  கேரியின் நலம் விரும்பியாக வரும் டாக்டர் டேன் பாத்திரத்தில் நடித்த ஹெய்டன் ரூர்க் என்று அத்தனை பேரும் மிகச் சிறப்பாக நடித்திருப்பார்கள். ஃப்ராங்க் ஸ்கின்னரின் பின்னணி இசையும் படத்தின் ப்ளஸ்களில் ஒன்று.

2002-ல் டாட் ஹெயின்ஸ் இயக்கத்தில் வெளியான,  ‘ஃபார் ஃப்ரம் ஹெவன்'  இந்தப் படத்தைத் தழுவி எடுக்கப்பட்டதுதான். 1974-ல் வெளியான   ‘அலி : ஃபியர் ஈட்ஸ் தி சோல்' எனும் ஜெர்மன் மொழிப் படத்திலும் இந்தப் படத்தின் பாதிப்பை உணரலாம்.

காதல் என்பது உருவம், வயது, அந்தஸ்து என்று எதிலும் அடைத்துவிட முடியாது. அது கட்டற்றது என்பதை உரக்கச் சொல்லும் படம் இது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE