கபடியே உயிர்மூச்சாக நினைத்து வாழும் பசுபதி, தன் மகனுக்காக அதை தியாகம் செய்துவிட்டு சராசரி ஆகிறார். அப்பாவைப் புரிந்துகொள்ளாத மகனான விக்ராந்துக்கு தன் தந்தை தனக்காக செய்த தியாகம் தெரியவர, அவர் மீது மரியாதை பிறக்கிறது. இதைத் தொடர்ந்து தந்தையின் லட்சியத்தை நிறைவேற்ற விக்ராந்த் கபடி ஆட புறப்படுவதுதான் படத்தின் கதைக்கரு.
முதல் பாகத்தை இயக்கிய சுசீந்திரன், 2-ம் பாகத்தின் மூலக் கதையை மட்டும் எழுதியிருக்கிறார். முதல் பாகத்தில் கபடி வீரர்களாக நடித்த சூரி, அப்புக்குட்டி, பயிற்சியாளர் கிஷோர் உள்ளிட்டோர் இந்தப் படத்திலும் அதே கதாபாத்திரங்களில் வருகிறார்கள். முதல் பாதியில் கொஞ்சம் சினிமாத்தனம் தூக்கலாக இருக்கிறது. பிற்பகுதியில் செலுத்திய கவனத்தை முன்பகுதியிலும் செலுத்தியிருக்கலாம்.
இரண்டாம் பாதியில் சென்னைக்குச் செல்வதாகக் குடும்பத்திடமிருந்து விடைபெற்றுச் செல்லும் நாயகன் ‘வெண்ணிலா கபடி குழு’ செயல்பட்டு வந்த ஊருக்கு வரும்போது கொஞ்சம் நிமிர்ந்து உட்கார முடிகிறது. பிரிந்து கிடக்கும் ‘வெண்ணிலா கபடி குழு’ வீரர்கள் மீண்டும் கபடி விளையாட நேரும் சூழலும் அந்த அணிக்குள் விக்ராந்த் சேர்ந்து கொள்வதும் நம்பகத்தன்மையுடன் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.
அதற்குப் பிறகு கபடிப் பயிற்சி, ஊர்த் திருவிழாப் பாடல், இடையிடையே நகைச்சுவைக் காட்சிகள் என்று பழகிய பாதையிலேயே திரைக்கதை பயணிக்கிறது. கபடி விளை யாடுவதிலும் போட்டியில் வெல்வதிலும் நாயகனுக்கு ஏற்படும் தடங்கல்கள் வலிந்து திணிக்கப்பட்டவையாக இருக்கின்றன.