வங்கி ஒன்றில் புகுந்து பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு செக்யூரிட்டிகளையும் கொன்றுவிட்டுத் தப்பிச் செல்கிறது ஒருகும்பல். இவர்கள் ஒளிந்திருக்கும் ஏரியாவுக்குள் சுட்டுப்பிடிக்கும் உத்தரவோடு நுழைகிறது போலீஸ். காக்கிகளின் துப்பாக்கித் தோட்டாக்கள் அவர்களைத் துளைத்ததா இல்லையா என்னும் கதை, இன்னொரு கிளைக்கதையோடு பயணிப்பதே படத்தின் ஒருவரிக்கதை.
ஆரம்பமே வங்கிக் கொள்ளை, சேஸிங் எனத் தொடங்கிவிடும் பரபரப்பைப் படத்தின்பெரும்பகுதிக்குத் தக்கவைக்கும் வகையில் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா. கொள்ளையர்கள் குடியிருப்புப் பகுதியில் புகுந்தபின் காவல்துறையின் அலட்சியப் போக்கு, செய்தி சேனல்களின் டி.ஆர்.பி வெறி ஆகியவற்றை வைத்து காமெடி செய்ய முயன்றிருக்கிறார்கள்.
கடைசி 20 நிமிடங்களில் நடக்கும் ட்விஸ்ட்தான் படத்தின் ஆகப் பெரிய பலம். அதுவரை நடந்தவை குறித்து ரசிகர்களுக்கு ஏற்படும் எண்ணத்தை அப்படியே புரட்டிப் போடுகிறது அந்தத் திருப்பம். அதோடு க்ளைமாக்ஸ் பற்றிய கணிப்புகளும் தவறாகின்றன. அங்குதான் இயக்குநரின் புத்திசாலித்தனம் பளிச்சிடுகிறது.
ஆனால் இந்தக் காட்சிகளுக்கு இட்டுச்செல்லும் பயணத்தில் பல சினிமாத்தனத்தையும் லாஜிக் மீறல்களையும் சிரிப்புவராத நகைச்சுவைகளையும் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. தீவிரவாதிகளும் அவர்களது சதித்திட்டமும் கையாளப்பட்ட விதம் இன்னொரு பெரிய பலவீனம். காவல்துறையினரை கேலிப் பொருளாகப் பார்க்கும் மனோபாவம் அதிகரித்து வருகையில் அவர்களது உழைப்பையும் தியாகத்தையும் கவுரவப்படுத்தும் விதமாக கதையை அமைத்ததற்காக இயக்குநரைப் பாராட்டலாம்.